Maruti Suzuki Recall: மாருதி சுசூகி நிறுவனம் க்ராண்ட் விட்டாரா கார்களை திரும்பப் பெறுவதற்கான காரணம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
க்ராண்ட் விட்டாரவை திரும்பப் பெறும் மாருதி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் பிரிவில் மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் அந்த ப்ராண்ட் சார்பில் விற்பனை செய்யப்படும் க்ராண்ட் விட்டாரா எஸ்யுவி கார் மாடலில் 39 ஆயிரத்து 506 யூனிட்களை திரும்பப் பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. எரிபொருள் இருப்பு அளவை குறிக்கும் இண்டிகேட்டர் மற்றும் வார்னிங் லைட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாம். கடந்த ஆண்டின் டிசம்பர் 9ம் தேதி தொடங்கி, கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் இந்த பிரச்னை கண்டறியப்பட்டுள்ளதாம்.
க்ராண்ட் விட்டாரா பிரச்னை என்ன?
மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஸ்பீடோமீட்டர் அசெம்ப்ளியில் உள்ள ஃபியூல் காஜ் மற்றும் வார்னிங் லைட் ஆகியவை, எரிபொருள் இருப்பின் சரியான அளவை காட்டுவதில் சில சமயங்களில் தோல்வியுறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களில் மட்டுமே பிரச்னை கண்டறியப்பட்டாலும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வாகனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த ரீகால் முடிவை எடுத்துள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
கடந்த ஆண்டின் டிசம்பர் 9ம் தேதி தொடங்கி, கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை வாங்கிய நபர்களை, மாருதி சுசூகியின் டீலர்ஷிப்பை சேர்ந்த அதிகாரிகள் தொடர்புகொள்வார்கள். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் உரிமையாளர்கள் கார்களை கொண்டு சென்றால், அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. நிறுவனம் தரப்பிலிருந்து தொடர்புகொள்ளும்போது, முறையாக தகவல்களை பரிமாறிக் கொண்டு பிரச்னையை தீர்க்க ஒத்துழைக்கும்படி வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுசூகி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எரிபொருள் பம்ப் மோட்டாரில் ஏற்பட்ட ஒரு குறைபாட்டின் காரணமாக, இன்ஜின் செயலிழக்க நேரிடும் என்பதால், சுமார் 16,000 வேகன் ஆர் மற்றும் பலேனோ மாடல் கார்கள் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாருதி க்ராண்ட் விட்டாரா விவரங்கள்:
மாருதி சுசுகி க்ராண்ட் விட்டாரா இந்திய ஆட்டோமொபை சந்தையில் பிரபலமான ஹைப்ரிட் எஸ்யூவிகளில் ஒன்றாகும். தற்போது இதன் விலை ரூ.10.77 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி டாப் வேரியண்டின் விலை ரூ.19.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் PHeV வேரியண்ட்டுகளை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டிருப்பதாலும், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான தேர்வாக திகழ்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI