ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கியதால் கடந்த வாரம் பேசுபொருளாக மாறிய டாடா நிறுவனம், தற்போது இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான கார்களைத் தயாரிப்பதாகப் பாராட்டப்பட்டுள்ளது. டாடா பன்ச் என்ற மாடல் கார் தற்போது பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சத்திற்காக 5 ஸ்டார்களைப் பெற்றுள்ளது. Global NCAP என்றழைக்கப்படும் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தை சர்வதேச அளவில் Towards Zero Foundation என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இதில் #SaferCarsForIndia என்ற திட்டத்தின் பரிசோதனைகளில் டாடா பன்ச் காருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பில் இந்தக் காருக்கு 4 ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. Global NCAP பட்டியலில், நெக்ஸான், ஆல்ட்ராஸ் ஆகிய கார்களுக்குப் பிறகு, பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்திற்கான 5 ஸ்டார்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்ட மூன்றாவது காராகப் புதிய டாடா பன்ச் மாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் இன்னும் வெளியிடப்படாத டாடா பன்ச் மாடல் அதன் பாதுகாப்பு அம்சங்களுக்காகப் போற்றப்படுகிறது. அதில் வழக்கமான anti lock braking system (ABS), electronic brakeforce distribution, dual airbags ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
Global NCAP பட்டியலை வெளியிட்ட அந்நிறுவனத்தின் பொதுச் செயலாளர் அலெக்ஜாண்டரோ பூராஸ் இதுகுறித்து பேசுகையில், `பெரியவர்களுக்கான பாதுகாப்பில் மொத்த ரேட்டிங், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்கள் என முன்னணியில் நிறுகிறது டாடா நிறூவனத்தின் கார். இந்தப் பரிசோதனைகளின் மூலம், இந்தியாவில் பாதுகாப்பான கார்களைத் தயாரிக்கும் பணியில் டாடா நிறுவனம் ஈடுபட்டு வருவது உறுதியாகி உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
`எங்கள் பரிசோதனை முறைகள் இந்தியச் சந்தையில் தற்போது நிலவும் எங்கள் சட்ட திட்டங்களின் அடிப்படையில், பாதுகாப்பான கார்களை உருவாக்குவதில் டாடா முன்னேறியுள்ளதைக் காட்டுகின்றன. கார் கட்டுப்பாட்டை இழந்தால் ஆட்டோமேட்டிக்காக பாதுகாப்பை உறுதிசெய்தல், பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டால் பயணியின் தலையைப் பாதுகாத்தல், பாதசாரிகளின் பாதுகாப்பு முதலான எங்கள் சட்ட திட்ட வரையறைகளில், டாடா இதே போன்ற தலைமைத்துவப் பண்பைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என ஊக்கப்படுத்த விரும்புகிறோம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் subcompact SUV மாடல் எனப் பாராட்டப்படும் டாடா பன்ச் கார், மாருதி சுஸுகியின் `இக்னிஸ்’, மஹிந்திரா நிறுவனத்தின் KUV100 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக வந்துள்ளது.
#SaferCarsForIndia என்ற பிரசாரம் கடந்த 2014ஆம் ஆண்டு Global NCAP நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாதுகாப்பான கார்களை உற்பத்தி செய்வதையும், ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டு இந்தப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 2014 முதல் 2021 வரை, Global NCAP சார்பில் 45க்கும் பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த மதிப்பீட்டு திட்டங்களால் இந்திய கார்களின் பாதுகாப்புத் தரம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI