பிரபல எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஏத்தர், தங்களது இருச்சக்கர வாகனத்தின் அளவில் மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மாற்றங்கள் செய்யும் ஏத்தர்:


மின்சார வாகனங்கள் இந்திய சாலைகளை அலங்கரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் வாடிக்கையாளர்களும் மின்சார வாகனங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இருச்சக்கர வாகன ஓட்டிகள் தற்போது கணிசமான அளவில் மின்சார வாகனங்களை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர். எலக்ட்ரிக் வாகனங்கள் பற்றி எரிவது, தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தாலும் இந்த வாகனங்களுக்கான மவுசு குறையவில்லை. இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகன சந்தையில் தடம் பதித்து விற்பனையில் கலக்கிவரும் ஏத்தர் நிறுவனம் அதன் இருச்சக்கர வாகனங்களின் அளவை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.


பேட்டரியில் மாற்றம்:


இந்த நிறுவனம் ஏத்தர் 450  ப்ளஸ் மற்றும் 450 எக்ஸ் என்ற இரண்டு மாடல்களை தற்போது விற்பனை செய்துவருகிறது. ஓலா நிறுவனமும் தனது எஸ்1 மாடல் வாகனத்தை எலக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறக்கியுள்ள நிலையில், அதற்கு போட்டியாக தனது வாகனத்தில் புதிய அப்டேட்டுகளை செய்யத் தொடங்கியிருக்கிறது ஏத்தர் நிறுவனம். அதன் ஒருபகுதியாக தற்போது இருக்கும் 450 எக்ஸ் மாடலில் 2.9 கிலோவாட் பேட்டரிக்கு பதிலாக, 3.66 கிலோவாட் பேட்டரியை பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அளவானது முந்தைய அளவை விட 26 சதவீதம் அதிகமாகும். 450 ப்ளஸ் மாடலில் 3.3கிலோவாட் மற்றும் 5.4 கிலோ வாட் மோட்டார் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதை 3.1 கிலோ வாட் மற்றும் 5.8 கிலோவாட் என்ற அளவில் மாற்றியமைக்க உள்ளது. அதேபோல 450எக்ஸ் மாடலில் 3.3 கிலோவாட் மற்றும் 6 கிலோவாட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் அதை 3.1 கிலோவாட் மற்றும் 6.4 கிலோவாட் என்ற அளவில் மாற்றியமைக்க உள்ளது. இதனால் இந்த வாகனத்தின் உச்ச சக்தி சற்று உயர்ந்தாலும், நாமினல் சக்தி கொஞ்சம் குறையும் என்று கூறப்படுகிறது.




இந்த அப்டேட்டால் வாகனத்தின் உச்ச வேகம்- அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் 450 ப்ளஸில் உச்சபட்ச வேகம்116 கிலோமீட்டராகவும், 450 எக்ஸில் 100 கிலோ மீட்டராகவும் உள்ளது. இந்த புதிய அப்டேட்டால் 450 ப்ளஸில் 146 கிலோ மீட்டரும், 450 எக்ஸில் 108 கிலோ மீட்டராகவும் வேகம் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



வாகனத்தின் அளவில் மாற்றம்:


அதே போல வாகனத்தின் அளவிலும் மாற்றங்கள் செய்யப்படுவதாகத் தெரிகிறது. தற்போது வாகனத்தின் வீல் பேஸ் அளவை விட 9 மில்லி மீட்டர் அதிகரிக்கப்பட்டு, மொத்தமாக 1,296 மில்லி மீட்டராக இருக்குமாறு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, வாகனத்தின் உயரம் 11 மில்லி மீட்டர் உயர்த்தப்பட்டு மொத்த உயரம் 1,114 ஆக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீளத்தில் 25 மில்லி மீட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 1,837 மில்லிமீட்டர்கள் நீளம் என்ற அளவில் இந்த வாகனங்களின் அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.




விலை உயர வாய்ப்பு:


2018ம் ஆண்டிலேயே ஏத்தர் வாகனங்கள் விற்பனைக்கு வந்துவிட்டாலும், தற்போதைய எலக்ட்ரிக் சந்தையில் இந்த வாகனங்களுக்குப் போட்டியாக ஓலாவின் எஸ்1 மற்றும் டிவிஎஸ்-ன் ஐக்யூப் வாகனங்கள் இருந்துவருகின்றன. அதிக விலை கொண்ட மாடலாக ஏத்தரின் 450 எக்ஸ் இருந்துவரும் நிலையில், ஓலாவின் எஸ்1 குறைந்த விலை காரணமாக விற்பனையில் கடும் சவாலாக இருந்து வருகிறது. ஏத்தரின் விலை சற்று அதிகம் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், மின்சார வாகனங்கள் இயங்குவது மொத்தமும் பேட்டரியை சார்ந்துதான் இருக்கிறது என்பதாலும், ஏத்தர் பேட்டரியில் தான் முக்கியமான மாற்றத்தை செய்திருக்கிறது என்பதாலும் இதன் விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI