January Car Sale: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் விற்பனையில், கடந்த ஜனவரி மாதத்திலும் மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.


ஜனவரி மாதத்தில் கார் விற்பனை:


நடப்பாண்டானது அனைத்து முக்கிய கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் சாதகமாகத் தொடங்கியுள்ளது. காரணம் அவை விற்பனையில் ஆரோக்கியமான உயர்வை சந்தித்துள்ளன. தேவை அதிகரிப்பதால் வரும் மாதங்களில் இந்த போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜனவரி மாதத்தில் கார் விற்பனையில் அசத்திய முன்னணி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


1) மாருதி சுசுகி


இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி,  அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான ஒரு மாத விற்பனையை பதிவு செய்துள்ளது. அதன்படி, இந்நிறுவனம் ஜனவரி மாதத்தில் மொத்தமாக 1,99,364 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 214 யூனிட்கள் உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளன. SUV பிரிவின் விற்பனை ஓரளவு உயர்ந்துள்ளது. அதன்படி, Brezza, Ertiga, Fronx, Grand Vitara, S-cross மற்றும் XL6 ஆகியவை இணைந்து மொத்தம் 62,038 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதேநேரம் Alto, S-Presso, Baleno, Celerio, Dzire, Ignis, Swift, Tour S மற்றும் WagonR ஆகியவற்றின் மொத்த விற்பனை சுமார் 92,382 யூனிட்களாக உள்ளன.


2)டாடா மோட்டார்ஸ்:


ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, உள்ளூரில் மட்டும் 84,276 யூனிட்கள் உட்பட மொத்தமாக 86,125 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 79,681 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் டாடா நிறுவனத்தின் கார் விற்பனை 6 சதவிகிதம் உயர்ந்துள்ளது.


3) மஹிந்திரா நிறுவனம்:


மஹிந்திரா நிறுவனம் ஜனவரி மாதத்தில் மொத்தமாக 73,944 யூனிட்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 32,915 எஸ்யுவி வாகனங்களை விற்பனை செய்த மஹிந்திரா நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 31 சதவிகிதம் வளர்ச்சி கண்டு  43,068 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 


4) ஹூண்டாய் மோட்டார்ஸ்


கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் உள்நாட்டில் 50 ஆயிரத்து106 யூனிட்களை விற்பனை செய்த ஹுண்டாய் நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 57,115 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 14 சதவிகித நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மொத்த விற்பனையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 62,276 யூனிட்களை பதிவு செய்த ஹுண்டாய் நிறுவனம், கடந்த ஜனவரியில் 67,615 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.


5) டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்


டொயோட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனையில் 92 சதவிகித வளர்ச்சி கண்டு, 24,609 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12,835 யூனிட்கள் மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI