கடந்த சில மாதங்களாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சி.என்.ஜி எரிபொருளில் பயன்படும் பயணிகள் காரை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தரப்பில், சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் கார் மாடலை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. எனினும், தற்போது கார்களுக்கான `எலக்ட்ரானிக் சிப்’ தட்டுப்பாடு சர்வதேச அளவில் ஏற்பட்டிருப்பதால், சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் டாடா நிறுவனத்தின் முதல் கார் அடுத்த மாதம், அதாவது 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


மேலும் ஏற்கனவே எதிர்பார்ப்புகள் பரவியிருப்பது போல, அவற்றை உண்மையாக்கும் விதமாக, டாடா நிறுவனத்தின் `டியாகோ’ மாடலை சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் மாடலாக மாற்றியமைத்து வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. டாடா நிறுவனத்தின் டீலர்கள் தரப்பில் இருந்து இந்தத் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், டியாகோ சி.என்.ஜி மாடலைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் `டிகோர்’ மாடலையும் சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் மாடலாக மாற்றியமைத்து வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 



மேலும், கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் டாடா டியாகோ சி.என்.ஜி மாடலின் முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காகப் பல்வேறு பகுதிகளில், கார் வாங்குவதற்கு முன் தொகையாக 11 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. எனினும் இவை அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் மாருதி சுஸுகி, ஹுண்டாய் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் பேசஞ்சர் கார் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணையவுள்ளது. எனினும், இந்தியாவில் சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் மாடல்களில் மாருதி சுஸுகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொடக்க அளவிலான ஹேட்ச்பேக் மாடல்கள் சி.என்.ஜி எரிபொருளில் இயங்குவதோடு, அவை பல்வேறு வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. மேலும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா MPV மாடலும் சி.என்.ஜி எரிபொருளில் இயங்கக் கூடியது. மேலும் மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது வெவ்வேறு மாடல்களான செலிரியோ, டிசைர், ஸ்விஃப்ட் முதலானவற்றை சி.என்.ஜி எரிபொருளில் இயங்கும் விதமாக மாற்றியமைத்து வருகின்றன. 



டாடா டியாகோ சி.என்.ஜி வெளியிடப்படும் போது, அது ஹுண்டாய் சாண்ட்ரோ சி.என்.ஜி, ஹுண்டாய் ஐ10 கிராண்ட் சி.என்.ஜி, மாருதி சுஸூகி வேகன் ஆர் சி.என்.ஜி, புதிதாக வரவிருக்கும் மாருதி சுஸூகி செலிரியோ சி.என்.ஜி ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. டிகோர் சி.என்.ஜி மாடல் ஹுண்டாய் ஆரா சி.என்.ஜி, புதிதாக வரவிருக்கும் மாருதி சுஸூகி டிசைர் சி.என்.ஜி ஆகியவற்றிற்குப் போட்டியாக அமையும்.


Car loan Information:

Calculate Car Loan EMI