என்ன பைக் வாங்குகிறோம் என்பதை விட, எத்தனை சிசி திறன் கொண்ட பைக் வாங்குகிறோம் என்கிற மனநிலைக்கு இன்றைய இளைஞர்கள் மனநிலை இருக்கிறது. சிசி கூட கூட மைலேஜ் குறையும் என்பார்கள். காரணம், இன்ஜினின் இழுவைத் திறன். அப்படியே சிசி அதிகரித்தாலும், வாகன விற்பனையாளர் குறிப்பிடும் அளவு மைலேஜ் கிடைக்க வேண்டும். ஆனால், பலருக்கு அது கிடைப்பதில்லை. ‛அது எங்க கொடுக்குது... நான் தான் கொடுக்கிறேன்...’ என வடிவேலு பாணியில் டயலாக் பேசி, பெட்ரோலை ஊற்றிச் செல்ல வேண்டிய நிலை தான் இருக்கிறது. ஆனால், மைலேஜ் கிடைக்க சில வழிமுறைகளை இருச்சக்கர வாகன பராமரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதோ அவற்றை உங்களுக்காக வழங்குகிறோம்.
மைலேஜ் தர கவனிக்கூடியதாக 6 விசயங்களை கூறுகின்றனர்.
1.இன்ஜின் ஆயில்
2.டயர்
3.மிதவேகம்
4.கார்புரேட்டர்
5.பிரேக்
6.டாப் கியர்
இந்த 6 விவகாரங்களில் தான் உங்கள் பைக் மைலேஜ் கூடுவதும் குறைவதும் இருப்பதாக கூறுகின்றனர். அதில் முதலில் வரும் இன்ஜின் ஆயில் பணி என்ன? பார்க்கலாம்...
இன்ஜின் ஆயில்
இன்ஜின் ஆயில் மாற்றுவதில் நாம் பெரிய அளவில் சுனக்கம் காட்டுவோம். அதற்கு காரணம், நாளை... நாளை என நாம் தள்ளிப்போடுவதும், இதனால் என்ன ஆகப் போகிறது என்கிற அலட்சியமும் தான் காரணம். அதே போல் தான், விலை குறைவு என்பதற்காக தரமற்ற இன்ஜின் ஆயிலை பயன்படுத்துவதும். அவ்வாறு பயன்படுத்தும் போது, அது இன்ஜின் இயக்கத்தை கடுமையாக பாதித்து, மைலேஜ் குறையவும் காரணமாகும். வாகனத்தை நாம் ஒட்டும் நேரம் தான், இன்ஜின் ஆயில் செயல்படும் என நினைப்பதும் தவறான எண்ணம். வாகனம் இயக்கப்பட்டாலும், இயங்காவிட்டாலும் இன்ஜின் ஆயிலுக்கு ஒரு காலம் இருக்கிறது. அதை கடக்கும் போது, அது அதன் தன்மையை இழந்துவிடும். எனவே இன்ஜின் ஆயில் விவகாரத்தில் கவனமாக இருந்தால், மைலேஜ் கட்டுக்குள் இருக்கும்.
டயர்
டயர் பயன்பாடு, வாகனத்திற்கு முக முக்கியமானது. டயரில் உள்ள காற்றின் அளவை நாம் முறையாக கவனிப்பதில்லை. என்றாவது செக் செய்வது, எப்போதாவது நிரப்புவது என அதை பொருட்படுத்துவதே இல்லை. இதனால் டயரின் கற்றழுத்தம் நிலையற்ற தன்மையில் இருக்கும். இது மைலேஜ் அடி வாங்க பெரிய காரணமாகும். டயரை பொறுத்தவரை மிகக்குறைந்த காற்று இருப்பதும் தவறு; அதிக அளவில் காற்று இருப்பதும் தவறு. நீங்கள் உபயோகிக்கும் டயருக்கு என்ன அளவில் காற்று தேவையோ, அதே அளவிற்கு காற்று நிரப்பிக் கொள்ளுங்கள். குறைந்தத. 3 நாட்களுக்கு ஒரு முறையாவது செக் செய்து கொள்ளுங்கள். அது சக்கரத்தை சீராக இயங்க வைத்து, இன்ஜினின் கடினத்தை குறைக்கும். இதனால் மைலேஜ் அதிகரிக்கும்.
மிதவேகம்
பைக் ஓட்டுபவர்கள் மிக அவசியம் கவனிக்க வேண்டிய விசயம் இது. மைலேஜ் தீர்மானிப்பதில் வேகம் மிக முக்கியமானது. வேகம் அதிகரிக்க அதிகரிக்க இழுவை திறன் அதிகரிக்கும். அப்போது, எரிபொருள் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் மைலேஜ் செம அடி வாங்கும். மித வேகம் மிக நன்று என்பது உயிருக்கு எப்படி நன்மை பயக்குமோ, அதே போல தான் வாகன மைலேஜிற்கும் நலன் பயக்கும். மைலேஜ் பெறுவதற்கான வேகம் 60 கி.மீ., தான். 40 கி.மீ., முதல் 60 கி.மீ., வரையிலான வேகத்தில் பயணித்தால் உங்கள் வாகனம் நல்ல மைலேஜ் கிடைக்கும். இந்த இடத்தில் நீங்கள் சமரசம் செய்து கொண்டால், மைலேஜ் விசயத்திலும் சமரசம் செய்து கொண்டே ஆக வேண்டும்.
கார்புரேட்டர்
மனித உடலுக்கு நுரையீரல் போன்றது வாகனத்திற்கு கார்புரேட்டர். இன்ஜினுக்கு தேவைப்படும் எரிபொருள் மற்றும் காற்றை கொண்டு செல்வதால் கார்புரேட்டரை நாம் அடிக்கடி கவனிக்க வேண்டும். அதில் காற்று மற்றம் எரிபொருள் கொண்டுசெல்ல ஒரு ஸ்க்ரூவும், இன்ஜின் ஐடில் ஆர்பிஎம்.,க்கு ஒரு ஸ்க்ரூ இருக்கும். அதில் காற்று மற்றும் எரிபொருள் கொண்டு செல்ல பயன்படும் ஸ்க்ரூவில், அதிக காற்று, குறைவான எரிபொருள் என்கிற முறையில் செட் செய்தால், நல்ல மைலேஜ் கிடைக்கும். ஆனால் இந்த முறையில் ஒரு சவுகரியம் ஏற்படும். பிக்அப் என்று கூறப்படும் பெர்பாமன்ஸ் செயல்பாடு கொஞ்சம் குறைவாக மாறும். ஆனால், மைலேஜ் கிடைக்கும்.
பிரேக்
பிரேக் பிடிப்பதில் இளைஞர்கள் பலர் தங்கள் வாகன எரிபொருளை வீணடித்து வருகின்றனர். விக் விக் என்று பைக்கில் ஸ்கிட் அடித்துச் செல்லும் போது, பிரேக் அடிக்கடி பிடிக்கத் தோன்றும், இன்னும் பலர் அக்சிலேட்டருடன் பிரேக்கை பிடித்துக் கொண்டே பைக் ஓட்டுவார்கள். இவ்வாறு செய்வதால் எரிபொருள் அதிகம் செலவாகும். பொதுவாகவே பிரேக், இன்ஜின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும், அப்போது எரிபொருள் செலவு தவிர்க்க முடியாதது. முன்பு கூறியது போல மிதவேகத்தில் செல்லும் போது பிரேக் பயன்பாடும் குறைவாக இருக்கும். மைலேஜ் அதிகமாகவும் கிடைக்கும்.
டாப் கியர்
டாப் கியர் என்பது, வாகனத்தின் உச்சப்பட்ச கியர். அதை பயன்படுத்தும் போது இன்ஜின் செயல்பாடு லெகுவாகும். டாப் கியரை தவிர மற்ற கியர்களை பயன்படுத்தும் போது, வாகனம் இழுவை திறன் அதிகரிப்பதை நம்மால் யூகிக்க முடியும். அப்போதே உங்கள் எரிபொருள் வீணாகிறது என்று அர்த்தம். டாப் கியர் என்றால் வேகம் தான் என்றில்லை; குறைவான வேகத்திலும் டாப் கியர் இயங்கும். அது நம் இயக்கும் திறவை பொருத்தது. எனவே வாகனத்தில் டாப் கியரை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தலாம்.
இந்த 6 விசயங்களில் முழு கவனம் செலுத்தினால், ‛அதுக்கு நாம கொடுக்க வேண்டியதில்லை... நமக்கு அது கொடுக்கும்...’. எனவே மைலேஜ் கிடைக்க இதை முயற்சித்துப் பாருங்கள்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI