சென்னையின் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய கனமழை, ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. இந்நிலையில், மேகவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக இந்த திடீர் கனமழை பெய்திருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேகவெடிப்பா.?
சென்னையில் நேற்று இரவு 11 மணி அளவில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்த ஆண்டு சென்னைக்கு முதல் மேகவெடிப்பு நிகழ்வு நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல இடங்களில், ஒரு மணி நேரத்திற்குள் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு என்ன.?
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும்(31.08.25), நாளையும்(1.09.25) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஓரிரு இடங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதோடு, செப்டம்பர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் தான், சென்னையில் நேற்று இரவு முழுவதுமே பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக, மணலியில் 27 செ.மீட்டரும், விம்கோ நகரில் 23 செ.மீட்டரும், கொரட்டூரில் 18 செ.மீட்டரு, கத்திவாக்கத்தில் 13 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில, இன்று காலை 10 மணி வரை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.