சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 ஏர்கிராஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை தொடங்குவது எப்போது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சி3 ஏர்கிராஸ் அறிமுகம்:


சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 ஏர்கிராஸ் மாடல் கார் இந்தியாவில் இருந்து உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ec3, c3 ஹேட்ச்பேக் மற்றும் c5 ஏர்கிராஸ் எஸ்யுவி ஆகிய மாடல்களின் வரிசையில், நான்காவது மாடலாக சி3 ஏர்கிராஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் 90 சதவிகிதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது இந்தியாவில் 30 டீலர்களை கொண்டு இருப்பதாகவும், ஏர்கிராஸ் அறிமுகம் மற்றும் நடப்பாண்டு இறுதிக்குள் டீலர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்றும் சிட்ரோயன் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இன்ஜின் அறிமுகம்:


புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.  C3 ஏர்கிராஸ் மாடல் C3 ஹேச்பேக் மாடலை விட நீளமாக உள்ளது. அதன்படி,  இந்த காரின் நீளம் 4.3 மீட்டர்கள் ஆகும். தோற்றத்தில் இந்த காரின் முகம் ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக முகப்பு விளக்குகள், கவர்ச்சிகரமான மோனோடோன் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.


இருக்கை, தொழில்நுட்ப வசதி:


C3 ஏர்கிராஸ் மாடலின் மிகமுக்கிய அம்சம் அதில் வழங்கப்பட்டுள்ள மூன்றாம் அடுக்கு இருக்கைகள் ஆகும்.  ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது. அதேநேரம், இவற்றை அதிக இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம்.  இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், மேனுவல் ஏசி, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல் ஆகியவை  வழங்கப்பட்டுள்ளன.


காரின் வடிவமைப்பு:


டெயில்கேட் பகுதியில் C3 ஏர்கிராஸ் பேட்ஜ் மற்றும் ரியர் பம்ப்பரின் கீழ்புறத்தில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள் உள்ளன.  இந்த காரின் முன்புற கிரில் 2 ஸ்லாட் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் பம்ப்பர் பாடி நிறத்தால் ஆன பாகங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிளாக் கிலாடிங் உள்ளது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், சில்வர் ஃபாக்ஸ் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. பக்கவாட்டில் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. 


யாருக்கு போட்டி?


சி3 ஏர்கிராஸ் மாடல் காரின் விலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், இந்த கார் விற்பனைக்கு வந்தால், இந்திய சந்தையில் தற்போது உள்ள ஹூண்டாய் க்ரெட்டா , கியா செல்டோஸ் , மாருதி கிராண்ட் விட்டாரா , டொயோட்டா ஹைரைடர் , வோக்ஸ்வாகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார் மாடல்களுக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI