இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த எஸ்.யு.வி மாடலான டாடா சியரா, தற்போது அதிநவீன வசதிகளுடன் மீண்டும் களமிறங்கி உள்ளது. எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் என இரண்டு வடிவங்களிலும் உள்ள இந்த புதிய டாடா சியரா கார் மீது வாகனப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த காரின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, முந்தைய பழைய மாடலின் தனித்துவமான அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் அதேநேரம் நவீன காலத்திற்கு ஏற்ப ஸ்போர்ட்டியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. காரின் முன்புறத்தில் மெல்லிய எல்.இ.டி டி.ஆர்.எல்கள், மிக உறுதியான பம்பர் அமைப்பு மற்றும் மூடிய வகையிலான கிரில் டிசைன் ஆகியவை காரின் கம்பீரத்தைக் கூட்டுகின்றன.
பக்கவாட்டுப் பகுதியில் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் பெரிய வீல் ஆர்ச்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின் இருக்கைப் பயணிகளுக்காக, பழைய சியரா காரின் முக்கிய சிறப்பம்சமான வளைந்த பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இந்த புதிய மாடலிலும் அமைக்கப்பட்டுள்ளது. கேபினில் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் (ADAS) பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
பவர்ட்ரெயின் விவரங்களை முழுமையாக ஆராய்ந்தால், இதன் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படவுள்ளது. இது அதிகபட்சமாக 170 பிஎஸ் ஆற்றலையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேசமயம் எலக்ட்ரிக் மாடலில் 60 kWh பேட்டரி பேக் இடம்பெறலாம். இதை முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டாடா சியராவின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.11 லட்சத்தில் இருந்து தொடங்கலாம். ஆர்டிஓ மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது இதன் உத்தேச ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ.13.3 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ரூ.50,000 முன்பணம் செலுத்தி வாங்குவதற்கான இஎம்ஐ கணக்கீடு
புதிய டாடா சியராவின் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ.13.30 லட்சமாக இருக்கும் என்ற உத்தேச திட்டத்தின் அடிப்படையில் இதனை வாங்குவதற்கான மாதாந்திர இஎம்ஐ கணக்கீட்டைப் பார்ப்போம். இந்த ரூ.13.30 லட்சம் என்ற விலையில், வாடிக்கையாளர்கள் ஆரம்ப முன்பணமாக வெறும் ரூ.50,000 தொகையை மட்டும் செலுத்திவிட்டு, மீதமுள்ள ரூ.12,80,000 தொகையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வாகனக் கடனாகப் பெற முடியும்.
இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.8 சதவீதம் என கணக்கிடப்பட்டால், காலக்கெடுவைப் பொறுத்து மாதத் தவணை பின்வருமாறு அமையும்.
மாதத் தவணை
கடனை 4 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதாக இருந்தால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.32,351 தொகையை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டியிருக்கும். கடனை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதாக இருந்தால், உங்களின் மாதாந்திரத் தவணை தோராயமாக ரூ.27,071 ஆக இருக்கும். இதுவே 7 ஆண்டுகள் காலக்கெடுவை தேர்வு செய்தால் மாதாந்திர இஎம்ஐ தொகை தோராயமாக ரூ.21,134 ஆகக் குறையும்.
வாடிக்கையாளர்கள் கடன் பெறும் வங்கி நடைமுறைகளைப் பொறுத்து இந்த இஎம்ஐ தொகையில் கட்டாயம் சிறு மாற்றங்கள் இருக்கலாம் என்பதை மறக்கக்கூடாது.
Car loan Information:
Calculate Car Loan EMI