Mahindra Thar 3 Door Facelift:  மஹிந்த்ரா 3 டோர் தார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில், புதியதாக என்ன எதிர்பார்க்கலாம்? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்:

மஹிந்த்ராவின் 3 டோர் தார் கார் மாடலானது கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதலே, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சாலையில் வலிமையான தோற்றத்தை வழங்கக் கூடிய இந்த கரமுரடான ஆஃப் ரோட் எஸ்யுவி ஆனது, புதியதாக கார் வாங்குபவர்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது. அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ், எத்தகைய சாலையிலும் பயணிக்கும் திறன் ஆகியவை தாரை சிறந்த காராக மாற்றுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மலிவு விலையில் ரியர் வீல் ட்ரைவ் எடிஷன் மற்றும் 5 டோர்களை கொண்ட ராக்ஸ் என, தார் பெயர் பல அப்க்ரேட்களை பெற்றுள்ளது. இந்நிலையில் தான் இரண்டாவது தலைமுறை தார் மாடலானது, மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றுள்ளது. எஸ்யுவியின் விற்பனையை தற்போதுள்ள சூழலில் அப்படியே தொடர வேண்டும் என்ற நோக்கில், சந்தைக்கு கொண்டு வரப்பட்ட 5 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த பெரும் அப்டேட்கள் தார் மாடலுக்கு வழங்கப்படுகின்றன.

செப்., முதல் வாரத்தில் தார் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, 3 டோர் தாரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது  செப்டம்பர் முதல் வாரத்தில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து விரைவிலேயே முன் பதிவும் தொடங்கக் கூடும். புதிய எடிஷன் தாரின் விநியோகம் எப்போது தொடங்கும் என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. அதேநேரம், மஹிந்த்ராவின் வழக்கமான பாணியை கருத்தில் கொண்டால், புதிய எஸ்யுவி அக்டோபர் மாதம் முதல் முன்பதிவு செய்த நபர்களுக்கு விநியோகம் செய்யப்படலாம்.

தார் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற அப்டேட்கள் என்ன?

புதிய தார் எடிஷனில் வழங்கப்பட்டுள்ள அப்டேட்கள் குறித்து பேசுகையில்,”5 டோர் ராக்ஸ் அடிப்படையில் புதிய எடிஷனின் முன்பக்கம் புத்துயிரூட்டப்படும். புதிய முன்பக்க க்ரில், ஒருங்கிணைக்கப்பட்ட C வடிவிலான DRL-கள் உடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள், திருத்தப்பட்ட முன்புற பம்பர் ஆகியவை அப்டேட்களாக வழங்கப்பட உள்ளன. கூடுதலாக புதிய அலாய் வீல்கள், புதிய வடிவிலான டெயில் லைட்கள் ஆகியவையும் வழங்கப்பட உள்ளன.

தார் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற அப்டேட்கள் என்ன?

மறுசீரமைக்கப்பட்ட கேபின் லே-அவுட் தார் ஃபேஸ்லிஃப்டின் கவனிக்கத்தக்க மேம்பாடுத்தலாக உள்ளது. அதன்படி இந்த காரில் கூடுதலாக ஃப்ரீ ஸ்டேண்டிங் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இது பெரும்பாலும் மஹிந்த்ராவின் Adrenox கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை பெறக்கூடும். அதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் இடம்பெறக்கூடும். இதுபோக தார் ராக்ஸ், ஸ்கார்ப்பியோ என் மற்றும் XUV 700 ஆகிய கார் மாடல்களில் இடம்பெற்றுள்ளதை போன்ற புதிய ஸ்டியரிங் வீலையும் பெறக்கூடும். வாகனத்தின் செண்ட்ரல் கன்சோலானது வயர்லெஸ் சார்ஜருக்கான இடத்தை ஒதுக்குவதற்காக சற்றே மாற்றி அமைக்கப்படலாம். முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தார் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரம்:

தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட் டிசைன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் அப்க்ரேட் செய்யப்பட்டாலும், இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர உள்ளது. அதன்படி 1.5 லிட்டர் டர்போ டீசல், 2.2 லிட்டர் mHawk டீசல் மற்றும் 2.0 லிட்டர் mStallion  பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளது. ரியர் வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் என இரண்டு அம்சங்களிலும் சந்தைப்படுத்தப்பட உள்ளது. சாஃப்ட் டாப் ரூஃப் வேரியண்ட்களை அண்மையில் தடை செய்த மஹிந்த்ரா, ஹார்ட் டாப் ரூஃப் கொண்ட வேரியண்ட்களை மட்டுமே ஸ்டேண்டர்டாக விற்பனை செய்து வருகிறது.  எனவே, புதிய ஃபேஸ்லிஃப்ட் தார் எடிஷனில் சாஃப் டாப் ரூஃப் வேரியண்ட் கிடைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தார் ஃபேஸ்லிஃப்ட் - விலை விவரம்:

3 டோர் தார் மாடலானது ட்ரான்ஸ்மிஷன், எரிபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த காரின் ஆன் - ரோட் விலை 14.35 லட்சம் முதல் 22.10 லட்சம் வரை நீள்கிறது. கூடுதல் அப்க்ரேட்களை கருத்தில் கொண்டால், தார் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் தொடக்க விலை சுமார் 15 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI