Renault Nissan Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பட்ஜெட் விலையில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ள கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ரெனால்ட் நிசானின் புதிய கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த ரெனால்ட் மற்றும் நிசான் கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, அண்மையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ட்ரைபர் கார் மாடலை, ரூ.6.29 லட்சம் என்ற விலையில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதைதொடர்ந்து, கைகரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை வரும் விழாக்காலத்தில் சந்தைப்படுத்த இந்த ஃப்ரென்ஞ்ச் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக புதிய தலைமுறை டஸ்டர் கார் மாடலும் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனிடையே, நிசான் நிறுவனமும் தனது புதிய எஸ்யுவியை அடுத்த ஆண்டு சந்தைப்படுத்த உள்ளது. இந்த கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட்:
கைகர் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலின் அறிமுகம் உள்நாட்டு சந்தையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் விழாக்காலத்தின்போது சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்-லைஃப் அப்டேட்டாக வழங்கப்படும் இந்த அப்கிரேட் மூலம், வெளிப்புறத்தில் பல மாற்றங்கள் அடங்கும். அதன்படி, புதிய முகப்பு விளக்குகள், பம்பர்கள், டெயில் லைட்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகிய மாற்றங்கள் வழங்கப்படலாம். இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம் ரெனால்ட் தனது புதிய லோகோவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உட்புறத்தில் டேஷ்போர்ட் லே-அவுட்டில் சில திருத்தங்கள் மற்றும் கூடுதலாக சில அம்சங்களை எதிர்பார்க்கலாம். 1.0 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இவை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டிருக்கும். 5 பேர் அமரும் வகையிலான இடவசதி கொண்ட, இந்த காரின் விலை ரூ.6.20 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், ஹுண்டாய் வென்யு, கியா சோனெட், மருதி சுசூகி ப்ரேஸ்ஸா உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
2. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர்
ரெனால்ட் டஸ்டர் கார் மாடலானது தனது மூன்றாவது தலைமுறை எடிஷன் மூலம், இந்திய சந்தைக்கு மீண்டும் திரும்ப உள்ளது. அடுத்த ஆண்டு இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முற்றிலும் புதிய வெளிப்புற டிசைன், புத்துயிர்பெற்ற உட்புறம் மற்றும் புதிய அம்சங்கள் ஆகியவற்றை பெற உள்ளது. CMF-B பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு, இந்த மிட்சைஸ் எஸ்யுவி ஆனது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பெற உள்ளது. இதன் மூலம் 154bhp மற்றும் 250NM ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதுபோக 140bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.6 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷனும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. 7 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்ட இந்த காரின் விலை, 10 முதல் 17 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த காரானது, ஹுண்டாயின் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி க்ராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷக் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடும்.
3. நிசானின் புதிய எஸ்யுவி:
ரெனால்ட் டஸ்டரை அடிப்படையாக கொண்ட தனது புதிய மிட்-சைஸ் எஸ்யுவியை, நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டஸ்டர் கார் மாடல் வெளியாகும் அதே காலகட்டத்தில் சந்தைப்படுத்தப்பட உள்ள தனது காருக்கு நிசான் நிறுவனம் கைட் என பெயர் சூட்டப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒரே மாதிரியான இன்ஜின் அம்சங்களை பின்பற்றினாலும், வெளிப்புற வடிவமைப்பில் கைட் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுபோக பெரிய வித்தியாசத்துடன் கூடிய உட்புறமும் வழங்கப்படலாம். இதன் விலை 10 முதல் 18 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
4. நிசானின் புதிய 7 சீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு புதிய 7 சீட்டர் காரை உறுதி செய்துள்ள நிசான், அதனை அடுத்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் தற்போது வரை ரகசியமாகவே தொடர்ந்தாலும், இதன் அம்சங்கள் ரெனால்ட் ட்ரைபரை பின்பற்றி CMF-B பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ள டீசரில் வாகனம் கூர்மையான மற்றும் தீவிரமான டிசைனை பெற்றுள்ளதை காட்டுகிறது. இந்த மூன்று வரிசை இருக்கை காரானது, 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினை பெறக்கூடும். இது 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸை கொண்டு, 72bhp மற்றும் 96NM ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை பெறும் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI