Honda Elevate Electric Car: ஹோண்டா எலிவேட் மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 450 கிமீ தூரம் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.
ஹோண்டா எலிவேட் மின்சார கார்:
ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் எஸ்யுவி கார் மாடலை அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. பயனாளர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தான், எலிவேட் எஸ்யுவி கார் மாடலின் மின்சார எடிஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறந்த இன்ஜின், வெளிப்புற தோற்றம் மற்றும் அம்சங்களால் ஹோண்டா தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், புதிய மின்சார எஸ்யுவியை வாங்க விரும்புவோருக்கு, எலிவேட் EV ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம் என ஆட்டோமொபைல் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹோண்டா எலிவேட் EV - முக்கியத்துவம்:
ஹோண்டா நிறுவனத்தின் மின்சார சந்தை நுழைவு தொடர்பான தகவல் கடந்த சில காலமாகவே தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான், அந்நிறுவனத்தின் முதல் முழு மின்சார காராக, எலிவேட் கார் மாடல் அறிமுகப்படுத்தவிருப்பதாக வலுவான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நிறுவனத்தின் முதல் மின்சார காராக மட்டுமின்றி, இந்தியாவின் ஹோண்டாவின் போர்ட்ஃபோலியோவின் பெரும் மாற்றமாகவும் அமைய உள்ளது. உள்நாட்டில் தற்போது உள்ள மின்சார வாகனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஹோண்டா எலிவேட் EV - ரேஞ்ச், சார்ஜிங்:
பயனர்களை கவர்ந்து இழுக்கும் நோக்கில் 62 kWh பேட்டரி இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இது 92 bhp ஆற்றல் 172 NM டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். முற்றிலுமாக ஆட்டோமேடிக் ட்ரான்ஷ்மிஷனை கொண்டிருக்கக் கூடிய இந்த காரை, ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 முதல் 450 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நகர்ப்புற தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வார இறுதிகளில் மேற்கொள்ளக்கூடிய நடுத்தர வெளியூர் பயணங்களுக்கும் எலிவேட் மின்சார எடிஷன் சிறந்த தேர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது. வழக்கமாக இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகலாம். அதேநேரம், இதில் வழங்கப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மூலம் 30 முதல் 40 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம்.
தொழில்நுட்ப அம்சங்கள்:
காரின் உட்புறத்தை பார்க்கும்போது, டச்-ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உட்பட முற்றிலுமான டிஸ்பிளேக்களை ஹோண்டா நிறுவனம் நிரப்படலாம். வயர்லெஸ் சார்ஜிங், வெண்டிலேடட் சீட்ஸ், சன்ரூஃப், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்பிளே சிஸ்டம், ப்ளூடுத் கனெக்டிவிடி போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இடம்பெறக்கூடும். பக்கவாட்டில், ஆண்டி லாக் பிரேக்கர்ஸ் அல்லது EBD தொழில்நுட்பத்துடன் கூடிய அல்லாய் வீல்கள், அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றுடன், தற்போதைய எலிவேட் எடிஷனில் இருப்பது போன்ற மேம்படுத்தப்பட்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பம் மின்சார எடிஷனிலும் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்படுகின்றன. தற்போதுள்ள எலிவேட் மாடலே பாதுகாப்பு சோதனையில் ஜப்பானில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இதே தரம் புதிய மின்சார காரிலும் தொடரும்.
வெளியீடு, விற்பனை எப்போது?
ஹோண்டாவின் புதிய எலிவேட் மின்சார எடிஷன் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இன்ஜின் எடிஷனின் விலை 11 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 16 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய மின்சார எலிவேட் எடிஷனின் விலை கூடுதல் அம்சங்களை கருத்தில் கொண்டு, 18 லட்சம் முதல் 20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்திய சந்தையில் ஹோண்டாவின் எலிவேட் மின்சார எடிஷன் அறிமுகமாகும் போது, ஹுண்டாய் கோனா, MG ZS, BYD Atto 3 போன்ற மின்சார கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI