Two Wheeler : இந்தியாவில் அறிமுகமாக உள்ள அதிரடி டூ - வீலர் வாகனங்கள்.. விலையும், கூடுதல் விவரங்களும்

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாக உள்ள 5 புதிய இருசக்கர வாகன மாடல்கள், இத்தாலியில் நடைபெற்ற பிரமாண்ட கண்காட்சியில் இடம்பெற்றன.

Continues below advertisement

பல்வேறு காரணங்களால் மின்சார வாகனங்களின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்து வந்தாலும், எரிபொருட்களை கொண்டு செலுத்தக்கூடிய வாகனங்கள் மீதான ஈடுபாடு இன்னும் முழுமையாக குறையவில்லை என்பதே உண்மை. அதன் காரணமாகவே, வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதுப்புது அம்சங்களுடன் பல்வேறு புதிய மாடல் இருசக்கர வாகனங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தயாரிக்கப்படும் புதிய வாகனங்களுக்கான, அறிமுக நிகழ்ச்சி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்றது. EICMA 2022 எனப்படும் இந்நிகழ்ச்சியில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

Continues below advertisement

அந்த வகையில் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள 5 புதிய இருசக்கர வாகன மாடல்கள், இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. ராயல் என்பீல்டு, ஹோண்டா, சுசுகி ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய இருசக்கர வாகனங்களின் மாடல்கள், பயனாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

1. ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீடியர் 650

பயனாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த  ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீடியர் 650 மாடல் வாகனம் EICMA 2022 கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டது. கோவாவில்  நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2022 ரைடர் மேனியா விழா நிகழ்ச்சியில்  சூப்பர் மீடியர் 650 ரக வாகனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் 648cc  பாரலல்லெல் டிவின் இன்ஜின் கொண்ட, 3வது மாடலாக சூப்பர் மீடியர் 650 விற்பனைக்கு வர உள்ளது. இரண்டு நிறங்களில் சந்தைக்கு வர உள்ள இந்த வாகனத்தின் விலை, ரூ.3.25 லட்சத்திலிருந்து ரூ.3.55 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

2. ஹோண்டா XL750 டிரான்சல்ப்

ஹோண்டா நிறுவனம் 750cc லிக்விட் கூல்ட்,  பாரலல்லெல் டிவின்  இன்ஜின் கொண்ட, XL750 டிரான்சல்ப் இருசக்கர வாகனத்தை காட்சிப்படுத்தியது. 92 குதிரைத்திறன், 75Nm இழுவிசை கொண்ட இந்த இருசக்கர வாகனம் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தபப்ட உள்ளது. அனைத்து நபர்களாலும் வாங்கக்கூடிய வகையில் XL750 டிரான்சல்ப் விலை இருக்கும் என, ஹோண்டா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

3. ஹோண்டா EM1 e: 

ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான EM1 e வாகனமும் EICMA 2022 கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் தூரம் வரையில் இந்த வாகனத்தில் பயணிக்க முடியும் எனவும், பேட்டரியை ஸ்வாப் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் ஐரோப்ப நாடுகளில் ஹோண்டாவின் EM1 e ரக ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் எனவும், இந்திய சந்தைக்கு வர கூடுதல் காலம் அகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


                                                CL500 Scrambler (COURTESY:NEWS MEXABOUT)

4. ஹோண்டா சிஎல் 500 ஸ்கிராம்ப்லர்

1960 மற்றும் 70-களில் வெளியான சிஎல் பைக் மாடல்களின் வகையில், புதிய சிஎல் 500 ஸ்கிராம்ப்லர் பைக்கின் தோற்றம் காட்சியளிக்கிறது. ஹோண்டாவின் 500cc திறன் கொண்ட பைக்குகளில் இடம்பெற்று இருந்த இன்ஜின் தான் இந்த புதிய ரக பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. 45.9 குதிரைத்திறன் மற்றும் 43.4Nm இழுவிசை கொண்ட. சிஎல் 500 ஸ்கிராம்ப்லர் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.6 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

5. சுசுகி வி-ஸ்டோர்ம் 800DE

தொலைதூர பயணங்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள சுசுகி வி-ஸ்டோர்ம் 800DE வாகனம், 776cc பாரலல்லெல் டிவின் லிக்விட் கூல்ட் இன்ஜினை பெற்றுள்ளது. விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள இந்த வாகனத்தின் விலை, ரூ.11 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola