யூடியூப் சேனல் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் இளைஞர் ஒருவரை தாக்கி கடத்திய கும்பலை காவல்துறையினர் ஒரு மணிநேரத்தில் கைது செய்தனர்.


தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் சின்னசாமிதம்பி, தனது தம்பி ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து தனியாக சேனல் நடத்தி வருகின்றனர். இவர்கள் நண்பர்களாக இருந்தாலும், யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. லைக் எவ்வளவு பேர் போடுகிறார்கள்? எவ்வளவு பேர் தங்களது சேனல்களுக்கு பின்தொடர்கிறார்கள்? என்று அவர்களுக்கு இடையே போட்டி இருந்துள்ளது.


யூடியூப் சேனலை பொறுத்தவரை சப்ஸ்கிரைபர்கள் மற்றும் லைக்ஸ்தான் முக்கியம். எவ்வளவு பேர் பின்தொடர்கிறார்கள், எவ்வளவு பேர் லைக்ஸ் போடுகிறார்களோ அதற்கேற்ப சேனலின் வளர்ச்சி இருக்கும். வருமானமும் இருக்கும். ஒரு சேனலுக்கு எப்போதும்போல லைக்ஸ் வந்தால் பிரச்னை இல்லை. திடீரென லைக்ஸ்கள் அதிகரித்தால், அந்த சேனலை யூடியூப் நிர்வாகம் முடக்கி விளக்கம் கேட்கும் என்று சொல்லப்படுகிறது. 


திடீரென சின்னசாமி யூடியூப் சேனலில் வ்யூவர்ஸ் அதிகமாக காட்டி சேனல் லாக் செய்யும் நிலைக்கு வந்துள்ளது. இந்த செயலுக்கு ஆனந்தகுமார்தான் காரணம் என்று நினைத்து சின்னசாமி அவரை ஏதாவது செய்ய திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் பகலில் அவருடைய தர்மபுரி அலுவலகத்துக்கு சின்னசாமி 12 பேருடன் சென்றுள்ளார். அப்போது ஆனந்தகுமாருக்கும், சின்னசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றியுள்ளது. ஆனந்தகுமாரை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதோடு காரில் கடத்திச் சென்றனர். 


இந்த தகவலறிந்து தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஒரு படையும், டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படையும் கடத்தல்காரர்களை தேடினர். ஒரு பிரிவினர் கடத்தல் காரை சினிமா பாணியில் பின்தொடர்ந்து சென்று குண்டல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சுற்றிவளைத்தனர். காரில் இருந்தவர்களையும்,  டூவிலரில் வந்தவர்களையும் போலீசார் பிடித்தனர்.


போலீசார் சினிமா பாணியில் பரபரப்பாக கடத்தல் கும்பல்களை தேடிப் பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 70 செல்போன், 6 பைக், ஒரு கார், 5 லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் ஆனந்தகுமார் யூடியூப் சேனல் அலுவலகத்தில் பணியாற்றும் பிரேம்குமார் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். 


 சின்னசாமி உள்ளிட்ட 12 பேர் கும்பல் ஆனந்தகுமாரை தாக்கி கடத்தியதாகவும் 70 செல்போன், 5 லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாகவும் தெரிவித்தார். அதன்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணயில் யூடியூப் சேனல் நடத்துவதில் பிரச்சனை காரணமாக இப்படி நடத்தியதாக சின்னசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து சின்னசாமி,  சீராளன் , சுந்தரம், ரவி, முருகன், ராமு, சுரேஷ், சதீஷ் , பெரியசாமி , சந்திரன், தினேஷ்குமார், மணி  ஆகிய 12 பேரை கைது செய்தனர்.