'ஹீரோ' என்ற வார்த்தையை கேட்டதும் 'ஹீரோ மோட்டோ கார்ப்' மற்றும் 'ஹீரோ எலக்ட்ரிக்' இந்த இரண்டும் ஒரே நிறுவனம் என்று நினைத்திருப்போம்.. ஆனால் உண்மையில் இரண்டும் தனித்தனி நிறுவனங்கள்! இந்த 'ஹீரோ' என்ற பெயருக்காகத் தான் இந்த இரண்டு நிறுவனங்களும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
ஹீரோ மோட்டோ கார்ப் தனது மின்சார வாகனங்களுக்கு பிராண்ட் லோகோவாக 'ஹீரோ' என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு எதிராக தடை கோரியிருந்தார் ஹீரோ எலக்ட்ரிக்-க்கின் உரிமையாளர் நவீன் முஞ்சால். இவரது உறவினரான பவன் முஞ்சாலின் ஹீரோ மோட்டோ கார்ப் 'ஹீரோ' என்ற வார்த்தையை பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் 'ஹீரோ' என்ற பிராண்டில் மின்சார ஸ்கூட்டர்களை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது.
ஹீரோ எலக்ட்ரிக் ஏற்கனவே 'ஹீரோ' பிராண்டில் மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்துவரும் நிலையில் இந்நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தயாரிக்க இருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 'ஹீரோ' என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப்க்கு நல்ல செய்தி!
இந்த தீர்ப்பு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்களின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த இருசக்கர மின்சார வாகனங்கள் 'வீடா - பவர்ட் பை ஹீரோ' என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்!
ஹீரோ மோட்டோ கார்ப்-க்கு இது நல்ல செய்தியாக இருந்தாலும், இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹீரோ எலக்ட்ரிக்குக்கு இது ஒரு மோசமான செய்திதான். ஹீரோ எலக்ட்ரிக்குக்கு மட்டும் இது கெட்ட செய்தியல்ல.. உலகின் நம்பர் ஒன் இருசக்கர வாகன தயாரிப்பாளரான 'ஹீரோ மோட்டோ கார்ப்' மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்குவது ஏத்தர், ஓலா போன்ற மின்சார ஸ்கூட்டர்களை தயாரிக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் கடும் சவாலாக இருக்கக்கூடும்!
ஹீரோ மோட்டோ கார்ப் மேலும் பல மின்சார வாகன தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. மின்சார இருசக்கர வாகனங்கள் 'வீடா - பவர்ட் பை ஹீரோ' பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படுவதை போல.. மற்ற மின்சார வாகனங்களை தயாரிக்க வீடா, வீடா மோட்டோ கார்ப், வீடா ஈவி, வீடா எலக்ட்ரிக், வீடா ஸ்கூட்டர்ஸ் மற்றும் வீடா மோட்டார்சைக்கிள்ஸ் போன்ற பெயர்களுக்கான காப்புரிமை வேண்டி விண்ணப்பித்திருக்கிறது!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI