MG Hector Plus: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் மாறியுள்ளது.

எம்ஜி ஹெக்டர் பிளஸ் கார் விலை உயர்வு:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனம் சார்பில் சிறப்பாக விற்பனையாகும், சில கார் மாடல்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஹெக்டர் பிளஸ் மாடல் காரும் ஒன்றாகும். அளவு மற்றும் வலுவான தோற்றத்திற்கு பெயர்போன இந்த 6 மற்றும் 7 சீட்டர் எஸ்யுவியின் அனைத்து வேரியண்ட்களும் தற்போது விலை உயர்வை எதிர்கொண்டுள்ளது. ஒருவேளை இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால், அதிகபட்சமாக 30 ஆயிரத்து 400 ரூபாயை நீங்கள் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.

எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரின் புதிய விலை:

கோமெட் மின்சார கார், ஆஸ்டர், ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் என அனைத்து கார் மாடல்களின் விலையையும் எம்ஜி உயர்த்தியுள்ளது. ஹெக்டர் பிளஸ்ஸில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என வேறுபாடின்றி அனைத்து ட்ரிம்களிலும் விலை உயர்ந்துள்ளது. எந்தவொரு ட்ரிம்மிற்கும் விலக்கு வழங்கப்படவில்லை. அதன்படி, இதன் விலை ரூ.19.35 லட்சத்தில் தொடங்கி ரூ.24.24 (எக்ஸ் - ஷோரூம்) லட்சம் வரை நீள்கிறது. பேஸ் ட்ரிம்மான செலக்ட் வேரியண்டிற்கு கூட விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் - எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை உயர்வு?

ஹெக்டர் பிளஸ்ஸின்பெட்ரோல் எடிஷனில் செலக்ட் ப்ரோ 7 சீட்டர் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்டின் விலை ரூ.19.10 லட்சத்தில் இருந்து ரூ.19.35 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.25,500 உயர்ந்துள்ளது. அதேநேரம், CVT வேரியண்டின் விலை ரூ.26,700 உயர்ந்துள்ளது.  தொடர்ந்து முன்னோக்கி போகையில் ஷார்ப் ப்ரோ ட்ரிம்மில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் வேரியண்ட்களின் விலை முறையே, ரூ.28,100 (மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) மற்றும் ரூ.29,300 (CVT) உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் டாப் எண்ட் ட்ரிம்மான சேவ்வி ப்ரோ CVT வேரியண்டின் விலை அதிகபட்சமாக, 30 ஆயிரத்து 400 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் - எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை உயர்வு?

டீசல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்களின் வேரியண்ட்களும் குறிப்பிடத்தக்க விலை உயர்வை சந்தித்துள்ளன. பேஸ் ஸ்டைல் வேரியண்டின் விலை 23 ஆயிரத்து 900 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் ப்ரோ 7 சீட்டர் வேரியண்டின் விலை 27 ஆயிரம் ரூபாயும், ஸ்மார்ட் ப்ரோ 6 சீட்டர் வேரியண்டின் விலை 27 ஆயிரத்து 400 ரூபாய் அளவிற்கும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் எடிஷனில் அதிகபட்சமாக, டாப் எண்ட் வேரியண்டான ஷார்ப் ப்ரோ 6 சீட்டரின் விலை 29 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஹெக்டர் பிளஸ் - ஸ்பெஷல் எடிஷனுக்கும் விலை உயர்வு

ஸ்பெஷல் எடிஷன்களான பிளாக்ஸ்டார்ம் மற்றும் ஸ்னோஸ்டார்மிற்கு கூட விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஷார்ப் ப்ரோ பிளாக்ஸ்டார்ம் 7 சீட்டர் பெட்ரோல் CVT விலை 29 ஆயிரத்து 100 ரூபாய் அதிகரித்து ரூ.23.48 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 சீட்டர் கட்டமைப்பை கொண்ட பிளாக்ஸ்டார்ம் மற்றும் ஸ்னோஸ்டார்ம் எடிஷன் டீசல் வேரியண்ட்களின் விலை 29 ஆயிரத்து 700 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. 6 இருக்கைகள் கொண்ட எடிஷன்களின் விலை ரூ.29,900 உயர்ந்து புதிய விலை ரூ.23.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சரிவில் விலை ஏற்றம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த மே மாதத்தில் 6 ஆயிரத்து 304 யூனிட்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டர் நிறுவனம், ஜுன் மாதத்தில் 7.5 சதவிகிதம் சரிவை சந்தித்து 5 ஆயிரத்து 829 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அப்படி இருக்கையில் போர்ட்ஃபோலியோவில் உள்ள பல கார்களின் விலையை உயர்த்தி இருப்பது, நிறுவனத்தின் விற்பனையை மேலும் பாதிக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக நிறுவனம் சார்பில் நடப்பாண்டின் முதல் பாதியில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் மாடலாக இருக்கும், ஹெக்டரின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI