இந்திய சந்தையில் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த எஸ்யுவி கார் எனும் பெருமையை, ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி (2022 Jeep Grand Cherokee) பெற்றுள்ளது. இந்த கார் மாடல் உலக சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், இந்தியாவில் தற்போது தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜீப் நிறுவன எஸ்யுவி மாடல்களில் 5ம் தலைமுறை காராக உருவாகியுள்ள கிராண்ட் செரோக்கி, இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள உதிரிபாகங்க்ளை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. மேலும்,  வலதுபுறமாக ஓட்டுனர் இருக்கையை கொண்ட கிராண்ட் செரோக்கி கார் அறிமுகப்படுத்தப்படுவதும் இந்தியாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.






கிராண்ட் செரோக்கியின் விலை:


பிரமாண்டமான உருவ அமைப்பை கொண்டுள்ள கிராண்ட் செரோக்கி, மென்மையான சாலைகளில் மட்டுமின்றி, கரடுமுரடான பகுதிகளிலும் அதிக ஆற்றலுடன் செயல்படும் திறன் கொண்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கிராண்ட் செரோக்கி காரின் விலை இந்திய சந்தையில் ரூ.77.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து ரூ.50,000 கட்டணத்துடன் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதியிலிருந்து கார் டெலிவெரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காரின் சிறப்பு அம்சங்கள்:


பி.எம்.டபிஎள்யு X5, ஆடி Q7, மெர்சிடஸ் பென்ஸ் GL, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மற்றும் வால்வோ XC90 ஆகிய கார்களுக்கு போட்டியாக, இந்திய சந்தையில் கிராண்ட் செரோக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ள கிராண்ட் செரோக்கி கார், 270 குதிரைத்திறன் மற்றும் அதிகபட்சமாக 400Nm இழுவிசையையும் கொண்டுள்ளது. 


ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், எட்டு ஏர்பேக், டிரௌசி டிரைவர் டிடெக்‌ஷன், 360 டிகிரி சரவுண்ட் வியூ, 3-பாயிண்ட் சீட் பெல்ட், அனைத்து பயணிகளுக்கும் ஆக்குபண்ட் டிடெக்‌ஷன் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.  காரின் வெளிப்புறம் எல்இடி முன்விளக்குகள், ஃபேம்டு 7 ஸ்லாட் கிரில், டூயல் எல்இடி டிஆர்எல், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா,  ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.






பாதுகாப்பு அம்சங்கள்:


உள்புறத்தில் 10.1 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டோன் இண்டீரியர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பவர்டு முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த பிரிவு வாகனங்களில் முதல் முறையாக 10.25 இன்ச் பேசன்ஜர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு 110 மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செக்யுரிட்டி அம்சங்களும் ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி காரில் வழங்கப்பட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI