சொகுசு கார்களுக்கு பெயர்போன வால்வோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து புதிய கார் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் பிரபல மாடலான XC90 வகை காரின் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவமாக, EX90 எனும் மின்சார வாகனத்தை வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய EX90 மாடல் வால்வோ காரின் தோற்றம் அந்நிறுவனத்திற்கே உரிய வகையிலும், முகப்பு விளக்குகள் தோரின் சுத்தியல் போன்ற அம்சத்திலும், பின்புற எல்.இ.டி. விளக்குகள் வால்வோ நிறுவனத்தின் வழக்கப்படியும் பொருத்தப்பட்டுள்ளன.
517 திறன் கொண்ட இந்த காரின் அதிகபட்ச டார்க் வெளிப்பாடு 910Nm ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 111 KWh திறன் கொண்ட பேட்டரி அடங்கிய இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணிக்க முடியும் என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 180 கிமீ தூரம் பயணிக்கலாம் எனவும், 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனவும் கூறப்படுகிறது.
5மீட்டர் நீளமுள்ள இந்த காரில் 7 பேர் அமரும் வகையிலான வசதியும், 16 வகையான சென்சார்களுடன், 25 ஸ்பீக்கர்களும் இடம்பெற்றுள்ளன.
கேபினில் பெரிய 14.5 இன்ச் கூகுள் மற்றும் ஆப்பிள் சார்ந்த தொடுதிரையுடன், பை-டைரெக்ஷனல் சார்ஜிங் வசதியும் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தை பொறுத்தவரை இதுவரை உருவாக்கப்பட்ட வால்வோ கார்களிலேயே மிகவும் பாதுகாப்பானது எனும் பெருமையை EX90 மின்சார கார் பெற்றுள்ளது.
100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.9 விநாடிகளில் எட்டக்கூடிய EX90 மாடல் காரின் உற்பத்தி அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டின் இறுதியிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 வகையான நிறங்களில் கிடைக்கக் கூடிய இந்த காரின் முன்பதிவு, ஆன்லைனில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஷோ-ரூம் விலை, இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வால்வோ EX90 மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், வால்வோ நிறுவனத்தின் எதிர்கால கார்கள் அனைத்தும் இனி எலெக்ட்ரிக் வாகனங்களாகவே வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI