Vinfast VF6 VF7 Car Prebooking: தூத்துக்குடியில் அசெம்பிளி செய்யப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின், VF6 மற்றும் VF7 ஆகிய கார் மாடல்களை முன்பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் கிழே வழங்கப்பட்டுள்ளன.
வின்ஃபாஸ்ட் கார்களுக்கான முன்பதிவு தொடக்கம்:
தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு, கடந்த ஆண்டு தொடக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து உற்பத்தி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அங்கு அசெம்ப்ளி செய்யப்படும் கார் மாடல்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி, முன்பதிவு செய்யப்படும் கார்களின் விநியோகம் வரும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF6 மற்றும் VF7 ஆகிய கார் மாடல்களை ஆன் - லைனில் முன்பதிவு செய்வது எப்படி? டெபாசிட் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும், என்னென்ன வேரியண்ட்கள் கிடைக்கும் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
VF6, VF7 கார் முன்பதிவு - 5 வேரியண்ட்கள், 6 வேரியண்ட்கள்:
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதலாவதாக, VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு கார் மாடல்களை அறிமுகப்படுத்த முடிவு செய்து, அவற்றிற்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. அதன்படி, VF6 காரானது எர்த் மற்றும் விண்ட் என்ற இரண்டு வேரியண்ட்களிலும், VF7 கார் மாடலானது எர்த், விண்ட் மற்றும் ஸ்கை என மூன்று வேரியண்ட்களிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் ஜெட் பிளாக், டிசாட் சில்வர், இன்ஃபினிட்டி பிளாக், க்ரிம்சன் ரெட், ஜெனித் கிரே மற்றும் அர்பன் மிண்ட் எனும் 6 வெளிப்புற வண்ண விருப்பங்களும், உட்புறத்தில் கருப்பு மற்றும் பொக்கா பிரவுன் உள்ளிட்ட வண்ண விருப்பங்களிலும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோக காரை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் டெபாசிட் தொகையாக 21 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
VF6, VF7 கார்களை முன்பதிவு செய்வது எப்படி?
காரை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் முதலில் நிறுவனத்தின் https://vinfastauto.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும். தொடர்ந்து,
- திரையில் தோன்றும் Pre-Book Now என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்
- VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு கார்களில் ஏதேனும் ஒரு காரை தேர்வு செய்யுங்கள்
- தற்போது காரில் கிடைக்கும் வேரியண்ட்கள், வெளிப்புற மற்றும் உட்புற வண்ணங்கள் தொடர்பான விருப்பங்கள் திரையின் பக்கவாட்டில் தோன்றும்
- அதில் உங்களுக்கு தேவையான அம்சங்களை கிளிக் செய்து உங்களுக்கான காரை கஸ்டமைஸ் செய்து கொள்ளுங்கள்
- காருக்கான விவரங்களை தேர்வு செய்தது பயனாளரின் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டிய பக்கம் இணையத்தில் தோன்றும்
- தற்போது உங்களது பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட தொடர்புக்கான விவரங்கள், எப்படி விநியோகப்பது என்பதற்கான எதிர்பார்ப்புகள் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
- இதையடுத்து முன்பதிவை உறுதி செய்வதற்கான டெபாசிட் தொகையை ஆன் - லைனிலேயே செலுத்துங்கள்
- இறுதியாக ப்ரீ-புக்கிங் ஒப்பந்தத்தை கிளிக் செய்து ஒப்புதல் அளியுங்கள்
- அதன் தொடர்ச்சியாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடமிருந்து முன்பதிவு நிறைவுற்றதற்கான இமெயில் உங்களை வந்தடையும்
- இதையடுத்து உங்களது கார் விநியோகம் எப்போது தொடங்கும் என்பதை அறிய வின்ஃபாஸ்ட் நிறுவனம் அவ்வப்போது வெளியிடும் தகவல்களை ஆராயுங்கள்
வின்ஃபாஸ்ட் உட்கட்டமைப்பில் தீவிரம்:
காரை விநியோகிப்பதற்காக தற்போது வரை வின்ஃபாஸ்ட் நிறுவனம் 27 பிரதான நகரங்களில்13 டீலர்கள் வாயிலாக 32 ஷோரூம்களை அமைத்துள்ளது. இதன் மூலம் முக்கியமான நகர்ப்பகுதிகள் மற்றும் மின்சார வாகன சந்தைகளுக்கு உகந்த பகுதிகளில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் மேலும் மூன்று விற்பனை நிலையங்களை திறந்து, 35 என்ற எண்ணிக்கையை எட்ட நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட, இந்த இரண்டு மின்சார எஸ்யுவிக்களையும் விளம்பரப்படுத்தும் நோக்கில் 11 நகரங்களில் சாலை மார்க்கமாகவே வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஓட்டிச் சென்று கவனம் ஈர்த்துள்ளது.
வின்ஃபாஸ்ட் VF7 கார் விவரங்கள்:
இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்த உள்ள இரண்டு கார் மாடல்களில், VF7 தான் அளவில் பெரியது. இதில் கூபே மாதிரியான ரூஃப்லைன், முற்றிலும் அகலமான எல்இடி டெயில் லேம்ப் பார், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், 19 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரானது 4,545 மில்லி மீட்டர் நீளம், 1,890 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1,636 மில்லி மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது. மொத்தமாக இரண்டு ட்ரைவ் ட்ரெயின் ஆப்ஷன்களை இந்த கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் வெர்ஷனின் விலை சுமார் ரூ.25 லட்சம் வரையிலும், இரட்டை மோட்டார் கொண்ட ஆல் வீல் ட்ரைவ் வேரியண்டின் விலை சுமார் ரூ.30 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் இடம்பெறக்கூடிய 75.3KWh பேட்டரி பேக்கானது 201hp மற்றும் 309Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 451 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காரில் லெவல் 2 ADAS, பனோரமிக் கிளாஸ் சன்ரூஃப் மற்றும் பெரிய டச்ஸ்க்ரீன் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
இந்த காரானது உள்நாட்டு சந்தையில் ஜுண்டாய் ஐயோனிக் 5, BYD சீலியன் 7, BMW iX 1 LWB ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் VF6 கார் விவரங்கள்:
மறுமுனையில் VF6 கார் மாடலானது ஒற்றை மோட்டாருடன் இணைக்கப்பட்ட 59.6KWh பேட்டரி பேக்கை கொண்டு, 204hp மற்றும் 310Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இது பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 8.89 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 18 முதல் 24 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்த காரானது இந்திய சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா, டாடா கர்வ் மற்றும் மஹிந்திராவின் BE 6 ஆகிய மின்சார கார் மாடல்களுடன் போட்டியிடும்.
இதனிடையே, VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு கார்களுமே உள்நாட்டு சந்தையில் பாதுகாப்பு பரிசோதனையில் அசத்தி, 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று இருப்பது குறிப்பிடத்தகது.
Car loan Information:
Calculate Car Loan EMI