New Compact SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக உள்ள 5 புதிய காம்பேக்ட் எஸ்யுவிகள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
காம்பேக்ட் எஸ்யுவி கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடும் போட்டி நிலவும் பிரிவுகளில், காம்பேக்ட் எஸ்ய்வி குறிப்பிடத்தக்கதாகும். எஸ்யுவி கார்களுக்கான நுழைவுப்புள்ளியாக இருப்பதோடு, அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ், தரமான இருக்கை வசதிகள், பரவலான இடவசதி, வலுவான பவர் ட்ரெயின் மற்றும் அணுகக் கூடிய விலைகள் மக்கள் காம்பேக்ட் எஸ்யுவியை நாட அதிக ஆலோசனைகளை வழங்குகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 5 புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது அந்த பிரிவில் உள்ள போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
1. புதிய தலைமுறை ஹுண்டாய் வென்யு
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹுண்டாயின் அடுத்த தலைமுறை எடிஷனின், சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியுள்ளன. நடப்பாண்டு இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாம் தலைமுறை வென்யு கார் மாடலானது, முற்றிலும் புதிய வெளிப்புற வடிவமைப்பை பெற உள்ளது. முன்புறமானது கிரேட்டா அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்டுள்ள இந்த காரானது, குவால் எல்இடி முகப்பு விளக்குகளுடன் இணைக்கப்பட்ட எல்இடி DRL-களை கொண்டுள்ளது. அதேநேரம் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யாமல், ஏற்கனவே உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் tGDI பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கிறது. இதன் விலை சென்னையில் தற்போது ரூ.9.24 லட்சம் முதல் ரூ.13.62 லட்சமாக உள்ளது. இரண்டாம் தலைமுறை காரின் விலை புதிய அப்டேட்களால் கணிசமாக உயரக்கூடும்.
2. மஹிந்திரா XUV3XO EV
மஹிந்திராவின் XUV3XO மின்சார கார் மாடலும் இறுதி வடிவம் பெற்று, சாலையில் சோதனை மேற்கொண்டபோது பலரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதியில் இந்த கார் அறிமுகப்படுத்தக்கூடும். S240 என்ற கோட்நேம் கொண்ட இந்த கார், இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் மற்றும் கியா சைரோஸ் போன்ற மின்சார கார் மாடல்களுடன் போட்டியிடும். மின்சார வாகனம் என்பதற்கான தனித்துவமான சில வடிவமைப்புகளை கொண்டிருந்தாலும், இதன் முழுமையான வடிவமைப்பானது இன்ஜின் அடிப்படையிலான XUV3XO எடிஷன் உடன் பகிர உள்ளது. XUV400 மாடலில் உள்ள 34.5 KWh மற்றும் 39.4 KWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்களை புதிய கார் பின்பற்றும் என கூறப்படுகிறது. இது 375 முதல் 456 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 15 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. டாடா பஞ்ச் ஃபேஸ்லிப்ஃட்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி ஆன டாடா பஞ்ச்சின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. சோதனை ஓட்ட புகைப்படங்களின் அடிப்படையில் பார்த்தால், புதிய எடிஷனின் வெளிப்புறமானது பஞ்ச் காரின் மின்சார எடிஷனின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. உட்புறத்திலும் இதே பாணியே தொடரும் என கூறப்படுகிறது. கூடுதலாக உட்புறத்தில் பெரிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் இடம்பெறலாம். இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி சிஎன்ஜி உடன் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷனே தொடரும் என கூறப்படுகிறது. தற்போதைய பஞ்ச் காரானது ரூ.7.43 லட்சம் முதல் ரூ.12.82 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இது லிட்டருக்கு 18 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
4. ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட்:
கைகர் கார் மாடலின் ஃபேஸ்லிப்ஃட் எடிஷன் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அப்டேடட் வெர்ஷனானது புதிய முகப்பு விளக்குகள், பம்பர்கள், டெயில் லைட் மற்றும் புதிய அலாய் வீல்கள் உள்ளிட்ட சில லேசான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. கூடுதலாக, இந்த கார் அறிமுகத்தின் போது, நிறுவனத்தின் புதிய லோகோவையும் வெளியிட ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். காரின் உட்புறத்தில், சில கூடுதல் அம்சங்களுடன் டேஷ்போர்டின் லே-அவுட் திருத்தப்படலாம். 1.0 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்கிறது. தற்போதைய எடிஷனின் விலை ரூ.7.24 லட்சத்தில் தொடங்கி, ரூ.13.84 லட்சம் வரை நீள்கிறது. லிட்டருக்கு 17 முதல் 20 கிமீ வரை மைலேஜ் நீள்கிறது.
5. மாருதி சுசூகி ஃப்ராங்ஸ் ஹைப்ரிட்
மாருதி நிறுவனம் தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட HEV சீரிஸ் ஹைப்ரிட் பவர்ட்ரெயினை, ஃப்ராங்ஸ் ஃபேஸ்லிஃப்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அப்டேட் செய்யப்பட்ட இந்த கிராஸ் ஓவர் காரானது, நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இதில் ஹைப்ரிட் சிஸ்டம் மட்டுமின்றி, திருத்தப்பட்ட வெளிப்புற டிசைன், புத்துயிர் பெற்ற உட்புறம் மற்றும் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது. YTB என்ற கோட்நேம் மூலம் அறியப்படும் இந்த காரானது அதே 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜினை தொடர்கிறது. புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் மூலம், எரிபொருள் திறன் அதிகரித்து லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய எடிஷனானது வேரியண்ட் அடிப்படையில் லிட்டருக்கு 20 முதல் 28 லிட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. இதன் விலை ரூ.7.54 லட்சம் முதல் ரூ.13.06 லட்சம் வரை நீள்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI