இந்த ஜூலை மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி, ஹூண்டாய், ஆடி உள்ளிட்ட 5 நிறுவனங்களின் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
நடப்பு ஜூலை மாதத்தில் இரண்டு எஸ்யூவி ரக கார்கள், ஒரு செடான் ரக கார் மற்றும் எலக்ட்ரிக் கார் ஆகியவை இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன. எந்தெந்த நிறுவனங்களின் கார்கள் விற்பனைக்கு வருகின்றன என்பது பற்றியும், அவற்றின் விலை மற்றும் விற்பனைக்கு வரும் நாள் பற்றியும் இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ஆடி ஏ8 எல்:
கார் சந்தைக்கு இந்த மாதம் விற்பனைக்கு வரும் ப்ரீமியம் ரக கார்களில் ஆடியின் ஏ8 எல் காரும் ஒன்று. இந்த காரானது மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமான சிறப்பம்சம் முன்பக்கம் பெரிய க்ரில் புதிய பேட்டர்னுடன் வந்திருப்பது தான். இக்காரின் இண்டீரியர் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த காரானது 340 ஹெச்பி திறன் மற்றும் மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 3லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட ஏ8 எல் மாடல் காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் இது ஜூலை 12ம் தேதி விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த காரின் விலை சுமார் 1.5 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹூண்டாய் டக்ஸன்:
கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் ஹூண்டாய் டக்ஸன் காரானது, முற்றிலும் மாறுபட்ட வடிவில் தற்போது புதிய தலைமுறை ஹூண்டாய் டக்ஸன் என்று வெளியாகிறது. ஜூலை 13ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் இக்காரனது, ஹூண்டாய் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்காரின் இண்டீரியரும் ஸ்போர்ட்ஸ் டிசைனிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி ரக காருடன் அடாஸ்(ADAS) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய டக்ஸன் காரானது 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் என்று இரண்டு வேரியண்ட்டுகளில் வருகிறது. இதன் உயர்ந்த மாடல்களில் ஏடபிள்யூடி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை பற்றிய தகவல்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்ரோயன் சி3:
சிட்ரோயன் சி3 கார் மூலமாக இந்தியாவின் மிகப்பெரிய கார் சந்தைக்குள் தடம் பதிக்கிறது சிட்ரோயன் கார் நிறுவனம். சி3 கார் இந்தியாவில் அறிமுகமாவதையடுத்து இந்தியாவின் 19 நகரங்களில் அதன் 20 விற்பனையகங்களை அமைக்கிறது. சி3 காரானது 82 ஹெச்பி திறனுடன், 1.2 லிட்டர் பெட்ரோ எஞ்சின், மற்றும் 110 ஹெச்பி திறன், 1.2 லிட்டர் பெட்ரோல் டர்போ எஞ்சினுடன் வருகிறது. இந்த காரினை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்துக்கொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலைகள் ஜூலை 20ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
மாருதி சுசுகி க்ரிடா ரிவல்:
மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா இணைந்து தயாரித்துள்ள டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரின் மாருதி சுசுகி பிரிவு கார், வரும் ஜூலை 20ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த காராணது சுசுகி க்ளோபல் சி தளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது இரண்டு 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இலகு ரக ஹைப்ரிட் எஞ்சின் மற்றும் உயர் ரக ஹைப்ரிட் எஞ்சின் என்று இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. மாருதி சுசுகியின் மிட் சைஸ் எஸ்யூவி காரின் விலை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்றும் இக்கார்களை நெக்ஸா டீலர்களிடம் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வோல்வோ எக்ஸ்சி40 ரீச்சார்ஜ்:
இந்த மாதம் வெளியாகும் 5 கார்களில் வோல்வோவின் கார் மட்டும் எலக்ட்ரிக் காராகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை வரும் ஜூலை 26ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த எஸ்யூவி காரானது 408 ஹெச்பி திறன் மற்றும் 660 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார்களுக்கு சக்தியை கொடுப்பதற்காக 78 கிலோ வாட் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒருமுறை ரீச்சார்ஜ் செய்துவிட்டால் 418 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. வோல்வோ எக்ஸி40 ரீச்சார்ஜ் காரின் விலை 60 முதல் 65 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI