ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களின் விலையை, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக உயர்த்தி அறிவித்துள்ளது.


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் வாகனங்களை விற்பதன் மூலம், வாடிக்கையாளர்களிடையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நன்கு அறிமுகமாகியுள்ளது. பைக்குகளுக்கான இந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், ஸ்கூட்டர் விற்பனையிலும் களமிறங்கி தனக்கான சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. அண்மையில் அந்த நிறுவனம் சார்பில் மின்சார ஸ்கூட்டர்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.


விலை உயர்வு:


இந்த நிலையில் தான், நடப்பாண்டிலேயே இரண்டாவது முறையாக தனது வாகனங்களின் விலையை உயர்த்தி அதிர்ச்சியூட்டியுள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.  கடந்த ஏப்ரல் மாதம் தான்,  இருசக்கர வாகனங்களின் விலையை 2 சதவிகிதம் அளவிற்கு அந்நிறுவனம் உயர்த்தியது. அடுத்த மூன்று மாத இடைவெளியிலேயே,  மீண்டும் விலை உயர்த்துவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


எவ்வளவு விலை உயர்கிறது?


வாகன தயாரிப்புக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகனங்களின் விலை 1.5 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்படுகிறது என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 3ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, சர்வதேச பொருளாதார நிலை ஆகியவற்றினால் வாகனங்களை தயாரிப்பதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, உற்பத்தி செலவு அதிகரிப்பதால் வாகனங்களின் விலை உயர்த்துவதற்கான கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.


பயனாளர்களுக்கான சலுகை:


புதிய விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாடல் வாகனத்துக்கும் வித்தியாசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொடர்ந்து வாகனங்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனம் வாங்குவதற்கு புதுமையான நிதித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.


Hero MotoCorp நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகள்:



Hero MotoCorp சமீபத்தில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட Xtreme 160R ஐ அறிமுகப்படுத்தியது. 2023 Hero Xtreme 160R 4V இந்தியாவில் ரூ.1.27 லட்சம் ஆரம்ப விலையில், எக்ஸ்-ஷோரூம் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அதன் முன்னோடிகளில் ஒப்பனை மற்றும் இயந்திரம் உட்பட பல மாற்றங்களை பெற்றுள்ளது. Xtreme 160R 4V என்பது 163சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் & ஆயில்-கூல்டு இன்ஜின் ஆகும். இது 16.6 பிஎச்பி மற்றும் 14.6 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதோடு, 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டுள்ளது.


ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்:


அதோடு, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து Harley Davidson X440 எனும் புதிய மோட்டர்சைக்கிளை ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில், 440 cc சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.   இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.2.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI