GST On EV: ஜிஎஸ்டி திருத்தம் மின்சார கார்களுக்கான விலையை எகிறச் செய்வதோடு, காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான அரசின் இலக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
மின்சார கார்களுக்கு 28% வரி?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் வளர்ச்சி என்பதே அண்மையில் தான் தொடங்கியது. ஆனால், விரைவில் அமலுக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம், மின்சார வாகன சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்கள் குழு வழங்கியுள்ள பரிந்துரையில் 40 லட்சத்திற்கும் அதிகமான விலையை கொண்ட, மின்சார கார்கள் மீதான வரியை 5 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த பரிந்துரை அமலுக்கு வந்தால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசின் முயற்சி தோல்வியுறுவதோடு, வளர்ச்சி ஏற்பட்டுள்ள சரியான நேரத்தில் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துவண்டுபோகச் செய்யும் என கூறப்படுகிறது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மாற்றங்கள்:
விலை தொடர்பான எந்தவித பரிசீலனையும் இன்றி தற்போது அனைத்து வகையான மின்சார கார் மாடல்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால், புதிய பரிந்துரைகளின்படி,
- 20 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான விலை கொண்ட கார்களுக்கு 18% வரி வசூலிக்கவும்
- 40 லட்சத்திற்கும் அதிகமான விலை கொண்ட கார்களுக்கு 28 சதவிகிதம் வரி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் கார்களின் விலை 22 முதல் 23 சதவிகிதம் வரை உயரக்கூடும். 25 லட்சம் மதிப்பிலான மின்சார காருக்கு கூடுதலாக 5 லட்சம் வரை செலவழிக்க நேரிடலாம். அதேநேரம், 40 லட்சம் மதிப்பிலான காருக்கு கூடுதலாக 8 முதல் 10 லட்சம் வரை செலவாகக் கூடும்.
பாதிக்கப்படக்கூடிய கார்கள்:
புதிய பரிந்துரைகள் அமலுக்கு வந்தால், 20 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான விலை கொண்ட கார்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக மஹிந்த்ராவின் புதிய மின்சார கார்களான BE 6, XEV 9e ஆகியவை இந்த பிரிவில் தான் இடம்பெறுகின்றன. இதுபோக, அதிகம் விற்பனையாகக் கூடிய டாடா ஹாரியர் மற்றும் ஹுண்டாய் க்ரேட்டா ஆகிய மின்சார கார்களும் பெரும் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். கியா காரென்ஸ் க்ளாவிஸ், MG ZS EV, MG சைபர்ஸ்டர் கார்களின் விலை எகிறக்கூடும்.
ப்ரீமியம் செக்மெண்டில் உள்ள டெஸ்லா மாடல் Y, BYD-யின் அனைத்து மாடல்களும், மெர்சிடஸ், BMW, ஆடி ஆகிய கார் நிறுவனங்களின் மின்சார மாடல்களும் விலை உயர்வை எதிர்கொள்ளும். உதாரணமாக 60 முதல் 68 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படும் டெஸ்லா மாடல் ஒய், புதிய பரிந்துரை அமலுக்கு வந்தால் 75 லட்சம் முதல் 85 லட்சம் வரை விற்பனை செய்யப்படலாம்.
சிக்கலில் மின்சார கார சந்தை:
ஜிஎஸ்டி சீர்திருத்தம் இல்லாமலேயே இந்திய மின்சார கார் சந்தை ஏற்கனவே பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உதாரணமாக,
- மறுவிற்பனையின் போது பெரிய மதிப்பு இல்லாதது
- பேட்டரியை மாற்றுவதற்கு பெரிய செலவாவது உரிமையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது
- மெட்ரோ நகரங்களை தாண்டினால் அதிகளவில் பொது சார்ஜிங் வசதிகள் இல்லாதது
- காலம் காலமாக பின்பற்றி வரும் இன்ஜின் தொழில்நுட்பத்திற்கு மாற்றான் புதிய தொழில்நுட்பத்தை நம்பலாமா என்ற சந்தேகம் ஆகியவை, மின்சார கார் சந்தையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.
அச்சத்தில் முதலீட்டாளர்கள்
உள்நாட்டிலேயே மின்சார கார்களை உற்பத்தி செய்வதற்காக மஹிந்த்ரா, டாடா,ஹுண்டாய், கியா உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளன. அவை பெரும்பாலும், நடுத்தர மக்களுக்கான 20 முதல் 40 லட்சம் மதிப்பிலான கார்களின் உற்பத்திலேயே கவனம் செலுத்துகின்றன. இந்நிலையில் ஜிஎஸ்டி உயர்ந்தால், அந்த பிரிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் பெரிய திட்டங்களை ஏற்படுத்த முனைப்பு காட்டும் புதிய நிறுவனங்களான, வின்ஃபாஸ்ட் மற்றும் டெஸ்லா போன்றவை பின்வாங்கக் கூடும். ஒரே நாளில் அந்த நிறுவனங்களின் கார்களின் விலை உயர்ந்தால், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தோல்வி காணலாம்.
பெரிய பிரச்னைகள் உருவாகலாம்
மின்சார கார்கள் மீதான கூடுதல் ஜிஎஸ்டி வரி என்பது அரசுக்கு வருவாயை எற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நீண்ட கால பார்வையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக மின்சார கார்களுக்கு மாறும் மக்களின் முடிவு கைவிடப்படுவது, முதலீட்டாளர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்துவது, காற்று மாசுபாட்டை குறைக்கும் அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகியவை ஏற்படலாம். எனவே, உடனடி வருவாயை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நீண்ட காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே, ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டுமானால், அவற்றின் விலையும், அணுகலும் எளிதாக இருக்க வேண்டும் என்பது அவசியமான கொள்கை முடிவுகளாக இருக்க வேண்டி உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI