தொலைதூர பயணங்களுக்கு ஏற்றவாறு சொகுசு இருசக்கர வாகனங்களை வெளியிடும் முன்னணி நிறுவனங்களில், ஹார்லி டேவிட்சன் மிகவும் பிரபலமானது. பல்வேறு மேம்பாடுகளுடன் அவ்வப்போது புதிய பைக் மாடாலை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. விலை சற்றே கூடுதலாக இருந்தாலும், ஹார்லி டேவிட்சன் பைக் மாடல்களில் கிடைக்கக் கூடிய சொகுசு பயண அனுபவத்தின் காரணமாக, இளைஞர்களுக்கு அதன் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. 


புதிய பைக் அறிமுகம்:


இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2023 மோட்டார் சைக்கிள் மாடல்களை ஜனவரி 18ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, வெளியீட்டுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில்,  ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் நைட்ஸ்டர் S மாடல் மோட்டர்சைக்கிளின்  புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து உள்ளன. அதன்படி,  புதிய நைட்ஸ்டர் S மாடல் மோட்டார் சைக்கிளையும்,  நைட்ஸ்டர் மாடல் உருவான பிளாட்ஃபார்மிலேயே ஹார்லி டேவிட்சன்  நிறுவனம் வடிவமைத்து உருவாக்கி உள்ளது.


என்ஜின் திறன்:


நைட்ஸ்டர் S மாடலில் 975சிசி, வி ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 90 குதிரைகளின் சக்தி, 94 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை, ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இவை தவிர புதிய நைட்ஸ்டர் S மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.


சிறப்பம்சங்கள்:


அதேநேரம், புதிய நைட்ஸ்டர் S மாடலில் பில்லியன் சீட் மற்றும் பில்லியன் ஃபூட்ரெஸ்ட் வழங்கப்படுகிறது. முந்தைய நைட்ஸ்டர் ஸ்டாண்டர்டு எடிஷன் மாடல் மோட்டார் சைக்கிளில் இவை இரண்டும் இடம்பெற்று இருக்காது. மேலும் புதிய நைட்ஸ்டர் S மாடல் சற்றே வித்தியாசமான வீல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் கிலாஸ் பெயிண்ட் மற்றும் அசத்தலான கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.  வட்ட வடிவ முகப்பு விளக்கு,  கவசம்,  அகலமான ஹேண்டில்பார்கள் மற்றும் பார்-எண்ட் மிரர்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டிஜி-அனலாக டிஸ்பிளே, ABS, டிராக்‌ஷன் கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 


இந்தியாவில் அறிமுகம் எப்போது?


முந்தைய நைட்ஸ்டர் மாடல் 211 கிலோ எடையை கொண்டுள்ள நிலையில், புதிய நைட்ஸ்டர் எஸ் மாடல் மோட்டார்சைக்கிள் 216 கிலோ வரையில் இருக்கும் என கூறப்படுகிறது. வரும் ஜனவரி 18ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் நைட்ஸ்டர் எஸ் மாடல், இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI