TVS Electric Scooter Orbiter: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய மின்சார ஸ்கூட்டருக்கு ஆர்பிட்டர் என பெயர் சூட்டப்படலாம்.
டிவிஎஸ்-ன் புதிய மின்சார ஸ்கூட்டர்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தனது புதிய வாகனத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உள்நாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கெட் ரெடி ஃபார் ஏன் எலெக்ட்ரிஃபையிங் ரைட்” என்ற வாசகத்துடன், புதிய வாகனம் எப்போது சந்தைப்படுத்தப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய மின்சார ஸ்கூட்டரானது வரும் ஆகஸ்ட் 28ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு ”ஆர்பிட்டர்” என பெயர் சூட்டப்படலாம் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்திலும் “O” என்ற எழுத்து மிகப்பெரியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், கடந்த ஆண்டே ஆர்பிட்டர் என்ற பெயரை டிவிஎஸ் நிறுவனம் ட்ரேட்மார்க் செய்து இருப்பதும், புதிய மின்சார ஸ்கூட்டரின் பெயர் அதுவாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார ஸ்கூட்டர் - டிசைன்:
கடந்த ஜுன் மாதத்தில் இந்தோனேசியா சந்தைக்கான புதிய மின்சார ஸ்கூட்டர் டிசைனை டிவிஎஸ் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதே மாடல் தான் இந்திய சந்தைக்கும் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. காப்புரிமை பதிவின் போது பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களின்படி, புதிய மின்சார ஸ்கூட்டரானது எதிர்காலத்திற்கான வடிவமைப்பு மொழியை கொண்டிருப்பதை உணர முடிகிறது.
உயரமான விண்ட் ஸ்க்ரீன், வழக்கமான முகப்பு விளக்கு இருப்பு, ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய கிடைமட்ட எல்இடி DRL உடன் திடடமான முன்பக்கத்தை பெறுகிறது. குடுதலாக ஃப்ளாட் ஃப்ளோர்போர்ட், நேர்த்தியான பாடி பேனல்கள், ஸ்ப்ளிட் க்ராப் ரெயில்கள், முன்புறத்தில் இரண்டு டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை சந்தைக்கு வரும் எடிஷனிலும் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் அம்சங்கள் தொடர்பான விவரங்கள் அறிமுகத்தின் போது தான் தெரிய வரும்.
டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார ஸ்கூட்டர் - மோட்டார் விவரங்கள்:
வெளியாகியுள்ள தகவலின்படி, டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டரில் மிட்-மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதாவது, வழக்கமாக பயன்படுத்தப்படும் ஹப் மோட்டார்களில் இருந்து புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிட்-மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்துவதன் மூலம், பயணத்தின் போது சத்தம் அதிகமாக இருக்காது என்றும், நல்ல செயல்திறனை பெற முடியும் எனவும், ஆற்றல் பரவலாக கடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
நிறுவனத்தின் சார்பில் தற்போது விற்பனையில் உள்ள மின்சார ஸ்கூட்டர்களில், 5 வகையான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 94 கிலோ மீட்டர் தொடங்கி அதிகபட்சம் 212 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இதில் எந்த ஆப்ஷன் புதிய ஸ்கூட்டரில் வழங்கப்படும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார ஸ்கூட்டர் - விலை விவரங்கள்:
டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டர் தொடர்பாக கூடுதல் தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில், இது நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் வரிசையில் எண்ட்ரி - லெவல் மாடலாக இருக்கும் என கூறப்படும். பிராண்டின் தற்போதைய தொடக்க நிலை மின்சார ஸ்கூட்டரான ஐக்யூப் சுமார் ஒரு லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டால் புதிய ஸ்கூட்டரின் விலை ஒரு லட்ச ரூபாயை காட்டிலும் குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது. அதன்படி, பஜாஜ் சேடக் மற்றும் ஓலா S1X ஆகிய வாகனங்களுடன் விலை அடிப்படையில் போட்டியிடும்.
இந்த புதிய வாகனமானது மின்சார ஸ்கூட்டர் சந்தையில் டிவிஎஸ் நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, பயனர்களுக்கு கூடுதல் ஆப்ஷன்களையும் வழங்க உள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனம் அதற்கேற்ப தன்னை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI