Longest Range EVs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார கார்களின் டாப் 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார கார்கள்:
நடப்பாண்டின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இது மின்சார வாகனங்களுக்கு ஆண்டு என்பதை உறுதியாக சொல்லலாம். முதல் 6 மாதங்களில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய மின்சார கார்களை சந்தைப்படுத்தியுள்ளன. இரண்டாவது பாதியிலும் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு, பல புதிய மின்சார கார் மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்நிலையில், தற்போதைய சூழல் வரை இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார கார்களின் டாப் 5 பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
1. மஹிந்திரா BE6
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மின்சார ஆரிஜின் எஸ்யுவிக்களில் முதலாவதாக சந்தைப்படுத்தப்பட்ட கார் மாடல் BE6 ஆகும். கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற நிறுவனத்தின் பிரமாண்ட நிகழ்ச்சியில், XEV 9e கார் மாடலுடன் சேர்ந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த கார்களின் விநியோகமும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், BE6 கார் மாடலில் 59KWh மற்றும் 79KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 557 மற்றும் 682 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலகில் குறைந்தபட்சம் 500 முதல் 600 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடும். பேக் ஒன், பேக் டூ மற்றும் பேக் த்ரீ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, ரூ.18.90 லட்சத்தில் தொடங்கி ரூ.26.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. இந்த காருக்கு டாடாவின் கர்வ் பிரதான போட்டியாளராக உள்ளது.
2. மஹிந்திரா XEV 9e
மஹிந்திராவின் முற்றிலும் புதிய மின்சார கார் மாடலான XEV 9e, INGLO பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பேக் ஒன், பேக் டூ, பேக் த்ரீ மற்றும் பேக் த்ரீ செலக்ட் என நான்கு வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் இதன் விலை ரூ.21.90 லட்சம் முதல் ரூ.30.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலும் 59KWh மற்றும் 79KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 542 மற்றும் 656 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலகில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடும். இந்த காரானது டாடா ஹாரியரின் மின்சார எடிஷன் உடன் நேரடியாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
3. டெஸ்லா மாடல் Y
நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மின்சார கார் நிறுவனமான டெஸ்லா, இந்தியவில் தனது முதல் விற்பனை தளத்தை கடந்த மாதம் மும்பையில் திறந்தது. அதன் வாயிலாக டெஸ்லா மாடல் Y கார் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரியர் வீல் ட்ரைவ் மற்றும் ரியர் வீல் ட்ரைவ் லாங் ரேஞ்ச் என இரண்டு வேரியண்ட்களில், ரூ.59.89 லட்சம் மற்றும் ரூ.67.89 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரானது 500 கிலோ மீட்டர் மற்றும் 622 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடிய 63KWh மற்றும் 83KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை பெற்றுள்ளது. நிஜ உலகில் இந்த ரேஞ்ச் சுமார் 450+ மற்றும் 550+ கிலோ மீட்டராக இருக்கலாம்.
இரண்டு வேரியண்ட்களுமே அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. பவர் ரெக்லைன், ஹீட் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள், பவர் டூ-வே ஃபோல்டிங் மற்றும் ஹீட் செய்யப்பட்ட பின்புற இருக்கைகள், 15.4 இன்ச் செண்ட்ரல் டச் ஸ்க்ரீன் மற்றும் 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
4. டாடா ஹாரியர் மின்சார எடிஷன்
நாட்டின் பாதுகாப்பான ஆல் - வீல் - ட்ரைவ் மின்சார எஸ்யுவி என குறிப்பிடப்படும் டாடா ஹாரியர், இந்திய சந்தையில் ரூ.21.49 லட்சம் தொடங்கி ரூ.28.99 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அட்வென்ச்சர் 65, அட்வென்ச்சர் S 65, ஃபியர்லெஸ்+ 65, ஃபியர்லெஸ்+ 75, எம்பவர்டு 75 மற்றும் எம்பவர்டு 75 QWD என ஆறு வேரியண்ட்களில் இந்த கார் சந்தையில் கிடைக்கிறது. 65KWh மற்றும் 75KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு முறையே 538 மற்றும் 627 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. நிஜ உலகில் சுமார் 450+ மற்றும் 550+ ரேஞ்ச் அளிக்கக் கூடும். டாப் எண்ட் ஆல் வீல் ட்ரைவ் வேரியண்ட் 75KWh பேட்டரி பேக்குடன் 622 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.
5. கியா EV6
கியாவின் முற்றிலும் புதிய மின்சார கார் மாடலான EV6, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே ஒரு வேரியண்டில் கிடைக்கும் இந்த காரின் விலை ரூ.65.97 லட்சமாக(எக்ஸ் - ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் ட்ரைவ் அம்சத்துடன் 84KWh பேட்டரி பேக் ஆப்ஷனை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 650+ கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிஜ உலகில் சுமார் 600+ கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடும்.
எலெக்ட்ரிக் க்ளோபல் மாடுலர் பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில், 20+ பாதுகாப்பு வசதிகளும் லெவல் 2 ADAS அம்சத்தை கொண்டுள்ளது. 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற பல ப்ரீமியம் அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI