Tesla India Hiring: டெஸ்லா கார் உற்பத்தி ஆலை தமிழ்நாட்டின் சென்னையில் அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெஸ்லா அறிவிப்பு:
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார வாகனங்களுக்கான பிரிவில், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரம், உலகின் பெரும் ஆட்டோமொபௌஇல் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், டெஸ்லா கார்கள் மிகவும் கணிசமாகவே உள்ளன. இந்நிலையில் தான், அந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதன் LinkedIn பக்கத்தில் பதிவேற்றப்பட்ட பதிவில், வாடிக்கையாளர் சார்ந்த மற்றும் பேக்-என்ட் பணிகள் உட்பட 13 பிரிவுகளில் இந்தியாவில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அண்மையில் அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, எலான் மஸ்கை சந்தித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கான டெஸ்லாவின் திட்டம்:
நிதி அமைச்சக வட்டார தகவல்களின்படி, டெஸ்லா முதற்கட்டமாக இந்தியாவில் ஒரு உற்பத்தி ஆலையை திறக்க திட்டமிட்டுள்ளது. அதனை கைப்பற்ற குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நிறுவனம் கடந்த ஆண்டு இடங்களைத் தேடத் தொடங்கியது, ஆனால் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின், பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு அந்த பணிகள் வேகமெடுத்துள்ளன. கூடுதலாக, டெஸ்லா குறைந்தது இரண்டு ஷோரூம்களைத் தொடங்க பரிசீலித்து வருகிறது, மும்பை, டெல்லி மற்றும் ஐதராபாத்தில் சாத்தியமான இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.
சென்னைக்கு வாய்ப்பிருக்கா?
இதனிடயே, டெஸ்லா ஆலையை கைப்பற்ற தமிழ்நாடு அரசும் திவிரம் காட்டி வருகிறது. தெற்காசியாவின் டெட்ராய்ட் என்றும் அழைக்கப்படும் சென்னையில், நிசான் மோட்டார் கோ, ரெனால்ட் எஸ்ஏ, ஹூண்டாய் மோட்டார் கோ, டாடா மற்றும் பிஎம்டபிள்யூ ஏஜி போன்ற உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன. ஃபோர்ட் நிறுவனமும் சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. அவற்றுக்கு ஆதரவளிக்கும் ஆட்டோ பாகங்கள் விநியோகச் சங்கிலிகளும் இதில் அடங்கும். துறைமுகங்கள் அதற்கேற்ற இணைப்புச் சாலைகளும் வலுவாக இருப்பது, டெஸ்லாவை ஈர்ப்பதில் சென்னையை முன்னணியில் நிறுத்துகிறது. மேலும், ”தமிழ்நாடு ஏற்கனவே நாட்டின் வாகனத் தலைநகராக உள்ளது. இப்போது இதை மின்சார வாகனத் தலைநகராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து தோல்வியுற்ற டெஸ்லாவின் முயற்சிகள்:
இந்தியாவில் வணிகத்தை தொடங்க டெஸ்லா நிறுவனம் நீண்ட காலமாக முயன்று வருகிறது. அதற்காக இரண்டு முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்தன. அதன்படி,
- முதலாவதாக, 110% வரை அதிகமாக இருந்த இறக்குமதி வரிகள் இந்தியாவில் டெஸ்லா கார்களை மிகவும் விலை உயர்ந்ததாக மாற்றியது. உள்ளூர் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு முன்பு இறக்குமதியை எளிதாக்க வரி குறைப்புகளை நிறுவனம் கோரியது. ஆனால் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்தபடி அமையாததால் முதல் முயற்சி தோல்வியுற்றது.
- இரண்டாவதாக, அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியை வலியுறுத்தியது. இறக்குமதியைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, டெஸ்லா நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி வசதியை நிறுவ அரசாங்கம் விரும்பியது. ஆனால் வளர்ந்து வரும் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு முன்கூட்டியே முதலீடு செய்ய அந்நிறுவனம் தயங்கியது. இதனால், அந்நிறுவனத்தின் முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியுற்றன.
சலுகைகளை அறிவித்த அரசு
இந்நிலையில் தான், மூன்றாவது முயற்சியாக இந்தியாவிற்குள் நுழையும் பணியை டெஸ்லா முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக தான் இந்தியா சமீபத்தில் $40,000 க்கு மேல் விலை கொண்ட உயர் ரக கார்களுக்கான அடிப்படை சுங்க வரியை 110% லிருந்து 70% ஆகக் குறைத்தது. அதோடு, இந்திய அரசாங்கம் குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடுகளுடன் உள்ளூர் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு உறுதியளிக்கும் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு குறைந்த இறக்குமதி வரியை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI