Tesla Car: அமெரிக்காவில் டெஸ்லா கார் ஒன்று திடீரென வெடித்து சிதறிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


வெடித்து சிதறிய டெஸ்லா கார்:


அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான, ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், “ஓட்டல் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் தீப்பிடித்து எரிவதற்கு முன், பட்டாசுகள் வெடிப்பதைப் போலவே சிறிய வெடிப்புகள்” காணப்பட்டன. 



எலான் மஸ்க் விளக்கம்:


சம்பவம் தொடர்பான தகவல் வெளியானதும் டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் வெளியிட்ட பதிவில், “முழு டெஸ்லா மூத்த குழுவும் கார் வெடித்து சிதறியது தொடர்பாக விசாரித்து வருகிறது. நாங்கள் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை” என குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு பதிவில், “வாடகைக்கு எடுக்கப்பட்ட சைபர்ட்ரக்கின் படுக்கையில் எடுத்துச் செல்லப்பட்ட பெரிய பட்டாசுகள் மற்றும்/அல்லது வெடிகுண்டு காரணமாக வெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து வாகனத்துடன் தொடர்பில்லாதது" என்று எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில் விளக்கமளித்தார்.






அடுத்தடுத்து சம்பவங்கள்:


டெஸ்லா கார் வெடித்து ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கமளிக்கப்பட்டது மற்றும் தேவையான எந்தவொரு கூட்டாட்சி உதவியையும் வழங்குமாறு தனது குழுவிற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. லாஸ் வேகாஸில் உள்ள அதிகாரிகள் "எங்கள் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்" என்று விளக்கமளித்தனர். இதனிடையே, நியூ ஆர்லியன்ஸில் கார்-ராம்பிங் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.






முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க்:


இதனிடையே, கடந்த நவம்பர் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்பை ஆதரித்த மஸ்க், அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கான கமிஷன் தலைவராக குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தை மதிப்பின்படி, உலக கார் உற்பத்தி நிறுவனங்களில், டெஸ்லா தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெஸ்லா கார்கள் விரைவில் இந்திய சந்தைக்கும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI