Next Gen Tata Nexon: டாடா நெக்ஸானின் அடுத்த தலைமுறை எடிஷனானது 2027ம் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த தலைமுறை டாடா நெக்ஸான்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடும் போட்டி நிலவும் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், முதன்மையான கார் மாடல்களில் ஒன்றாக டாடாவின் நெக்ஸான் திகழ்கிறது. விலைக்கு நிகரான அம்சங்கள், வசதிகள், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங், 4 வகையிலான எரிபொருள் ஆப்ஷன்கள், நாட்டிலேயே அதிக வேரியண்ட்களை கொண்ட மாடல் என, பயனர்கள் எத்ர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சிறந்த கார்களில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் மாருதியின் ப்ரேஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் உள்ளிட்ட போட்டியாளர்கள் தங்களை வலுப்படுத்தி வரும் நிலையில், டாடா நிறுவனமும் நெக்ஸானிற்கு அடுத்த தலைமுறைக்கான அப்டேட்களை வழங்க தயாராகி வருகிறதாம். அந்த வகையில் இந்த காரில் இடம்பெற உள்ள புதிய அம்சங்கள் என்ன என்ற எதிர்பார்ப்புகள் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அடுத்த தலைமுறை நெக்ஸான் - டிசைன்
தற்போதைய தலைமுறை டாடா நெக்ஸான், X1 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. இது கடந்த 1998-ல் டாடா இண்டிகா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே இருந்தாலும், இதுவரை பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை நெக்ஸானுக்கு, சியராவில் உள்ள தனது சமீபத்திய ஆர்கோஸ் ப்ளாட்ஃபார்மை டாடா பயன்படுத்தகூடும். இந்த புதிய தலைமுறையில், மற்ற டாடா கார்களைப் போலவே நெக்ஸானும் நவீன தோற்றத்தைப் பின்பற்றும் என்று நாம் எதிர்பார்க்கலாம். முன்பக்கத்தில், டாடா நிறுவனம் மெலிதான க்ரில், செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகள், முழு அகல எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்களை வழங்க வாய்ப்புள்ளது.
அடுத்த தலைமுறை நெக்ஸான் - அம்சங்கள், வசதிகள்
ஏற்கனவே விலைக்கு நிகரான பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள நெக்ஸான், புதிய மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, மேம்படுத்தப்பட்ட சவுண்ட் சிஸ்டம் மற்றும் AR HUD ஆகியவற்றைக் கொண்டு மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி, பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், காற்றோட்ட வசதியுள்ள இருக்கைகள் மற்றும் பல அம்சங்களும் வழங்கப்படலாம். புதிதாக வடிவமைக்கப்பட்ட ப்ளாட்ஃபார்ம் இருந்தபோதிலும், டாடா நெக்ஸான் தொடர்ந்து பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில், ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை அடங்கும்.
அடுத்த தலைமுறை நெக்ஸான் - பவர்ட்ரெயின்
தற்போதைய நெக்ஸானின் மிகப்பெரிய விற்பனைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, அது வழங்கும் பலவிதமான பவர்டிரெய்ன்கள் ஆகும். இதை அப்படியே தக்கவைத்து, அடுத்த தலைமுறை மாடலிலும் இதேபோன்ற சிஎன்ஜி, பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார ஆப்ஷன்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல்+CNG, 1.5-லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின்களும், இவற்றுடன் கூடுதலாக 30kWh மற்றும் 45kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களும் அடங்கும். இந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன், 6-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் AMT மற்றும் 7-ஸ்பீட் DCA கியர்பாக்ஸ்களையும் பயனர்கள் தேர்வு செய்யலாம். ஹைப்ரிட் பவர்ட்ரெய்னை ஆப்ஷனும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
அடுத்த தலைமுறை நெக்ஸான் - போட்டியாளர்கள்
புதிய தலைமுறை நெக்ஸான் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நாட்டின் மிகவும் போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் தனது பயணத்தை தொடரும். அந்த வகையில் இதன் முக்கியப் போட்டியாளர்களாக மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், ஹுண்டாய் வென்யு, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவை விளங்கும்.
அடுத்த தலைமுறை நெக்ஸான் - வெளியீடு & விலை
சாலை பரிசோதனை இன்னும் தொடங்கப்படாதது அடுத்த தலைமுறை நெக்ஸானின் வெளியீட்டிற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதை உணர்த்துகிறது. இருப்பினும், புதிய தலைமுறை நெக்ஸான் 2027-ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். மாற்றியமைக்கப்பட்ட ப்ளாட்ஃபார்ம் மற்றும் கூடுதல் அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இதன் விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ. 17 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI