அதிமுகவின் ஒற்றைத் தன்மை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் பல்வேறு அதிமுக தொண்டர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இன்றைய தினம் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் சூசகமாக கணிப்பினை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



அதில், நாளை ( 21.06.2022 ) காலை 11.10 மணி முதல் 11.40 மணி 


வரை சிம்ம லக்னம், லக்கனாதிபதி லாப ஸ்தானத்தில் லக்கனத்திற்கு சனிபகவான் ஏழில் திக் பலம் அடைந்து மூலத்திரிகோண ஆட்சி பெறுகிறார். லக்கினத்திற்கு எட்டில் 9-க்குடையவர் 4 க்கு உடையவர். எட்டில் ஒரு கிரகம் பலமாக இருப்பது. மிகுந்த நன்மை தரக்கூடிய நேரம்.,


சூரியன் - தலைமை பொறுப்பை தாங்கும் சக்தி படைக்கக் கூடிய கிரகம்


சனி - பொதுமக்கள் , கட்சி ரீதியில் பார்த்தால் அடிப்படை உறுப்பினர்கள்


சனி திக்பலம் கொன்ற லக்கனத்தில் ஒரு தலைவர் பொறுப்பை ஏற்றார் நாளடைவில் அந்த தலைவருக்கு ஏகமனதாக தொண்டர்கள் ஆதரவு தருவார்கள்


சனி வக்ரம் , வக்ர கிரகம் பார்வை பெற்ற லக்கனத்தில் ஒரு செயல் தொடங்கும் போது அந்தச் செயலை விடாப்பிடியாக பிடிவாதமாக முடிக்கக் கூடிய திறன் ஏற்படும் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கல் நடக்காது.


நாளை 60 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு கட்சியின் சார்பாக, அவருக்கு சாதகமாக தீர்மானம் இந்த நேரத்தில் போடப்பட்டால் உறுதியாக அந்த தீர்மானத்தின் பலனாக சம்பந்தப்பட்டவருக்கு அனேக நற்பலன்கள் கிடைக்கும்.


இதுவரை புகழ்பெற்ற அந்தக் கட்சியில் 


பொன்மனச் செம்மல்,


அம்மா என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் என்ற வரிசையில் 


அந்த இடத்தை அடுத்ததாக உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று பதிவிட்டுள்ளார்.


ஜோதிடரின் பதிவு நாளையை குறித்தாலும் ஈபிஎஸ் தேர்வு என்பது பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. அதன்படி பொதுக்குழு 23ம் தேதிதான் நடைபெறும் என்பதால் ஜோதிடரின் கணிப்பு எப்படி சரியாகும் என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்



இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் சட்டமன்றத் தேர்தல் முடிவைப் பற்றி தனது கணிப்பில் யூ டியூப் மூலமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என்றும், அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார். அதே வீடியோவில் 2022 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியின் பதவிக்கு சிறு தடங்கல் ஏற்படும். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தவிர்க்கமுடியாத தலைவராக இருப்பார் என்றும் கூறியிருந்தார். இதனை வைத்துப் பார்க்கும் போது நாளை எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று சுகமாக பதிவிட்டுள்ளார்.