Electric Cars Tax: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்பட்டால், அதன் விற்பனை விலை அதிக அளவில் குறையும்.

EV மீதான வரியை குறைக்க திட்டம்:

உள்நாட்டிலேயே மின்சார கார்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கடைசி வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தரப்பு ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும், சர்வதேச முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மீது ஆர்வம் செலுத்தியுள்ளதகாவும் கூறப்படுகிறது. இந்த திட்டமானது முற்றிலும் கட்டமைக்கப்பட்ட கார்களை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை, குறைந்த சுங்கவரியுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கிறது. அதாவது தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 110 சதவிகித வரிக்கு பதிலாக வெறும் 15 சதவிகித வரி மட்டுமே அந்த கார்களின் மீது விதிக்கப்படும். அதற்கு ஈடாக, அந்த நிறுவனங்கள் உள்நாட்டிலேயே ஆலை அமைத்து மின்சார கார்களை முடிந்த அளவில் உள்ளூரிலேயே தயாரிக்க வேண்டும் என விதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

எந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை:

மின்சார கார்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான இந்த சலுகைகளை, சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க அரசு தரப்பு முடிவு செய்துள்ளதாம். சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கும் அல்லது சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட சொத்துகளில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்த நிறுவனங்களுக்கும் மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இந்த விதிகளை பூர்த்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து விரைவில் ரூ.5 லட்சம் கட்டணத்துடன் கூடிய விண்ணப்பங்களை பெற அரசு தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.

விதிகள் என்ன?

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ரூ.4,150 கோடிக்கு குறையாத செலவில் உள்நாட்டில் மின்சார கார் உற்பத்திக்கான ஆலையை அமைக்க வேண்டும். இதேகாலகட்டத்தில் உள்நாட்டு மதிப்பை 25 சதவிகிதமாக உயர்த்துவதோடு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதை 50 சதவிகிதமாகவும் உயர்த்த வேண்டும். கூடுதல் தகவல்களின்படி, அனுமதி பெற்று ஆலை அமைக்கும் நிறுவனங்கள் நான்காவது ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.5000 கோடி வருவாயை ஈட்ட வேண்டும். ஐந்தாவது ஆண்டில் இது ரூ.7,500 கோடியாக அதிகரிக்க வேண்டும். இந்த விதிகளை பூர்த்தி செய்ய தவறு நிறுவனங்களுக்கு, வருவாய் பற்றாக்குறையில் 3 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எத்தனை கார்களுக்கு சலுகை?

அங்கீகரிக்கப்படும் நிறுவனங்கள் 30 லட்சத்திற்கும் அதிகமான விலையை கொண்ட 8000 கார்களை, வெறும் 15 சதவிகித சுங்க வரியை மட்டும் செலுத்தி இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம். அதிகபட்ச வரி 6,484 கோடி ரூபாய் அல்லது நிறுவனங்களின் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டை விட அதிகமாக இருக்கக்கூடாது, எது குறைவாக இருக்கிறதோ அதனை தேர்வு செய்யலாம். 

கடுமையாக குறையப்போகும் மின்சார கார் விலை:

கனரக தொழில்துறை சார்பிலான தகவல்களின்படி, டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமில்லையாம். அதேநேரம், மற்ற பிரபல கார் உற்பத்தி நிறுவனங்களான, மெர்சிடஸ் பென்ஸ், ஹுண்டாய், கியா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள், மின்சார கார் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனவாம்.

இதன் மூலம், பிரீமியம் நிறுவனங்களின் கார்கள் தற்போது இருப்பதை விட குறைந்த விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட அனுமதிக்கப்படுவதால், இந்தியாவில் விற்பனை செய்யப்படாத வெளிநாட்டு சந்தையில் கிடைக்கும் கார்கள் கூட கணிசமான விலையில் உள்நாட்டிற்கு கொண்டு வரப்படலாம். அதோடு, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா போன்ற நம்பிக்கை மிகுந்த கார் பிராண்டுகள், உள்நாட்டிலேயே உற்பத்தியை தொடங்கினால், குறைந்த விலை நிர்ணயித்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வலுவாக காலூன்ற முடியும்.

மின்சார கார் மாடல்கள்:

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச சந்தையில் EQS, EQS SUV, EQE SUV, EQA, EQB மற்றும்  EQG ஆகிய மின்சார கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்கோடா நிறுவனம் சார்பில் என்யாக் iV, எல்ராக் iV ஆகிய மின்சார கார்களும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்  ID.3, ID.4, ID.5 மற்றும் ID.7 ஆகிய மின்சார கார் மாடல்களையும் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தற்போதைய 115 சதவிகித வரிவிதிப்புடன் இறக்குமதி செய்யப்பட்டால், விலை இரண்டு மடங்காக இருக்கும். ஆனால், புதிய ஒப்பந்தப்படி இந்திய சந்தைக்கு வந்தால், கணிசமான விலையிலேயே சொந்தமாக்க முடியும். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கில், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் அரசின் முயற்சி பல்வேறு வழிகளில் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI