Tata Harrier EV: டாடா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மின்சார மாடலான ஹாரியர் காரின் விலை ரூ.21.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா ஹாரியர் மின்சார கார் அறிமுகம்:
ஆட்டோ எக்ஸ்போவில் வெறும் கான்செப்டாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், வலுவான ஆதரவால் உற்பத்திக்கு சென்று தற்போது ஹாரியர் மின்சார கார் எடிஷனாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த காரை, தனது மின்சார கார் பிரிவுகளில் முதன்மையானதாக டாடா நிலைநிறுத்தியுள்ளது. எந்தவொரு நிலப்பரப்பிலும் பயணிக்க ஏதுவான, ஆல்-வீல் ட்ரைவ் அம்சங்களை கொண்ட அந்நிறுவனத்தின் முதல் கார் இதுவாகும். Acti.ev+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் தொடக்க விலை, ரூ.21.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு வரும் ஜுலை 2ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா ஹாரியர் EV - வெளிப்புற வடிவமைப்பு
மின்சார எடிஷனின் வெளிப்புற வடிவமைப்பானது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹாரியரின் அமைப்பை பெரும்பாலும் எதிரொலிக்கிறது. இருப்பினும் இந்த மின்சார எடிஷனுக்கு என சில நுணுக்கமான வடிவமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. முன்பகுதியில் புதிய மூடப்பட்ட க்ரில், திருத்தப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் புதிய ஏரோ ஆப்டிமைஸ்ட் 19 இன்ச் அலாய் வீல்கள் இணைக்கப்பட்டுள்ளன. முன்புற கதவுகளில் EV வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு ரீதியாக வழக்கமான ஹாரியரை காட்டிலும் மின்சார எடிஷனானது 2 மிமீ நீளம் மற்றும் 22மிமீ உயரமாகும். அதேநேரம், வீல்பேஸ் 2,741 மிமீ ஆக அப்படியே தொடர்கிறது.
ஆல்-பிளாக் ஸ்டெல்த் எடிஷன்
ஹாரியர் மின்சார காரானது எம்பவர்ட் ஆக்சைட், னைனிடல் நாக்டர்னே, பிரிஷ்டின் ஒயிட் மற்றும் முற்றிலும் கிரே என நான்கு வண்ணங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த காரின் ஸ்டெல்த் எடிஷனையும் டாடா விற்பனை செய்கிறது. அதன்படி, உட்புறம் மற்றும் வெளிப்புறம் முற்றிலுமாக கருப்பு நிறங்களில் மட்டுமே இடம்பெறும்.
டாடா ஹாரியர் EV - உட்புற வடிவமைப்பு
வெளிப்புறத்தை போன்றே உட்புறத்திலும், மின்சார ஹாரியரானது அதன் இன்ஜின் அடிப்படையிலான எடிஷனில் இருந்து பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. அதேநேரம், உலகின் முதல் சாம்சங் நியோ QLED டிஸ்பிளே இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளது. இது டூயல் டோன் டேஷ்போர்டான 14.53 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீனிற்கு உதவுகிறது. அதோடு, டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, ஃபோர் ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஒளிரக்கூடிய டாடா லோகோ ஆகியவற்றுடன், 502 லிட்டர் பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது.
டாடா ஹாரியர் EV - அம்சங்கள்
ஹாரியர் மின்சார எடிஷனில் தொழில்நுட்ப அம்சங்களுக்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம். தொடுதல் அடிப்படையிலான HVAC கண்ட்ரோல் பேனல், செண்டர் கன்சோலில் ரோடரி ட்ரைவ் மோட் செலக்டர், எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு இதில் பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், வெண்டிலேய்டட் & பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், டால்பி அட்மாஸ் 5.1 உடன் கூடிய 10 ஸ்பீக்கர் ஹேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வெஹைகிள் டு வெஐகிள் ஃபங்சனாலிட்டி இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு OTA அப்டேட்ஸ், கனெக்டட் கார் டெக், நான்கு ட்ரைவ் மோட்கள், முற்றிலும் டிஜிட்டல் மயமான ரியர்வியூ மிர்ரர், ஆட்டோ பார்க் அசிஸ்ட், 6 டெரெயின் மோட்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, இந்த ஹாரியரானது வாகனத்திற்கு அருகே வேறு ஏதேனும் வாகனம் வந்தால் உணர்த்தக்கூடிய 540 டிகிரி சரவுண்ட் கேமராவை கொண்டுள்ளது. ஃபாஸ்டேக் மற்றும் மின்சார கார்களுக்கான சார்ஜ் ஆகியவற்றிற்கு மொபைல் பயன்படுத்தி கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக ட்ரைவ்பே எனும் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட லெவல் 2 ADAS மூலம் அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. காரில் உள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை லைவ் ஆக உடனடியாக ஒளிபரப்பும் திறன் கொண்ட, இந்த செக்மெண்டின் முதல் காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டாடா ஹாரியர் EV - பேட்டரி:
ஹாரியர் மின்சார எடிஷனில் மொத்தம் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, எண்ட்ரி லெவல் கார்களுக்கு 65KWh பேட்டரி ஆனது முன்புற ஆக்சிலில் உள்ள ஒற்றை மோட்டாருக்கான ஆற்றலை உற்பத்தி செய்கிறது. டாப் ஸ்பெக் கார் மாடல்களில் 75KWh LFP பேட்டரி இடம்பெற்றுள்ளது. இது இரண்டு ஆக்சில்களுக்கு தலா ஒன்று என வழங்கப்பட்டுள்ள மோட்ட்டார்களுக்கான ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 75KWh பேட்டரியை கொண்ட ரியர் வீல் ட்ரைவ் எடிஷன் 627 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் இந்த கார் 480 முதல் 505 கிலோ ரேஞ்ச் அளிக்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 10லிருந்து 100 சதவிகித சார்ஜ் செய்ய 10.7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 20 முதல் 80 சதவிகிதம் வரை வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம் என்றும் டாடா தெரிவித்துள்ளது.
விலை, போட்டியாளர்கள்:
65KWh பேட்டரி பேக் கொண்ட ரியல் வீல் ட்ரைவ் எடிஷனின் எண்ட்ரி லெவல் எடிஷனின் விலை ரூ.21.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை தற்போது வரை வெளியிடப்படவில்லை. விலை அடிப்படையில் மின்சார ஹாரியர் காரானது இந்திய சந்தையில், மஹிந்திராவின் புதிய BE 6, XEV 9E, ஜுண்டாயின் கிரேட்டா மற்றும் விரைவில் அறிமுகமாக உள்ள மாருதியின் இ-விட்டாரா உடன் போட்டியிட உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI