"கார்த்திகை மாதம் மாலையணிந்து... நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து... சுவாமியே ஐயப்பா"... என்ற பாடல் வரிகள் ஒலிக்காத நகரங்களே இல்லை என்று சொல்லலாம்... ஐயப்பனின் அருளை பெற உகந்த மாதம் இந்த கார்த்திகை... கார்த்திகை மாதத்தில் மாலையணியும் பக்த்தர்கள் அவருக்காக விரதமிருந்து ஐயப்பனை மனதார வேண்டி கேட்கும் வரங்களை பெரும் அற்புத மாதம் தான் இந்த கார்த்திகை மாதம்...
2024 நவம்பர்-16 சனிக்கிழமை கார்த்திகை மாதம் பிறக்கிறது. கார்த்திகை மாதத்தின் முதல் நாள் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தில் பிறப்பது கூடுதல் சிறப்பு. முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக வரும் கார்த்திகை நட்சத்திரம், கார்த்திகை மாதத்தின் முதல் நாளிலேயே வருவதால்... இந்த நாளில் முருகனை மனதார வணங்குவதும், முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பது மிக உயர்ந்த பலனை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை...
கார்த்திகை பெண்களின் மடியில் மகனாக வளர்ந்த அழகன் நம் முருகன்... கந்தன் என்பார், கடம்பன் என்பார், சிலர் கார்த்திகேயன் என்பார், அருளோடு சண்முகம் என்பார், பாசத்தோடு சுப்பிரமணியன் என்பார், ’ஓடி வா’வடிவேலா என்பார்... ஆசையோடு ஆறுமுகன் என்பார்.. இப்படி உரிமையோடு பல பெயர்களில் அழைக்கப்படும் முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு உகந்த மாதம் தான் இந்த கார்த்திகை மாதம்...
கார்த்திகை மாதத்தில் ஒருவர் விரதம் இருந்தால் வருடத்தின் முக்கியமான தெய்வீக நாட்களில் விரதம் இருந்ததற்கு சமம். குறிப்பாக முருகனுக்கு ஆட்சி வீடாக இருப்பது ’மேஷமும்’, ’விருச்சகமும்’அதாவது கிரகங்களில் முருகன் என்று சொல்லப்படக்கூடிய செவ்வாயின் ஆட்சி வீடுகள்... சூரியன் விருச்சிகத்தில்... முருகனின் ஆட்சி பீடத்தில், தன் ஒளியை வீசி மக்களுக்கு அருள்புரியும் மகத்தான மாதம் இந்த கார்த்திகை...
என்றாவது ஒருநாள் உங்கள் ’கடைக்கண்’ என் மீது பட்டு விடாதா? என்று ஏக்கத்தோடு முருகனிடம் மன்றாடி வேண்டி... வருடம் எல்லாம் விரத்தமிருந்து வரத்திற்காக காத்திருப்பவர்களே இதோ உங்களுக்காக வந்துவிட்டது வரங்களை அள்ளித் தரும் ”கார்த்திகை மாதம்”...
உலகையாளும் உலகளந்தன் நம் கோவிந்தன், பெருமாளுக்கு கார்த்திகை ஏகாதசியில் விரதமிருந்து மனதார வழிபடும் பக்தர்களுக்கு செவிசாய்க்கு முகுந்தன் நம் கோவிந்தன்... அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரத்தை வேண்டும் பக்தர்களுக்கு கொடுக்கும் மாதம் இந்த கார்த்திகை மாதம்...
வாருங்கள் அன்பார்ந்த abp நாடு வாசகர்களே கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் என்ன? விரதம் முறைகள் என்ன? தெய்வங்களை வழிபடும் முறைகள் என்ன என்று பார்க்கலாம்...
அடிமுடி காண முடியாத அண்ணாமலையாரை தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் வானத்தை நோக்கியும், பூமியை நோக்கியும் பயணத்தை மேற்கொண்டனர்.. ஆனால் ஜோதி பிழம்பாக காட்சி அளித்து எந்த காலத்திலும் என்னுடைய அடியையும், முடியையும் உங்களால் காண முடியாது என்று ’ஜோதி ரூபனாக’, விஸ்வரூபியாக சிவபெருமான் காட்சி அளித்த திருத்தலம் தான் திருவண்ணாமலை. ’அடி,முடி’ கண்டே தீருவோம் என்று சிவபெருமானின் சொரூபத்தைக் காண விரைந்த பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒருசேர அழைத்து.. தனது ஜோதி ரூபத்தை காண்பித்த கார்த்திகை பௌர்ணமி மிக சிறப்பு வாய்ந்தது ... அந்த நன்னாளில் நீங்கள் மந்திரங்களை படிக்கலாம், வேதம் தெரிந்தவர்கள் வேதங்களை படித்து, பாடல்களை பாடி மனதார சிவனையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் பூஜை செய்து வந்தால் பிறவி பலன் அடையலாம் என்று கூறுகிறது சாஸ்திரம்...
கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் இஷ்ட தெய்வத்திற்கு நெய் விளக்கேற்றி... கண்ணை மூடி மனதாரப் பிரார்த்தித்து ... தெய்வங்களின் பாதங்களில் யார் சரணாகதி அடைகிறார்களோ.. அவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்று கூறுகின்றன புரணங்கள்...
அதே போல் கடுமையான தவத்தை மேற்கொண்ட அன்னை பராசக்தி கார்த்திகை மாதத்தில் வரும், கார்த்திகை நட்சத்திரத்தில் ’பௌர்ணமி தினத்தில்’ சிவபெருமானின் இடப்பக்கத்தை அடைந்து சிவ சக்தியாய் நமக்கு காட்சி அளித்தார்... கார்த்திகை பௌர்ணமியில் விரதம் இருந்து பெண்கள் மாங்கல்யத்திற்காகவும்... ஆண்கள் நல்ல வரன்கள் அமையும், பெண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையவும் வேண்டி, சிவ சக்தியை பிரார்த்தித்தால், மாங்கல்ய பலம் நீடிக்கும், கணவன் மனைவி பிரிவு ஏற்படாது, பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள், ’கோர்ட்- கேஸ்’ வம்பு-வழக்குகளில் சிக்கி இருக்கும் திருமணம் ஆன ஆண், பெண் இருவருக்கும் பிளவு ஏற்படாத வண்ணம் சிவன்-சக்தி இருவரது அருள் கிடைக்கும்...
கார்த்திகை மாதத்தில் வரும் ’துவாதசி’ திதி அன்று மகாவிஷ்ணுவை துளசி தேவி திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்... இதனால் துளசியால் மகாவிஷ்ணுவை அர்ச்சனை செய்து அவருக்கு துளசி மாலை சார்த்தி மனதார வழிபட்டு வந்தால்... எம்பெருமான் மகாவிஷ்ணுவின் பாதத்தை அடையலாம்... லக்ஷ்மி கடாக்ஷம் அடைவதற்கும், மகாலட்சுமியின் அருளை பெற துளசி மாலை அணிந்து நாராயணனை சரணாகதி அடைய வேண்டும்...
கார்த்திகையில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருக்கலாம் அல்லது அரை வயிற்றுடன் அருகில் இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவின் ஆலயத்துக்கு சென்று மனதார வழிபடலாம்.. அப்படி செய்யும் பட்சத்தில் வீட்டில் இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும் சுப காரியங்கள் நடந்திடும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வார் நடைபெறவே, நடைபெறாது என்று நினைத்த காரியங்கள் கூட எளிதாக முடியும் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்...
சனிக்கிழமை மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமையும் மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது... ஞாயிறு அதிகாலையில் எழுந்து புனித நீராடி பகவான் ஸ்ரீ விஷ்ணுவை பிரார்த்தனை செய்ய வேண்டும்... உங்கள் வீட்டு அருகில் புண்ணிய நதிகள் இருந்தால் அதிலும் நீராடலாம், அப்படி நீராடினால் உங்களைப் பிடித்து இருக்கக்கூடிய ’கல் உண்ட பாவமும்’, பிரம்மஹத்தி தோஷங்களும் , மற்றவருக்கு இழைத்த தீங்கினால் பெற்ற சாபமும் , உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம்... அதேபோல கார்த்திகை ஞாயிறு அன்று நவகிரக மூர்த்திகள் விரதம் இருந்து வேண்டிய வரத்தை பெற்றனர்... அதேபோல கார்த்திகை மாதத்தில் ஞாயிறு அன்று விரதத்தை தொடங்கி 9 வாரங்கள் விரதம் இருந்து, முறையாக நவ கிரகங்களை வழிபட்டால் ஒன்பது கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்களும் விளங்கும், முன்னோர்களின் சாபமும் மறையும்...
கார்த்திகை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது குறிப்பாக வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் விளக்கை ஏற்றி வைத்தால்... மகாலட்சுமி வீட்டில் வந்து வாசம் செய்வதோடு உங்களைப் பிடித்து இருக்கக்கூடிய அனைத்து தரித்திரங்களும் விலகும், தீயவை அழிந்து நன்மை பெருகும்... வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றுவது தனிமனித தோஷம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது இருந்த சாபங்களும் விலகும் என்பது ஐதீகம்...
கார்த்திகை மாதத்தில் வரும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்... அன்று நீங்கள் ஒரு பொழுது விரதம் இருக்கலாம் அல்லது இல்லாதவர்களுக்கு உணவு வழங்கலாம்... நீங்கள் விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் தடைபடுவது, திருமண நிகழ்வுகள் தள்ளிப் போவது, வீடு கட்டுதலில் ஏற்படும் தடைகள் போன்றவை விலகி, நன்மை ஏற்படும்... தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர் வியாழக்கிழமைகளில் மதியம் இல்லாதவர்களுக்கு உணவளியுங்கள் நன்மை பெருங்கள்...
கார்த்திகையில் திங்கள் விரதம், உமாமகேஸ்வர விரதம், ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, வளர்பிறை துவாதசி விரதம், ஏகாதசி விரதம் என பல முக்கியமான விரத நாட்கள் உள்ளன. முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை மாதத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்று விளக்கை ஏற்றினால் உங்கள் வாழ்வும் ஒளிரும் வாழ்த்துக்கள் வணக்கம்...