New Maruti Swift: மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் கார் மாடல், கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டது. 


புதிய ஸ்விஃப்ட் கார் மாடல்:


மாருதி நிறுவனம் கடந்த ஆண்டு தனது புதிய ஸ்விஃப்ட்டை  சர்வதேச அளவில் காட்சிப்படுத்தியது. இந்நிலையில் அந்த புதிய ஸ்விஃப்ட் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்பதை பல்வேறு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றனர். புதிய ஸ்விஃப்ட் கார் மாடல் இந்த ஆண்டு மாருதியின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும். இதனை தொடர்ந்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய டிசையர் காம்பாக்ட் செடானும் வெளியிடப்பட உள்ளது. புதிய மாருதி ஸ்விஃப்ட் புதிய அதேசமயம் நன்கு தெரிந்த தோற்றம், புதிய உட்புறம், கூடுதல் அம்சங்கள் கொண்டிருக்கும். அதோடு,   புதிய பெட்ரோல் பவர் பிளாண்ட் அம்சங்களையும் பெறுகிறது.


புதிய ஸ்விஃப்டின் வடிவமைப்பு விவரங்கள்:


இந்தியாவில் புதிய ஸ்விஃப்ட் காரின் சோதனை ஓட்டத்தின்போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின. இது வெளிநாட்டில் விற்கப்பட்டதைப் போலவே தோற்றமளிக்கும் என்றாலும், உள்நாட்டைச் சார்ந்த சில மாற்றங்கள் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட் சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கும், முன் மற்றும் பின்புற பம்பர்களைப் பெறும் என தெரிகிறது.  ஆனால் மாற்றங்கள் குறைவாக இருக்கும். நம்பர் பிளேட்டிற்கான இடவசதி பெரியதாக இருக்கும். மேலும் அது கருப்பு நிற கூறுகளைப் பெறாது.  அலாய் வீல் வடிவமைப்பும் சர்வதேச காரைப் போலவே உள்ளது, ஆனால் மிட்-ஸ்பெக் வகைகளில் தனித்துவமான வீல் டிசைன் இருக்கும் என கூறப்படுகிறது.


பாதுகாப்பு அம்சங்கள்:


இந்தியா ஸ்விஃப்ட்டில் உள்ள சி-பில்லர், ஹூண்டாய் i20 போலவே கருப்பு நிறமாக இருக்கும்.  ஆனால் பின்புற பம்பருக்கு பதிலாக ரிவர்ஸ் கேமரா பூட் மூடியில் வைக்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் வேரியண்டில் முழு-எல்ஈடி விளக்குகள் இருக்கும். பாதுகாப்பிற்காக முன்பக்கத்தில், ஆறு ஏர்பேக்குகள்  EBD உடன் ABS மற்றும் ESP ஆகியவை ஸ்டேண்டர்டாக இருக்கும். பின்புற பயணிகளுக்கு மூன்று-பாயின்ட் சீட்பெல்ட்கள் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் விற்கப்படும் மாடல்களில் காணப்படும் 360 டிகிரி கேமரா அல்லது ADAS, இந்தியாவில் விற்பனைக்கு வரும் காரில் கிடைக்காது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.


புதிய Z சீரிஸ் இன்ஜின்:


K சீரிஸ் 1.2-லிட்டர், நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, கடந்த ஆண்டு ஜப்பானில் ஸ்விஃப்ட்டில் அறிமுகமான  புதிய Z சீரிஸ் 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் இன்ஜின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த இன்ஜின் உமிழ்வு, செயல்திறன் மற்றும் வெளியீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி,  இந்தியாவிற்கான மாடலில் குறிப்பிட்ட மாற்றங்களைப் பெறும். புதிய Z சீரிஸ் பொருத்தப்பட்ட ஸ்விஃப்ட்டின் ஆற்ர்றலானது, முந்தைய  K12 இன்ஜினைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி இது 90hp மற்றும் 113Nm ஐ வெளிப்படுத்தும். மேலும் மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்விஃப்ட் டிரான்ஸ்மிஷன்கள் தொடர்பான எந்த தகவலும் இல்லை.  ஆனால் மாருதி 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் தொடரும் என்று நம்பப்படுகிறது. 


புதிய தோற்றம், அதிக அம்சங்கள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்ட இன்ஜினுடன், விற்பனை எண்ணிக்கை மற்றும் பிரபலம் ஆகியவற்றின் அடிப்படையில், புதிய ஸ்விஃப்ட் பழைய மாடலின் பாரம்பரியத்தை மேம்படுத்தும் என்று மாருதி நிறுவனம் எதிர்பார்க்கிறது. விலை போன்ற கூடுதல் விவரங்கள், அதிகாரப்பூர்வமாக அறிவ்ப்பின்போது வெளியாகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI