TVS Ntorq 150: டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டரில் 150cc லிக்விட் கூல்ட் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிஎஸ் Ntorq 150 ஸ்கூட்டர் ரெடி:
டிவிஎஸ் நிறுவனத்தின் Ntorq 125 சீரிஸ் ஸ்கூட்டர்கள் சந்தைப்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளிலேயே சந்தையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான அப்டேட்கள், புதிய வேரியண்ட்ஸ் மற்றும் லிமிடெட் எடிஷன்கள் மூலம் சந்தையில் வலுவான இருப்பிடத்தை பிடித்துள்ளது. ஸ்போர்டி ஸ்கூட்டர் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக பல ப்ராண்டுகளில் இருந்து புதுப்புது மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டாலும், Ntorq தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதனிடையே, உள்ளூர் வாடிக்கையாளர்கள் கூடுதல் திறன் கொண்ட 150 மற்றும் 160cc திறன் கொண்ட வாகனங்களை நோக்கி தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இதனை உணர்ந்து பொதுமக்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட Ntorq பெயரிலேயே, புதிய ஸ்கூட்டர் ஒன்றை டிவிஎஸ் நிறுவனம் தயார் செய்து வருகிறது. செப்டம்பர் 4ம் தேதி இந்த வாகனத்தை சந்தைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான டீசரும் ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் Ntorq 150 ஸ்கூட்டர் வடிவமைப்பு:
வெளியாகியுள்ள டீசரானது கூர்மையான டிசைன் அம்சத்தை வெளிப்படுத்துகிறது. அதன்படி, மிகவும் பிரபலமான T வடிவிலான மேம்படுத்தப்பட்ட எல்இடி முகப்பு விளக்கு, 4 ஆக்சிலரி எல்இடி யூனிட்ஸ் வழங்கப்பட்டுள்ளன. மேலும், டிவிஎஸ் நிறுவனத்தில் இதுநாள் வரை ஸ்கூட்டரில் 300சிசி திறனுக்கு குறைவான லிக்விட் கூல்ட் இன்ஜின் இடம்பெற்றதே இல்லை. ஆனால், முதல்முறையாக Ntorq 150 ஸ்கூட்டர் மூலம் 150 சிசி லிக்விட் கூல்ட் இன்ஜினை டிவிஎஸ் வழங்க உள்ளது.
டிவிஎஸ் Ntorq 150 ஸ்கூட்டர் - அம்சங்கள்:
டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய Ntorq 150 எடிஷனில் ஏராளமான அம்சங்களை வழங்க உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாடலில் இருந்து பெரும்பாலான அம்சங்கள் அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. அதன்படி, முழுமையாக கனெக்டிவிட்டி ஆப்ஷனுடன் கூடிய TFT டிஸ்பிளே, டர்ன் -பை- டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கூர்மையான ஸ்டைலிங், பெரிய க்ராபிக்ஸ், ஸ்ப்லிட் சீட் செட்-அப், ப்ளாக்ட் அவுட் அலாய் வீல்கள், வாகனத்தை சுற்றிலும் எல்இடி லைட்டிங், பலதரப்பட்ட ரைடிங் மோட்கள் மற்றும் கூடுதலான ரைடருக்கான உதவிகரமான அம்சங்களும் இடம்பெறக்கூடும்.
டிவிஎஸ் Ntorq 150 ஸ்கூட்டர் இன்ஜின்
புதிய Ntorq 150 மாடலுக்கான இன்ஜினை உருவாக்க, 160சிசி மோட்டர்சைக்கிளிலிருந்து சில அம்சங்களை டிவிஎஸ் கடன் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அதில் ஏர் கூல்ட் இன்ஜினை வழங்குவது என்பது, ஏற்கனவே லிக்விட் கூல்ட் இன்ஜினை கொண்டுள்ள போட்டியாளர்களிடமிருந்து பின்தங்கச் செய்யும். எனவே, டிவிஎஸ் நிறுவனம் புதிய 150சிசி லிக்விட் - கூல்ட் இன்ஜினை இந்த ஸ்கூட்டர் மூலம் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம், அதிகபட்சமாக 15PS ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிஎஸ் Ntorq 150 ஸ்கூட்டர் விலை, போட்டியாளர்கள்
புதிய எடிஷனின் விலை வழக்கமான Ntorq ரேஞ்சிலேயே போட்டித்தன்மை மிக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் Ntorq-ன் 125 XT வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 119 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய எடிஷனின் விலை இதை விட அதிகமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
இதன் மூலம் உள்நாட்டு சந்தையில் யமாஹா ஏராக்ஸ் 155, ஏப்ரிலியா SXR 160 மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ XOOM 160 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டியிட உள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட மாடல்களில் ஹீரோ XOOM 160 மற்றும் யமாஹா ஏராக்ஸ் 155 மாடல்களில் லிக்விட் கூல்ட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஏப்ரிலியா SXR 160 மாடலில் ஏர் - கூல்ட் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI