Jaguar Land Rover: சைபர் தாக்குதல் காரணமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் கடந்த 6 வாரங்களாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.
இயல்பு நிலைக்கு திரும்பும் ஜாகுவார் லேண்ட் ரோவர்:
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உற்பத்தி பணிகள் முற்றிலுமாக முடங்கிய நிலையில், இன்று முதல் படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ப்ரீமியம் கார் உற்பத்தி நிறுவனமானது சைபர் தாக்குதல் காரணமாக ஐடி அமைப்புகளை மூடியதோடு, பிரதான தொழிற்சாலைகளில் தனது உற்பத்தி பணிகளையும் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த 6 வார கால முடக்கம் என்பது நிறுவனத்தின் அண்மைக்கால வரலாற்றில் மிகப்பெரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து அடிப்படையிலான நிறுவனத்தின் விநியோகத்தில், நாளொன்றிற்கு 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கம்பேக் மோடில் JLR
ரிஸ்டார்ட் செயல்முறை கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட உள்ளது. முதலில் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி, வால்வர்ஹாம்ப்டன் இன்ஜின் வசதி மற்றும் கோல்ஷில் பேட்டரி அசெம்பிளி மையம் ஆகியவை இந்த வாரம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கும் பிரிவுகளின் பட்டியலில் உள்ளன. இந்த ஆரம்ப கட்டத்தைத் தொடர்ந்து, ரேஞ்ச் ரோவர் உற்பத்தியின் மையமான சோலிஹல் வாகன உற்பத்தி ஆலையின் முக்கிய பகுதிகளும் அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காரின் பாடி, பெயிண்ட்டிங் ஏரியா மற்றும் உலகளவில் பாகங்களை விநியோகிக்கும் தளவாட மையம் ஆகியவை அடங்கும்.
உற்பத்திக்கு தயாராகும் ரேஞ்ச் ரோவர்:
பிரதான வாகன அசெம்பிளி வரிசைகளை விரைந்து இயல்பு நிலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியாவின் நிட்ராவில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி வரிசைகளுடன் சேர்ந்து, சோலிஹல்லில் உள்ள ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் உற்பத்தி வரிசைகள் இந்த வார இறுதியில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும் என JLR நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நிதியுதவிகள்:
சைபர் தாக்குதலால் கூடுதல் சேதத்தைத் தடுக்கும் விதமாக JLR செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்து அரசாங்கம் இந்த ப்ரீமியம் கார் உற்பத்தி நிறுவனத்திற்கு 17 ஆயிரத்து 800 கோடி ரூபாயை கடனாக வழங்க உத்தரவாதம் அளித்தது. அதே நேரத்தில் JLR அதன் 700 இங்கிலாந்து சப்ளையர்களை ஆதரிக்க ஒரு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த சப்ளையர்களிடம் 1,50,000 பேர் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முழு கம்பேக் எப்போது?
Sactered Lapsus$ Hunters என்ற ஹேக்கர் குழு, வாடிக்கையாளர் தரவை அணுக SAP Netweaver மென்பொருளில் உள்ள ஒரு குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. படிப்படியாக உற்பத்தியை மீண்டும் தொடங்குவது ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஆனாலும், அதன் அதிக தேவை உள்ள சொகுசு SUV களுக்கான கணிசமான நிலுவையை நீக்குவதில் கவனம் செலுத்துவதால், JLR முழுமையான, இயல்பான இயக்கத்திற்கு திரும்ப பல வாரங்கள் ஆகும் என்று கணக்கிடம்ப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI