Chiranjeevi Party: தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி ஆந்திர அரசியலில் மாற்று சக்தியாக உருவெடுப்பார் என்ற கணிப்புகள் அனைத்தும் இரண்டே ஆண்டுகளில் தவிடுபொடியாகின.

அரசியலில் சிரஞ்சீவி..

10 லட்சம் ரசிகர்களை ஒரே இடத்தில் திரட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கடந்த 2008ம் ஆண்டு "பிரஜா ராஜ்யம்" என்கிற புதிய கட்சியை துவக்கினார்.  அப்போதைய ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாக பலமோடு இருந்த தெலுங்கு தேசம் மற்றும் வடக்கு ஆந்திராவில் மட்டும் வலுவாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிலைப்படுத்தினார். எந்த கட்சியும் அதற்கு முன்பாக 10 லட்சம் பேரை ஓரிடத்தில் திரட்டி ஆந்திராவை அதிர வைத்தது கிடையாது என்கிற பிம்மாண்ட அரசியல் சாதனையை செய்தபடி அரசியலுக்கு வந்தார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவியை கொண்டாடிய கணிப்புகள்:

அன்று ஆந்திராவின் மொத்த வாக்காளர்கள் 5.7 கோடி பேர். திரண்ட ரசிகர் கூட்டம் 2% இவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்.10 பேர் என்றாலே... 22% ஓட்டுகள் சிரஞ்சீவி வசம் உள்ளது. அடுத்த ஓராண்டு பரப்புரை மூலம் மேலும் 15 சதவிகித மக்களின் ஆதரவு கிடைக்கும், ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆகிவிடுவார் என்றார்கள் பல அரசியல் திறனாய்வு கணிப்பாளர்கள். அதன்படி, 2009ல் நாடாளுமன்றத்துடன் இணைந்து நடந்த, ஒருங்கிணைந்து இருந்த அன்றைய ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தின் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது.  "ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சதி, என்னை கண்டு அஞ்சுகிறது. எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சுயேட்சை சின்னம் தந்து முடக்கப் பார்க்கிறது" என குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் சிரஞ்சீவி வழக்கு தொடர்ந்தார். அவர் கட்சி போட்டியிட பொது சின்னம் ஒன்றை அனைத்து தொகுதிகளுக்கும் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அதிரடியாக நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்க,  சிரஞ்சீவிக்கு துவக்கமே மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடினார்கள்.

பொய்யான கணிப்புகள்

ரயில் இன்ஜின் என்கிற ஒரு பொது சின்னத்தில் 2009 ஆம் ஆண்டு ஆந்திராவின் 42 நாடாளுமன்ற தொகுதியிலும்... 294 சட்டமன்ற தொகுதியிலும் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் கட்சி தனித்து போட்டியிட்டது. அப்போதைக்கு அவருக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமல்ல.  எனவே, முதலமைச்சர் வேட்பாளர் சிரஞ்சீவி என்கிற அந்தஸ்தில் 2009 சட்டமன்ற தேர்தலில் அனைத்து 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 148 என்கிற மெஜாரிட்டி என்ற இலக்கை நோக்கி சென்ற இக்கட்சி வெறும் 18 இடங்களை மட்டுமே வென்றது.

தங்களின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை ஆந்திர முதலமைச்சர் ஆக்குவதே ரசிகர்களின் விருப்பம் என்பதால் சட்டமன்றத் தேர்தலில் தான் அதிக கவனம் தரப்பட்டது. தங்கள் வீட்டு பிள்ளை (சிரஞ்சீவியின் ரசிகர்) சொன்னதை கேட்டு அவர்களின் ஆசைக்கு இணங்கி சிரஞ்சீவி கட்சிக்கே ரசிகர் மன்ற குடும்பத்தினர் ஓட்டு போட்டனர் போல. அதனால் சட்டமன்ற தேர்தலில் சிரஞ்சீவி கட்சிக்கு 16% வாக்குகள் கிடைத்தன. 

சீரஞ்சீவிக்கு தோல்வி

#ஒரே_தேர்தலில்_முதலமைச்சர்_நாற்காலி என்கிற இலக்கில் தேர்தலில் குதித்த சிரஞ்சீவி 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஒன்றில் தோற்றார். ஒன்றில் மட்டுமே வென்றார். சிரஞ்சீவியே தோற்றது தேர்தலுக்கு முன் அவர் மீது எழுப்பப்பட்ட பிம்பத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. ஆனாலும் பிரஜா ராஜ்ஜியம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை முந்தி மூன்றாவது இடத்திற்குத்தான் வர முடிந்தது. 28% ஓட்டுகளை பெற்று  92 இடங்களை வென்ற சந்திரபாபு நாயுடு மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி, 37% ஓட்டுகளை பெற்று 156 தொகுதியில் வென்று மீண்டும் முதலமைச்சர் ஆனார்.

5வது இடத்தில் சிரஞ்சீவி கட்சி

சிரஞ்சீவிக்கும் அவரின் ரசிகர்களுக்கு முக்கியமல்லாத நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 6% ஓட்டுகளை மட்டுமே பெற்ற பிரஜா ராஜ்ஜியம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 22% ஓட்டுவங்கி இருப்பதாக அனுமானம் செய்யப்பட்ட சிரஞ்சீவி கட்சிக்கு வெறும், 6% ஓட்டுகள் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தன. ஆகவே, இதுவே சிரஞ்சீவி கட்சியின் ரசிகர் பலத்தில் அமைந்த ஒரிஜினல் வாக்கு வங்கியாக பார்க்கப்பட்டது. 1தொகுதியில் வென்ற AIMIM கட்சியின் ஒவைசிக்கு பின்னாடி 5வது இடத்திற்கு சிரஞ்சீவி தள்ளப்பட்டார். சிரஞ்சீவியே தன் சட்டமன்ற தொகுதியில் தோற்றதும், ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் கூட எதிர்க்கட்சி ஆகக்கூட முடியவில்லையே என்கிற கடும் ஏமாற்றமும்,  ஏகப்பட்ட தொகுதிகளில் சிரஞ்சீவி கட்சிக்கு டெபாசிட் போனதும் சிரஞ்சீவிக்கு அரசியல் மீதான ஆர்வம் விருப்பம் ஆகியவற்றை நசிந்து போகச் செய்தது. அதன் பிறகு ரசிகர்களுக்கும் கட்சியில் ஆர்வம் இல்லாமல் போனது. 

நடிப்பிற்கு திரும்பிய சிரஞ்சீவி:

294 தொகுதியிலும் சிரஞ்சீவி என்கிற ஒற்றை முகம் வெற்றி பெற முடியாது. ஒவ்வொரு தொகுதியிலும் அந்த ஊர் மக்களின் நம்பிக்கையை பெற்ற பிரபலமான வேட்பாளர்கள் அவசியம் என்பதை சிரஞ்சீவி மட்டுமின்றி அவரது ஈசிகர்களும் முக்கியமாக ஊடக பத்திரிக்கையாளர்களும் விளங்கிக் கொண்டனர். ஆகவே... ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட செயலாளர்கள்  வட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பூத் ஏஜென்ட்... போன்ற பலமான கட்சிக் கட்டுமானம் கொண்ட காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ஏரியாவில் மட்டும் அப்படியான பலம் கொண்ட தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற மிகப்பெரிய உயரம் தாண்ட வேண்டும் என்பது சிரஞ்சீவிக்கு புரிந்தது. அதற்கு பல ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும். என்பது புரிந்தது. வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த சிரஞ்சீவின் பிரஜா ராஜ்யம் கட்சி... 2011ல் கலைக்கப்பட்டுவிட்டது. கட்சி ஆரம்பித்த 2008 முதல் சினிமாவில் நடிக்காமல் இருந்த சிரஞ்சீவி.... மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போய் விட்டார்..!!

இதே பாணியில் தமிழக அரசியல் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சாதிப்பாரா? சறுக்குவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.