நான்கு புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆண்டுகளில் 35 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைத்து வரலாற்று சாதனை படைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆசிரியர் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்பட வேண்டும் என்றும் காலியாக உள்ள 86 முதல்வர் பணியிடங்கள் நிரப்ப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதிய கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்கள் குறைக்கப்பட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உயர் கல்வியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அரசு கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும் .
தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள 4 கலை அறிவியல் கல்லூரிகளையும் சேர்த்து 2025- 26 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கியும், நான்கு ஆண்டுகளில் மட்டும் 35 புதிய அரசு கலை அறிவியல் தொடங்கப்பட்டும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்விப் பணிகள் பாதிப்பு
ஆனால் 15,000 நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 5000 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 7300 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2700 பணியிடங்களில் ஆசிரியர் நியமனம் இல்லை.
புதிய கல்லூரிகளுக்கு, அருகில் உள்ள கல்லூரிகளில் இருந்து நிரந்தர ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் பணியமர்த்தப் படுகின்றனர். இதனால் ஏற்கனவே இயங்கி வரும் கல்லூரிகளில் கல்விப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் விரைந்து நிரப்பிட வேண்டும்.
மேலும், புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்போது, முதலாம் ஆண்டிற்கு வழக்கமாக 17 ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பதல் அளிக்கப்படும்.
ஆசிரியர் பணியிடங்கள் குறைப்பு
ஆனால் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு முதலாம் ஆண்டிற்கு 5 ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டு 12 இடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியரல்லா பணியாளர்கள் 17 அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கல்லூரியின் நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களை கவனிக்கும் நிதியாளர் உள்ளிட்ட மூன்று பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
எனவே, கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கினை கருத்தில் கொண்டு மேற்கண்ட முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் விரைந்து நிரப்பிட வேண்டும். அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 86 முதல்வர் பணியிடங்களை நிரப்பி நிர்வாக செயல்பாடுகள் மேம்பட வழிவகை செய்ய வேண்டும்.
உயர் கல்வியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அரசு கல்லூரி ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.