சமீபத்தில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தங்கள் வாகனங்களின் அப்டேட்டை மேற்கொண்டு அதிக பயன்பாட்டை ஊக்குவிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை வளர்ந்து வரும் நிலையில் அதில் தனியாக இடத்தைப் பிடிக்க சிம்பிள் எனர்ஜி நிறுவனம் முயன்று வருகிறது. இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளர்.. அவர் பேசியவற்றுள் இருந்து முக்கியமானவற்றை இங்கே கொடுத்துள்ளோம்...  


சுஹாஸ் ராஜ்குமார், `நாங்கள் தற்போது புதிதாக ஆய்வுகளுக்கும் மேம்பாட்டுக்குமான இடத்தை அதிகரித்து சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தில் செயல்படுவதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையும் 50 என்பதில் இருந்து அதிகரித்து சுமார் 200 என்ற அளவை எட்டியுள்ளது. வரும் ஜூன் மாதத்திற்குள், இந்த எண்ணிக்கையை 350 என உயர்த்தவும் முடிவு செய்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார். 



சுஹாஸ் ராஜ்குமார்


தொடர்ந்து பேசிய சுஹாஸ் ராஜ்குமார், `நாங்கள் உருவாக்கியுள்ள வாகனங்களின் திறனைச் சுமார் 96 சதவிகிதம் என்ற அளவுக்கு மேம்படுத்தியுள்ளோம். மேலும் வாகனத்தின் வடிவமைப்பு, சமநிலை, எடை பகிர்வு முதலானவற்றை மேம்படுத்தியுள்ளோம். இந்தப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வாகனங்களின் தயாரிப்பு சோதனை ஓட்டமாக ஏப்ரல் மாதத்திலும், உற்பத்திப் பணிகள் மே மாதத்தில் தொடங்கும். எங்கள் தொழிற்சாலையின் அளவின் படி, ஆண்டுதோறும் 5 லட்சம் வாகனங்களையும், அதிகபட்சமாக அதனை 10 லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்ய முடியும்’ எனக் கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், `நாடு முழுவதும் 3 வகையிலான பயனாளர்கள் இருக்கின்றனர். ப்ரீமியம், நடுத்தர, மாஸ் மார்க்கெட் ஆகிய மூன்று வகைகளில், நாங்கள் ப்ரீமியம் வகைப் பயனாளர்களுக்கு வாகனங்களைத் தயாரிக்கிறோம். எனினும் எங்களிடம் 70 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையிலான விலை மதிப்புக்கும் வாகனங்கள் இருக்கின்றன. ஆனால் மாஸ் மார்க்கெட்டுக்கான விலை 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு வகையினருக்கும் ஏற்ற வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டின் முடிவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார். 



எலக்ட்ரிக் வாகனங்கள் எளிதில் தீப்பிடித்துக் கொள்வதாக எழுந்துள்ள புகாரைப் பற்றி பேசியுள்ள சுஹாஸ் ராஜ்குமார், `இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவது நல்லது. ஏனெனில் இதன்மூலம் மக்கள் ஆராய்ச்சி பற்றியும், பேட்டரியின் தன்மை பற்றியும், அதன் பாதுகாப்பு குறித்தும் சிந்திக்கத் தொடங்குவார்கள். சிம்பிள் எனர்ஜி, அல்ட்ராவைலெட், ஏதெர் முதலான நிறுவனங்கள் பாதுகாப்பான வாகனங்களை உருவாக்க முயன்று வருவது இதன்மூலம் மக்களுக்குத் தெரியும். மேலும், இந்த விழிப்புணர்வு காரணமாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான துறை மேலும் வளரும்’ என்று கூறியுள்ளார். 


Car loan Information:

Calculate Car Loan EMI