Hero MotoCorp: ஆட்டோமொபைல் சந்தையில் 40 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எதிர்காலத்திற்கான விரிவான திட்டத்தை வெளியிட்டுள்ளது.


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்:


உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், ஹீரோ வேர்ல்ட் எனும் நிகழ்ச்சியின் இரண்டாவது எடிஷன் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அந்நிறுவனத்தின் 40 ஆண்டு விழாவை ஒட்டி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேவ்ரிக் 440 மற்றும் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மிட்வெயிட் பிரிவில் ஹீரோ நிறுவனத்தின் முதல் வாகனம் மேவ்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் 125 சிசி செக்மெண்டை விரிவுபடுத்தும் வகையில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது IBS ( ரூ.95,000) மற்றும் ஏபிஎஸ் ( ரூ.99,500) என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,  எதிர்வரும் காலங்களில் ஹீரோ மோட்டோகார்ப் தரப்பில், சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய மாடல் ஸ்கூட்டர் மற்றும் பைக் தொடர்பான விவரங்களும் ஹீரோ வோர்ல்ட் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளன.


எத்தனால் அடிப்படையிலான மோட்டார்சைக்கிள்கள்:


எத்தனால் கலந்த பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்துவது என்ற மத்திய அரசின், FLEXIBLE FUEL என்ற திட்டத்தின் அடிப்படையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது. அதன்படி, எத்தனால் அடிப்படையிலான Hero HF Deluxe, Splendorexe+ மற்றும் கிளாமர் ஆகிய மாடல்களை நேற்றைய நிகழ்வில் காட்சிப்படுத்தியது. தங்களது முதல் மின்சார வாகனமான VIDA V1 மாடலை வெளியிட்டு சில மாதங்களே ஆன நிலையில், தற்போது FLEXIBLE FUEL வாகனம் தொடர்பான அறிவிப்பை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


மின்சார வாகனங்கள்:


மின்சார வாகனங்களுக்கு அதிகரித்து வரும் தேவை மற்றும் எதிர்கால சந்தையை கருத்தில் கொண்டு, 3 புதிய மின்சார வாகனங்களுக்கான கான்செப்ட் விவரங்களை வெளியிட்டது. அதன்படி, ஏற்கனவே உள்ள VIDA V1-ன் மேம்பட்ட மாடலான VIDA V1 Coupe கான்செப்ட் விவரங்களுடன், Lynx மற்றும் Acro என்ற இரண்டு புதிய மின்சார மாடல்களுக்கான கான்செப்ட் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் உள்ள அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் இந்த இரண்டு புதிய வாகனங்களுக்கான, வடிவமைப்பு, செயல்பாடு, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை தொடர்பான பணிகள் நடைபெற உள்ளன. 


புதிய ஸ்கூட்டர்கள்:


கடந்தாண்டு நடைபெற்ற EICMA 2023 கண்காட்சியில் அறிவிக்கப்பட்டு, தற்போது உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராக உள்ள சில மோட்டார்சைக்கிள்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இரண்டு புதிய இன்ஜின் ஸ்கூட்டர்களான  Xoom 125 மற்றும் Xoom 160 ஆகிய மாடல்களையும் காட்சிப்படுத்தியது. அதிக திறன் கொண்ட பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் விரிவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் நோக்கில், புதிய வகை கான்செப்ட் 2.5R XTunt மாடலையும் ஹீரோ நிறுவனம் காட்சிப்படுத்தியது.


Car loan Information:

Calculate Car Loan EMI