நினைத்தாலே  முக்தி  தரும்  ஸ்தலமாகவும்,  பஞ்சபூத  ஸ்தலங்களில்  அக்னி ஸ்தலமாகவும் கருதப்படும் திருவண்ணாமலை  அண்ணாமலையார் திருக்கோவிலில்  அக்னி  நட்சத்திர  தோஷ  நிவர்த்தி  யாக  பூஜை அக்னி நட்சத்திர நிறைவையொட்டி 108 கலசாபிஷேகம் நடைப்பெற்றது. பக்தர்கள் இன்றி சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்ட கலசாபிஷேகம் நடைபெற்றது.



இந்த  ஆண்டிற்கான  அக்னி  நட்சத்திரம்  கடந்த சித்திரை மாதம் 21 ஆம்தேதி  தொடங்கியது.  இந்த அக்னி  நட்சத்திரத்தில்  அக்னியின்  உச்சத்தினை  குறைத்து  நாட்டில்  மழை  பொழிய திருவண்ணாமலை  அண்ணாமலையார்  கோவிலில்  அண்ணாமலையார்  தாரா பாத்திரத்தில் பன்னீர், பச்சைகற்பூரம், வெட்டிவேர்  மற்றும்  பல்வேறு  வகையான மூலிகைகளால்  அந்த  தாரா  பாத்திரத்தில்  நீர் நிரப்பப்பட்டு  சிவலிங்கத்தின்  தலை உச்சியில்  தாரா  பாத்திரமானது  கட்டப்பட்டு  அதிலிருந்து  சொட்டு  சொட்டாக சிவலிங்கத்தின்  மீது  மூலிகை  நீர்  படும்படி  செய்யப்பட்டு  வந்தநிலையில்  அக்னி நட்சத்திரம் வருகின்ற வைகாசி 14  ஆம்  தேதி  நிறைவு  பெறுவதினையொட்டி, இன்று  அண்ணாமலையார்  சந்நதி  அருகே  புனிதநீர்  கொண்டு 108  சிறப்பு   கலசங்கள் அமைக்கப்பட்டு  யாக  சாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 


 



 


அதனை  தொடர்ந்து  நிறைவு  நாளான  நாளை மறுதினம்  உச்சி  கால  வேலையில்  நான்காம் கால யாகம்  முடிந்து, சிவாச்சாரியார்கள்  வேத  மந்திரங்கள்  முழங்க யாகசாலையிலிருந்து  புனித  நீரானது  திருக்கோவிலினுள்  மங்கள  வாத்தியம் முழுங்க  ஊர்வலமாக  கொண்டு  செல்லப்பட்டு  பின்னர்  அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் 108 கலசங்களிலிருந்து  புனித  நீரினை ஊற்றி  அக்னி  தோஷ  நிவர்த்தி  பூஜை நிறைவு பெறும். தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கத்தால், அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலையார் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்துகொண்டு சகல ஜீவராசிகளும் இன்புற்று வாழ அக்னி தோஷ நிவர்த்தி யாகபூஜையினை செய்தனர். 


அண்ணாமலையார் கோவிலின்  ரமேஷ் குருக்களிடம் கேட்டபொழுது, ‛‛உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் பல மக்கள் பதிக்கப்பட்டு இறந்தனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை அதிக அளவில் பரவி வருகிறது.மற்றும் கொரோனாவால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்து கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும்.


 



கொரோனா தொற்றால் பாதித்த நபர்கள் கூடிய சீக்கிரம் குணமாகவும், நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை நீங்கள் வீட்டில் இருந்த படி அருணச்சலம் ,அருணச்சலம் என்று ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என கூட்டுபிராத்தனை செய்து எல்லாம் மல்ல அண்ணாமலையார் அருளால் கொரோனா எனும் நோயை ஒழித்து கட்ட மக்கள் சுபிட்சமாக வாழ இந்த கலச அபிஷேகமானது நடைப்பெருகிறது,’’ என தெரிவித்தார். 


தமிழகத்தில் சமீபமாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பல்வேறு இடங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.