Mhindra XUV700 Facelift: மஹிந்த்ரா நிறுவனம் தனது XUV700 காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் செய்யப்போகும் 5 முக்கிய அப்டேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மஹிந்த்ரா XUV700 ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்த்ரா நிறுவனம் தனது XUV700 கார் மாடலை கடந்த 2021ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் நிறுத்தப்பட்ட XUV500 கார் மாடலுக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டது. மாடர்னான ஸ்டலிங், அம்சங்கள் நிறைந்த கேபின், உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றால் உடனடியாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த XUV700, 4 ஆண்டுகள் ஆன பிறகும் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்த கார் முதல்முறையாக ஒரு பெரும் அப்டேட்டை பெற உள்ளது. மேம்படுத்தப்பட்ட எடிஷனானது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதில் இடம்பெற உள்ள டாப் 5 அப்டேட்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
XUV700 - XEV 9e அடிப்படையிலான டிசைன்
சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களானது, XUV700 காரின் டிசைனானது மஹிந்த்ராவின் புதிய தலைமுறை XEV 9e போர்ன் - எலெக்ட்ரிக் எஸ்யுவியின் தாக்கத்தை பெற்றுள்ளதை உணர்த்துகிறது. முன்புற பகுதியானது மிகப்பெரிய மாற்றத்தை பெற உள்ளது. அதன்படி, புதியதாக உருவாக்கப்பட்ட க்ரில், புதிய ட்வின் பாட் எல்இடி முகப்பு விளக்குகள், புதிய சிக்னேட்சர் எல்இடி டிஆர்எல்எஸ் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட கீழ் பகுதி ஆகியவை அடங்கும். பின்புறம் மற்றும் பக்கவாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏதும் இன்றி அப்படியே தொடரும் என கூறப்படுகிறது.
XUV700 - மூன்று ஸ்க்ரீன் செட்-அப்
கேபினில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய மாற்றம் என்பது XEV 9e கார் மாடலில் இருப்பதை போன்ற 3 ஸ்க்ரீன் செட்-அப் ஆகும். ஒவ்வொன்றும் 12.3 இன்ச் அளவை கொண்டு, வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே அணுகலை கொண்டிருக்கும். கூடுதலாக டேஷ்போர்டும் மறுவடிவமைப்பு செய்யப்படக்கூடும். புதிய மஹிந்த்ரா XUV700 கார் மாடலானது ஹர்மன் அல்லது கர்டோன் சவுண்ட் சிஸ்டத்தை பெற வாய்ப்புள்ளது. தற்போதைய எடிஷனில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் அப்படியே புதிய எடிஷனிலும் தொடரப்பட உள்ளது.
XUV700 - இன்ஜினில் மாற்றம்?
புதிய XUV700 எடிஷனில் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதன்படி, இந்த எஸ்யுவி ஆனது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் அதே 2.0 லிட்டர் டர்போ mStallion பெட்ரோல் மற்றும் 2.0லிட்டர் mHawk டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளன. அவை முறையே 200PS & 380Nm மற்றும் 155PS & 360Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களுக்கும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
XUV700 - சற்றே விலையேற்றம்
கூடுதலாக இணைக்கப்படும் அம்சங்கள் மற்றும் தோற்றத்தில் ஏற்படுத்தப்படும் மேம்படுத்தல்களை கருத்தில் கொண்டால், XUV700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் சற்றே விலை உயர்வை எதிர்கொள்ளும். தற்போதைய எடிஷனானது 14.49 லட்சத்தில் தொடங்கி 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ளது. இதிலிருந்து குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரையில் விலை உயர்த்தப்படலாம்.
XUV700 - வெளியீடு, போட்டியாளர்கள்
மஹிந்த்ராவின் மேம்படுத்தப்பட்ட XUV700 கார் மாடலானது 2026ம் ஆண்டின் முதல் பாதியிலேயே சந்தைப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ப்ரீமியம் 7 சீட்டர் எஸ்யுவி செக்மெண்டில் இடம்பெறும் இந்த காரானது, டாடா சஃபாரி, ஹுண்டாய் அல்கசார் மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI