16 லட்சம் கணக்குகள் முடக்கம்:


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களால் பயன்படுத்தப்படும் ஆப்பாக வாட்ஸ் அப்  இருந்து வருகிறது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் வாட்ஸ் அப்பை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாட்ஸ் அப்  வாயிலாக தவறான செய்திகளை அனுப்புவது, ஸ்பாம் செய்வது, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அந்நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களது கணக்கை முடக்கவோ அல்லது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற காரணங்களுக்காக வாட்சப் தன்னிச்சையாகவே ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 16.66 லட்சம் வாட்சப் கணக்குகளை இந்தியாவில் முடக்கியுள்ளது. அதில் 122 கணக்குகள் பயனாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது.



தவறாக முடக்கப்படும் கணக்குகள்:


வாட்ஸ் அப்பின் விதிமுறைகளை மீறும் கணக்குகள் தன்னிச்சையாக முடக்கப்படுவது தொடர்ந்தாலும், சில கணக்குகள் தவறுதலாக முடக்கப்படுவது நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு செய்தியைப் பகிரும்போது அந்த செய்தியின் உண்மைத் தன்மையே அதுதான் எனும்போது, அது வாட்சப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கணக்கில் கொள்ளப்பட்டு முடக்கப்பட்டுவிடுகிறது. இதனை சரிசெய்யும் விதமாக,மேல்முறையீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்.


புதிய வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ் அப் :


உங்களது வாட்ஸ் அப்  கணக்கு முடக்கப்பட்டால், அதை ஓப்பன் செய்யும்போது “This account is not allowed to use WhatsApp” என்ற செய்தியைக் காட்டும். உங்களது கணக்கு தவறுதலாக முடக்கப்பட்டுள்ளதாகக் கருதினால் இது தொடர்பாக வாட்சப் நிறுவனத்திற்கு மெயில் மூலமாகவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ வலியுறுத்தலாம். இதற்காக, 'Request a Review' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் வைத்தால் வாட்ஸ் அப்  நிறுவனம் தடைசெய்யப்பட்ட கணக்கை ஆய்வு செய்து அந்த கணக்கு தவறுதலாக முடக்கப்பட்டதா அல்லது விதிமுறைகளை மீறியதால் தடைசெய்யப்பட்டதா என்ற முடிவுக்கு வரும். அதன் அடிப்படையில் முடக்கப்பட்ட வாட்ஸ் அப்  கணக்கு திரும்ப கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.




ImageSource: WABetaInfo


இந்த வசதி எப்போது வெளியாகும்?


வாட்ஸ் அப்  பீட்ட இன்ஃபோவின் தகவல்படி இந்த வசதியானது தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பீட்டா பயன்பாட்டாளர்களின் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் இந்த வசதி அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும். ஆனால், இந்த வசதி எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.