சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குபிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என தற்போது வழக்கு பதிந்துள்ளனர். மேலும், சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிரியா மரணம் தொடர்பான வழக்கை மனித உரிமைகள் ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் விசாரணைக்கு எடுத்தார்.
யார் இந்த பிரியா..? கால் அகற்றப்பட்டது ஏன்..?
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 17 வயதான பிரியா.ஏழையான சூழ்நிலையில் வளர்ந்த இவர். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கால்பந்து போட்டிகளில் ஆர்வம் அதிகம் கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பெரிய பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் பிரியாவின் வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாக தெரிவித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு, உணர்ச்சியற்றாக இருந்துள்ளது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக பிரியா அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதை கண்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது கால் அகற்றியுள்ளனர்.
மேலும், கால்பந்து வீராங்கனை பிரியாவின் கால் அகற்றப்பட முக்கிய காரணமாக இருந்த எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட சிகிச்சை பெற்றுவந்த பிரியாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கடந்த 15ம் தேதி காலை உயிரிழந்தார்.
முதலமைச்சர் நிதியுதவி:
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக நிவாரண தொகையாக ரூ.10 லட்சத்திற் கான காசோலையை வழங்கினார்.
மாணவியின் சகோதரருக்கு தேசிய நல வாழ்வு குழுமத்தில் 'டேட்டா என்ட்டரி ஆப்ரேட்டர்’ பணிக்கான ஆணையையும், அவர்கள் குடியிருக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கவுதமபுரம் திட்டப்பகுதியில் குடியிருப்பிற்கான ஆணையையும் வழங்கினார்.