அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே..! ’என்ன கனவு இது; இதுக்கு என்ன அர்த்தம்?’ என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதா?  கனவுகள் ஆழ் மனதின் எண்ணங்களின் வெளிபாடு. அதில் உள்ள அர்த்தங்கள் என்னவென்று கண்டறிய வேண்டும் என்பவர்களுக்கு இங்கே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 


பெரும்பாலும் நம் கனவில் நமக்குத் தெரிந்த முகங்களுடன் நபர்கள் வருவார்கள். சிலருக்கு இறந்தவர்கள் கனவில் வருவார்கள்; பலருக்கு தற்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் கனவில் வருவார்கள். தெரிந்தவர்கள் தான் கனவில் வரவேண்டும் என்பது இல்லை தெரியாதவர்கள் கூட கனவில் வரலாம்.  அப்படியும் பலருக்கு  வந்திருக்கிறார்கள்.  நீங்கள் நேரில் சந்திக்காத அல்லது கேள்விப்பட்ட  நபர்கள் கூட கனவில் தோன்றலாம்.  குறிப்பாக தொலைக்காட்சி வாயிலாக பார்க்கும் சில முகங்கள் கூட கனவில் அடிக்கடி வருவது உண்டு.  இப்படி நம்முடைய மனதின் எண்ண ஓட்டங்களை பொறுத்து நாம் தூங்கும் சமயத்தில் ஆழ்மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டு அது நமக்கு கனவாக  ஒரு படம் போல தோன்றுகிறது.


உங்களை யாரோ துரத்துவது போல கனவு வருகிறதா?


கனவு நடக்கும் இடத்தை தேர்வு செய்வது எது ?


ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டின் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு கனவு வருகிறது. ஆனால் அந்தக் கனவில் நீங்கள் வேறு எங்கோ ஒரு வீட்டில் பாழடைந்த ஒரு பங்களாவில் இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த இடத்திற்கு நீங்கள் எப்படி சென்றீர்கள்?  அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை. தூங்கிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால் அங்கே இருப்பது போல எப்படி உங்களுக்கு தோன்றியது?  இதற்கான விடையை இன்னும் அறிவியல் அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


கனவிற்கு பலன்கள் இருக்கிறது என்று நம்மில்  பெரும்பாலானோர் நமக்கு வரும் கனவுகள் நிஜத்திலும் அதை சார்ந்து தான் நிகழ்வுகள் இருக்கும் என்று நம்புகிறோம்.  அந்த நம்பிக்கை பொய்யும் அல்ல; உண்மையையும் அல்ல. அப்படி என்றால் நம்மை சுற்றி இருக்கும் நிகழ்வுகளைப் பற்றி நாம் சிந்தித்துக் கொண்டே இருக்கும் போது அந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக கனவு தோன்றுகிறது.  அந்த கனவில் வருவது போல  சம்பவங்களும் நமக்கு நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம் இது நம் கையில் அல்ல. கனவு நடக்கும் இடத்தை நிச்சயமாக நாம் தேர்வு செய்ய முடியாது.  நம்முடைய ஆழ்மனம் தான் கனவு எந்த இடத்தில் நடக்கும்,  அதில் யார் வரலாம் என்பதை தேர்வு செய்யும்.


கனவில் யாரோ துரத்துவதற்கு என்ன பலன்?


கனவில் உங்களை யாரோ துரத்துவது போல,  வந்தால் நிச்சயமாக நீங்கள் ஏதோ ஒரு பதற்றத்தில் இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.  குறிப்பாக ஜோதிட ரீதியாக சில விளக்கங்களை  நாம் பார்த்தோமானால்  பயத்தின் மிகுதியால்  நாம் இருக்கின்ற சமயத்தில் நம்மை யாரோ துரத்துவது போலவும் அல்லது விலங்குகள்  நம்மை துரத்துவது போலவும் சில சமயங்களில் கனவு வரும்.  அதற்குக் காரணம் சில சூழ்நிலைகளை மனிதர்கள் சரியாக கையாளாமல்  அதை அதன் போக்கிலேயே விட்டு விடுவதால்  நாளை அந்த செயல் என்னவாக முடியுமோ என்ற பதற்றத்தில் இருக்கின்ற பொழுது ஆழ்மனது இதுபோன்ற துரத்தல் சம்பவங்களை நமக்கு படம் போட்டு காட்டுகிறது.


உங்களை மற்றவர் துரத்தினால் நீங்கள் பலவீனமானவராக கருதப்படுகிறீர்கள்.  உங்களுக்கு ஒரு வேலை யார் மீதாவது பயம் இருக்கலாம்.  இல்லையெனில் எது மீது வேண்டுமென்றாலும் பயம் இருக்கலாம். அந்த பயம் தான் உங்களை துரத்திக் கொண்டிருக்கிறது. தைரியமாக நின்று எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலையில் உங்களுக்கு மன ஆற்றல் இருந்தால் நிச்சயமாக துரத்தும் கனவை நீங்கள் நின்று திருப்பித் தாக்க முற்படுவீர்கள்.  அப்படி ஒருவேளை கனவில் துரத்தும்  நபரை நீங்கள் மீண்டும் தாக்க முற்பட்டால் நிச்சயமாக மனரீதியாக வலிமையாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.


சந்திராஷ்டமம்:


சந்திரன் பெரும்பாலும்  மனதின் காரகனாக அறியப்படுகிறார். சந்திரன் எண்ண ஓட்டங்களைகுறிக்கும்.  சாதாரணமாக சந்திராஷ்டமம் சமயங்களிலேயே உங்களுடைய மனது ஒரு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும்.  வேறு சில அசம்பாவிதங்களை பற்றி நீங்கள் நினைக்கலாம். உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் பயணிக்கும் போது உங்களுடைய மனம் தவறான காரியங்களை சிந்தித்து ஒரு குழப்பத்திலேயே உங்களை வைத்திருக்கும். 


நீங்கள் பேசுகின்ற  சொற்கள் எதிர்மறையான சிந்தனையை உருவாக்கலாம்.  எடுத்துக்காட்டு சந்திராஷ்டம சமயங்களில் நீங்கள் நண்பரோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது உங்களுடைய நண்பருக்கு எரிச்சல் ஏற்படலாம் காரணம் நீங்கள் தெளிவாகத்தான் பேசிக் கொண்டிருப்பீர்கள்,  ஆனால் நீங்கள் பேசுகின்ற காரியங்கள் எதிரில் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு  வித்தியாசமான அதிர்வலையை உண்டாக்கும்.  அதனால் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே  வாக்குவாதம் எழலாம். அந்த வாக்குவாதம் சண்டையாக மாறும்  பிறகு அது சமாதானமும் ஆகலாம் அல்லது சமாதானம் ஆகாமலும் போகலாம். கவனமாக இருக்க வேண்டும்.


 சந்திராஷ்டம சமயங்களில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் ஆழ்மனதில் துக்கத்தோடு இருப்பவர்களுக்கு அவர்களின் எண்ணங்களை சரிசெய்ய முடியாது. அவஸ்தைப்படும் சமயங்களில் இது போன்ற கெட்ட கனவுகளோ அல்லது உங்களை யாரோ துரத்துவது போல கனவுகளும் வரலாம். அந்த சமயத்தில் நீங்கள்  துரத்துகின்ற நபரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள். யாராவது உங்களை வந்து அந்த துரத்தும் நபரிடமிருந்து காப்பாற்றும்படி கனவில் இருந்தால், நிஜ வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவிகள் இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்பதுதான் உண்மை.  கனவுகளைப் பற்றி கவலைப்படாமல் நிஜ வாழ்க்கையில் ஓடுங்கள்… ஓடுங்கள்…ஓடிக்கொண்டே இருங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.