Suzuki Swift Production Halted: கனிம வள ஏற்றுமதிக்கு சீன அரசு விதித்துள்ள தடையால், ஸ்விஃப்ட் கார் மாடலின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் கார் உற்பத்தி நிறுத்தம்:

இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஸ்விஃப்ட் கார் மாடல், 169 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. . நடைமுறைக்கு உகந்தது, மலிவு விலை, நல்ல எரிபொருள் திறன் மற்றும் நீடித்த ஆயுள் போன்ற காரணங்களால் இந்த ஹேட்ச்பேக் கார் பொதுமக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இந்நிலையில் தான், ஸ்விஃப்ட் கார் மாடல் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்விஃப்ட் கார் உற்பத்தி நிறுத்தம் ஏன்?

சீனாவில் இருந்து அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதன் காரணமாக, ஸ்விஃப்ட் கார் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. அதில், உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக மே 26 தொடங்கி ஜுன் 6ம் தேதி வரையில், ஸ்போர்ட் மாடலை தவிர்த்து மற்ற அனைத்து ஸ்விஃப்ட் கார் எடிஷன்களின் உற்பத்தியும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்பிறகு உற்பத்தி தொடங்குமா? என்பது குறித்து விரிவான தகவல்கள் ஏதும் இல்லை. சீனாவில் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட ஜப்பானை சேர்ந்த முதல் கார் உற்பத்தி நிறுவனம் சுசூகி என கூறப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் நீடித்தால் பல நிறுவனங்களும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

சர்வதேச விநியோக சங்கிலி பாதிப்பு

பல்வேறு விதமான அரிய கனிம வளங்கள் மற்றும் மேக்னெட்ஸ் தொடர்பான கனிமங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் சீன அரசு தடை விதித்தது. இதன் காரணமாக உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், ஏரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் வாகனனங்களை உற்பத்தி செய்பவர்களுக்கான விநியோக சங்கிலி கடும் பாதிக்கப்பட்டுள்ளது.  ஐரோப்பாவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் தங்களது நிறுவன  செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. கனிம வள தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆதிக்கம்

கடந்த 2023ம் ஆண்டு சர்வதேச அளவில் உற்பத்தி செய்யப்பட்ட அரிய கனிம வளங்களில், 70 சதவிகிதம் சீனாவில் இருந்தே பெறப்பட்டுள்ளது. மேக்னைட் தொடர்பான கனிம வளங்களில் 90 சதவிகிதமும் அந்நாட்டில் இருந்தே பெறப்பட்டது. ஆனால், இந்த கனிமங்களின் ஏற்றுமதியின் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்தால், ஏற்றுமதிக்கான அனுமதி வழங்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சரிநிகர் வரி என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை தொடர்ந்து, சீனா இந்த கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது, மின்சார, ஹைப்ரிட் வாகன மோட்டார்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு அவசியமான, அரிய கனிம வளங்களில் சீனாவின் ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உலகளாவிய கார் உற்பத்தி சீனாவை எவ்வளவு சார்ந்து இருக்கிறது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவில் மாருதி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் ஸ்விஃப்டிற்கு தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை. அதேநேரம், இந்திய சந்தையிலும் கனிம வள கையிருப்பு கணிசமாக குறைந்து வருவதாக துறைசார் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவில் இருந்து வரக்கூடிய கனிமவளங்களில் இறக்குமதி சீராகாவிட்டால், உள்நாட்டிலும் மின்சார மற்றும் இன்ஜின் அடிப்படையிலான கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, ஆட்டோமொபைல் துறையை சேர்ந்தவர்கள் அடங்கிய ஒரு குழுவை, அடுத்தவாரம் சீனா பயணிக்க உள்ளது. அப்போது, அங்கிருந்து வழக்கமாக பெறப்படும் கனிம வளங்களை எந்தவித தாமதமுமின்றி பழைய பாணியிலேயே சீராக ஏற்றுமதி செய்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI