Volkswagen Tayron SUV: ஃபோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் புதிய டெய்ரான் எஸ்யுவி, டொயோட்டாவின் ஃபார்ட்சுனரை சந்தையில் போட்டியாளராக எதிர்கொள்ள உள்ளது.
ஃபோல்க்ஸ்வாகன் டெய்ரான் எஸ்யுவி:
வலுவான கட்டமைப்பு தரம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்ஜின் தொழில்நுட்பத்திற்கு பெயர்போன ஜெர்மனி ப்ராண்ட் ஆகிய காரணங்களால், ஃபோல்க்ஸ்வாகன் கார்களை இந்தியர்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஃபுல் சைஸ் எஸ்யுவி ஆன டொயோட்டாவின் ஃபார்ட்சூனருக்கு போட்டியாக, ஃபோல்க்ஸ்வாகன் தனது புதிய எஸ்யுவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தனது எஸ்யுவி லைன் - அப்பை விரிவுபடுத்தும் வகையில், ப்ரீமியம் மூன்று வரிசை இருக்கை வசதிகளை கொண்ட டெய்ரான் கார் விரைவில் சந்தைப்படுத்த உள்ளது. சாலை பரிசோதனையில் எடுக்கப்பட்ட காரின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஃபோல்க்ஸ்வாகன் டெய்ரான் வெளியீடு எப்போது?
கடந்த 2019ம் ஆண்டு முதல் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரரும் டெய்ரான் கார் மாடல், தற்போது சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தயார்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் சோதனையில் ஈடுபட்டு வரும் காரானது, சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் எடிஷனாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் நவம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படும் டெய்ரான், நிறுவனத்தின் டைகுன் ஆல்ஸ்பேஸ் காருக்கு மாற்றாக போர்ட்ஃபோலியோவில் நிலைநிறுத்தப்படலாம்.
ஃபோல்க்ஸ்வாகன் டெய்ரான் - வெளிப்புற அம்சங்கள்
சோதனையின் போது எடுக்கபட்ட புகைப்படங்கள், டெய்ரான் கார் மாடல் வலுவான கட்டமைப்பை கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகின்றன. அகலமான வீல்பேஸ் மற்றும் ஆல்ஸ்பேஸை காட்டிலும் எஸ்யுவி என்பதை உணர்த்துவதற்கான பலதரபட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. முன்புறத்தில் லேசான எல்இடி முகப்பு விளக்குகளுடன் கூடிய, பெரிய க்ரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்தில் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி டெயில்கேட் அதிகபட்சம் செதுக்கப்பட்ட வடிவமைப்பை கொண்டிருக்கும். 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படும். ஸ்கோடா கைலாக் மற்றும் ஃபோல்க்ஸ்வாகனின் டைகுன் கார் மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்ட MQB பிளாட்ஃபார்மில் தான் டெய்ரான் காரும் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. காரின் வடிவமைப்பு பெரும்பாலும் டைகுன் R-லைனை சார்ந்து இருந்தாலும், அதை காட்டிலும் சற்றே கூடுதல் நீளத்தை பெறும் என கூறப்படுகிறது.
ஃபோல்க்ஸ்வாகன் டெய்ரான் - உட்புற அம்சங்கள்
உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட மெட்டீரியல் குவாலிட்டி உடன், டெய்ரான் கார் மாடல் ப்ரீமியம் பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மேம்படுத்தப்பட்ட ட்ரைவர்ஸ் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. போதுமான இடவசதி மற்றும் சொகுசு பயணத்தை எதிர்பார்க்கும் குடும்ப பயணிகளுக்காக, 7 இருக்கை வசதிகளுடன் டெய்ரான் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், 3 ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம். 7 இருக்கைகளும் பயன்படுத்தப்பட்டாலும், 345 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்துவிட்டால், இந்த இடவசதியானது 850 லிட்டராக அதிகரிக்கும்.
ஐரோப்பாவில் நடைபெற்ற பாதுகாப்பு பரிசோதனையில் இந்த கார் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோல்க்ஸ்வாகன் டெய்ரான் - இன்ஜின் விவரங்கள்
ஃபோல்க்ஸ்வாகன் நிறுவனம் தனது டெய்ரான் கார் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 7 ஸ்பீட் DSG ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படலாம். அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாவிட்டாலும் இந்த இன்ஜின், 204hp மற்றும் 320NM ஆற்றலை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. பயனர்களுக்காக பன்முகத்தன்மையை அதிகரிக்கும் விதமாக, டெய்ரானின் டாப் எண்ட் வேரியண்ட்களில் ஆல் வீல் ட்ரைவ் அம்சம் வழங்கப்படலாம். அதிகப்படியான எடை காரணமாக பிக்-அப் மற்றும் அதிகபட்ச வேகம், டைகன் R லைனை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோல்க்ஸ்வாகன் டெய்ரான் - உள்நாட்டில் அசெம்ப்ளி
சர்வதேச சந்தையில் நடப்பாண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படுவதை தொடர்ந்து, இந்தியாவிலும் டெய்ரான் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதேநேரம், அதிகப்படியான விலை நிர்ணயம் காரணமாகவே டைகுன் ஆர் லைன் கார் மாடல் இந்திய சந்தையில் பெரும் ஆதரவை பெற முடியாமல் போனது. இதனை உணர்ந்த நிறுவனம் அவுரங்காபாத்தில் உள்ள தனது ஆலையில் வைத்து உள்நாட்டிலேயே வைத்து காரை அசெம்ப்ளி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறக்குமதி வரி உள்ளிட்டவை இன்றி, சரியான விலையில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என நிறுவனம் கருதுகிறதாம்.
ஃபோல்க்ஸ்வாகன் டெய்ரான் - விலை, போட்டியாளர்கள்:
முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இறக்குமதி செய்யப்பட்டால், டெய்ரானின் விலை ரூ.50 முதல் ரூ.55 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். அதேநேரம், உள்நாட்டிலே அசெம்ப்ளி செய்யப்பட்டால் ரூ.35 லட்சம் தொடக்க விலையாக இருக்கலாம். அப்படி டெய்ரான் கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால், டொயோட்டா ஃபார்ட்சுனர், எம்ஜி க்ளோஸ்டர், ஸ்கோடா கோடியாக் ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும்.
Car loan Information:
Calculate Car Loan EMI