ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எல்லையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ராணுவ கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட் எனப்படும் சிஎஸ்டி (CSD) மூலம் வாகனங்களை விற்பனை செய்ய அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக, இனி ராணுவ கேண்டீன்கள் வழியாக பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க முடியும். இந்த புதிய விற்பனைத் திட்டம் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, சிஎஸ்டி தளத்தின் மூலம் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியின் குறைப்பு மட்டுமின்றி, நிறுவனத்தின் தரப்பிலிருந்து சிறப்புத் தள்ளுபடியும் கூடுதலாகக் கிடைக்கும்.
சிஎஸ்டி தளத்தில் ஏத்தர் விற்பனை
இந்தியாவிலேயே சிஎஸ்டி தளத்தில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பட்டியலிட்டுள்ள முதல் இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் மாறியுள்ளது. ஏத்தரின் 450 பெர்ஃபார்மன்ஸ் சீரிஸ் மற்றும் ரிஸ்டா குடும்ப ஸ்கூட்டர் வரிசையிலிருந்து மொத்தம் 8 வேரியண்ட்கள் சிஎஸ்டி மூலம் கிடைக்கும். இருப்பினும், நிறுவனத்தின் அதிக செயல்திறன் கொண்ட ஏத்தர் 450 அபக்ஸ் மாடல் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
யாரெல்லாம் வாங்கலாம்?
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிஎஸ்டி வலைப்பின்னல் மூலம், தகுதியான ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். தற்போதைய திட்டத்தால் பொதுவான வாடிக்கையாளர்களை விட, ராணுவக் குடும்பத்தினர் ஸ்கூட்டர்களை வாங்கும்போது பல்வேறு வரிச் சலுகைகளைப் பெற முடியும்.
இதன் மிக முக்கிய அம்சமாக 50 சதவீத ஜிஎஸ்டி விலக்கு கிடைக்கிறது. உதாரணமாக, சாதாரணமாக 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் வாகனங்களுக்கு சிஎஸ்டி மூலம் 14% ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும். இதனுடன் ஏத்தர் நிறுவனத்தின் தள்ளுபடியும் சேர்வதால், ஒட்டுமொத்த கொள்முதல் செலவு பொதுவான சில்லறை விலையை விடக் கணிசமாகக் குறையும்.
இதுவரை பொதுவான சில்லறை விற்பனை நெட்வொர்க்கில் மட்டுமே கவனம் செலுத்திய ஏத்தர் நிறுவனத்திற்கு, ராணுவ கேண்டீன்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடைவது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, தற்போதைய ஸ்கூட்டர்களை விடக் குறைவான விலையில் ஏத்தர் கோனார்க் என்ற ஒரு புதிய எலக்ட்ரிக் மாடலை 2026 ஆகஸ்ட் 29 அன்று நடைபெறும் ஏத்தரின் வருடாந்திர கம்யூனிட்டி தினத்தில் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இது மொத்தம் 6 வேரியண்ட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் SR1, SR2, SR3, SR4 ஆகியவை சாதாரண வேரியண்ட்களாகவும், QR2, QR3 ஆகியவை அதிக சிறப்பம்சங்கள் கொண்ட வடிவமைப்புடனும் இருக்கும்.
ஏத்தர் கோனார்க் நேரடிப் போட்டி
வாடிக்கையாளர்களின் மாறுபட்ட பட்ஜெட் விலை மற்றும் வெவ்வேறு ரேஞ்ச் தேவைகளை ஒரே ஸ்கூட்டர் மூலம் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வேரியண்ட்கள் அமையும். அறிமுகத்திற்குப் பிறகு, இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஹீரோ விடா விஎக்ஸ்2 ஆகிய பிரபலமான மாடல்களுக்கு ஏத்தர் கோனார்க் நேரடிப் போட்டியாக அமையும் என்று ஆட்டோமொபைல் துறையில் எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI