கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாகவுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இன்று முதல் ஒருவாரத்திற்கு அமலாகியுள்ளது. மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி - மீன் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட நபரை தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பொதுமக்கள் ஊரடங்கை கடைபிடித்தால் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஊரடங்கு என்பது நமக்கு மட்டுமல்ல, நம் கார்களுக்கும் தான். வழக்கமாக தினமும் ஓடிக்கொண்டிருக்கும் கார்கள் இனி ஊரடங்கு நீக்கப்படும் வரை ஓய்வில் தான் இருக்கப்போகின்றன. இந்த லாக்டவுன் நேரத்தில் காரையும் நாம் கவனித்துக்கொண்டால் எதிர்காலத்தில் மெக்கானிக் செலவில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
ஹேண்ட் பிரேக் வேண்டாம்:
காரை எங்கே நிறுத்தினாலும் நம் கை நேராக ஹேண்ட் பிரேக்கை நோக்கித்தான் போகும். காரை பார்க் செய்யும் போது ஹேண்ட் பிரேக் பயன்படுத்துவது மிக முக்கியமானது, பாதுகாப்பானது. ஆனால் நீண்ட நாட்களாக கார் நிறுத்தப்பட்டே இருக்கும் என்றால் ஹேண்ட் பிரேக் போடுவது நல்லதல்ல. இதனால் பிரேக் ஜாமாக வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக காரை கியரில் நிறுத்தினால் போதுமானது. சரிவில் நிற்பது போன்ற பார்க்கிங் என்றால் ரிவர்ஸ் கியரில் காரை நிறுத்தலாம். மேட்டில் நிற்பது போன்ற பார்க்கிங் என்றால் முதல் கியரில் வண்டியை நிறுத்த வேண்டும். அதுபோக வழக்கமாக பயன்படுத்துவது போல டயருக்கு கீழே கட்டை, அல்லது கற்களை கொடுத்து நகராமல் நிறுத்தி வைக்கலாம்.
கார் கவர்:
நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்போகும் காருக்கு உறை மிக முக்கியம். கார் சரியான பார்க்கிங்கில் வெயில், மழை படாத இடம் என்றால் பரவாயில்லை. ஆனால் நேரடியாக வெயில், மழைபடும் பகுதி என்றால் காரை கவர் கொண்டு மூடுவது மிக நல்லது. அதிக வெயிலால் காரின் பெயிண்ட் தரம் இழக்க வாய்ப்புள்ளது. முடிந்தவரை பாதுகாப்பான கூரைக்கு கீழே காரை பார்க் செய்ய வேண்டும். இப்போது புயலும், மழையும் கூட வருவதால் மரங்களுக்கு கீழே காரை பார்க் செய்வதை தவிர்க்கலாம்.
பேட்டரியில் கவனம்:
காருக்கு பேட்டரி மிக முக்கியமான ஒன்று. நீண்ட நாட்கள் நிறுத்திவிட்டு பின்னர் ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும். பயன்படுத்தாத நேரத்தில் பேட்டரி காலியாவதால் ஏற்படும் சிக்கல் இது. பேட்டரியை பொருத்தவரை அடிக்கடி கார் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அதனால் லாக்டவுன் என்றாலும் வாரத்திற்கு ஒருநாள் காரை ஸ்டார்ட் செய்து 10-15 நிமிடங்கள் இஞ்சினை ஓட விட வேண்டும். அபார்ட்மெண்ட் மாதிரியான இடம் என்றால் அந்த பகுதிக்குள்ளேயே கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ஒரு ரவுண்ட் காரை ஓட்டலாம்.
எலிகளிடம் இருந்து ஜாக்கிரதை:
எலிகள் காரின் எதிரி என்றே சொல்லலாம். கார் பயன்பாட்டில் இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் நீண்ட நாட்களாக கார் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டால் உங்கள் கார் எலிகளுக்கு வீடாகலாம். காரில் உள்ள பிளாஸ்டிக், ஒயர்கள் என மனம்போன போக்கில் எலிகள் கடித்து குதறிவிடும். இது மிகப்பெரிய செலவைத் தான் உண்டாகும். இந்த லாக்டவுன் காலத்தில் எலிகளிடம் இருந்து காரை பாதுகாப்பதுதான் மிகப்பெரிய வேலை. எலிகளுக்கு எதிரான ஸ்பிரே ஆன்லைன் கிடைக்கிறது. மெடிக்கல் ஸ்டோரிலும் இது கிடைக்கும். இந்த ஸ்பிரே மூலம் எலிகள் வருவதை தடுக்கலாம். காருக்கு கீழே முக்கியமான இடங்களில் எலி ஸ்பிரே, எலி கேக் பயன்படுத்தி எலியிடம் இருந்து காரை பாதுகாத்துக்கொள்ளலாம்.
அடிக்கடி பரிசோதியுங்கள்:
இந்த கொரோனாவும், ஊரடங்கும் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியாத நிலையில் உங்கள் கார் மறுபடி எப்போது வழக்கமான பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரியாது. எனவே காரை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி இஞ்சினை ஆன் செய்வது, லைட், வைபர்ம் ஹாரன் போன்ற எலெக்ட்ரிகள் வேலைகளையும் பயன்படுத்தி பரிசோதிக்க வேண்டும். கார் கதவு ஜன்னலை திறந்து காற்றோட்டமாக வைத்துக்கொள்ளலாம். நினைவில் கொள்ளுங்கள். கார் தொடர்பாக நாம் வீட்டை விட்டு கீழே சென்றாலும் கூட நாம் முகக்கவசம் அணிதல், கையுறை அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். காரின் பாதுகாப்பை விடவும் நம் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
Car loan Information:
Calculate Car Loan EMI