KTM Triumph Bikes Rate: ஜிஎஸ்டி திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏப்ரிலியா RS457 மாடல் மோட்டர் சைக்கிளுக்கு 35 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மோட்டர் சைக்கிள்களின் விலையில் மாற்றமில்லை
மத்திய அரசின் ஜிஎஸ்டி திருத்தம் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 350சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தற்போது 40 சதவிகித வரி அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், விழாக்காலங்களில் ப்ரீமியம் மோட்டார்சைக்கிளின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், சில முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் முக்கிய முடிவை எடுத்துள்ளன. அதன்படி, கூடுதல் விலை சுமையை வாடிக்கையாளர்களின் மீது சுமத்தாமல், அதனை தாங்களே ஏற்பதாக கேடிஎம், ட்ரையம்ப் மற்றும் ஏப்ரிலியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கேடிஎம் வெளியிட்ட அறிவிப்பு:
கேடிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தனது 390சிசி ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்களான ட்யூக், RC மற்றும் அட்வென்சர் ஆகிய மாடல்களின் எக்ஸ் - ஷோரூம் விலையானது ஜிஎஸ்டி திருத்தத்திற்கு முன்பு இருந்த நிலையிலேயே தொடர உள்ளது. கூடுதல் விலையை நிறுவனமே ஏற்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், 160 ட்யூக், 200 ட்யூக் மற்றும் 250 ட்யூக் உள்ளிட்ட 350 cc வரம்புக்குக் கீழே உள்ள KTM மாடல்களுக்கு, GST குறைப்பு நேரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வாகனங்களுக்கான வரி குறைந்து, அவற்றிற்கான அணுகல் குறைந்துள்ளது.
ஏப்ரிலியா பைக்கிற்கு ரூ.35,000 சலுகை
ஏப்ரிலியா டுவோனோ 457 பைக் மாடலின் விலையானது ரூ. 3.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) தொடர்கிறது. அதன்படி கூடிதல் ஜிஎஸ்டியின் முழு சுமையையும் நிறுவனமே ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. இதனிடையே நிறுவனத்தின் RS 457 பைக்கானது கூடுதலாக சிறப்பு சலுகைகளையும் பெற்றுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட விலையானது ரூ. 4.35 லட்சத்தில் உள்ளது, ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக ரூ. 15,000 மதிப்புள்ள விலைக்குறைப்பு மற்றும் ரூ. 20,500 மதிப்புள்ள இலவச விரைவு மாற்றி மூலம் பயனர்கள் ரூ. 35,000 க்கும் அதிகமாக சேமிக்கலாம்.
ட்ரையம்ப் நிறுவனத்தின் முடிவு
பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து, டிரையம்ப் நிறுவனமும் தனது 400 சிசி மாடல்களின் மீது இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன்படி, ஸ்பீட் 400, ஸ்க்ராம்ப்ளர் 400X, ஸ்பீட் T4 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட த்ரக்ஸ்டன் 400 போன்ற அனைத்து, மோட்டார்சைக்கிள்களுக்கும் புதிய ஜிஎஸ்டிக்கு முந்தைய விலைகள் அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் இந்தியாவின் நடுத்தர எடை பைக் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ட்ரையம்ப் நிறுவனத்திற்கு இந்த முடிவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் நிலவரம்..
இதனிடையே, 450 சிசி பிரிவில் மற்றொரு வலுவான போட்டியாளரான ராயல் என்ஃபீல்ட், தனது மாடல்களுக்கு விலைகளை உயர்த்த முடிவு செய்துள்ளது. 350 சிசிக்குக் குறைவான மாடல்களின் விலை ரூ. 22,000 வரை குறைப்பை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் 450 சிசி மற்றும் 650 சிசி பிரிவில் உள்ள பெரிய மோட்டார் சைக்கிள்கள், புதிய ஜிஎஸ்டி வரம்பால் ரூ. 29,486 வரை விலை உயர்வை கண்டுள்ளன. இதுபோக,
- ஸ்க்ராம் 440 பைக்கின் விலை ரூ.15,641 வரை உயர்ந்து, ரூ.2.23 லட்சம் முதல் ரூ.2.31 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- கெரில்லா 450 ரக பைக்கின் விலை ரூ.18,479 வரை உயர்ந்து, ரூ.2.56 லட்சத்திலிருந்து ரூ.2.72 லட்சமாக எக்ஸ் - ஷோ ரூம் விலை உயர்ந்துள்ளது.
- ஹிமாலயன் 450 பைக்கின் விலை ரூ.21,682 வரை உயர்ந்து, அதன் விலை ரூ.3.05 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ.3.20 லட்சம் வரை நீள்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI